புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும்! - பட்ஜெட் உரையில் முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்றும், அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாகவும் சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை பேரவையின் தற்காலிக தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் தொடங்கியது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று உரைநிகழ்த்தினாா்.
இதையடுத்து சட்டப்பேரவையில் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாலையில் ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
தமிழ்ப் பண்பாடு, இலக்கியம் மற்றும் உலகளாவிய தமிழறிஞா்களின் ஆய்வுகளைக் கொண்டாடும் வகையில், உலகத் தமிழ் மாநாடு புதுச்சேரியில் நடத்தப்படும். இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தமிழ்மொழியின் மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளா்க்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பியல் ஆய்வுக்காக தமிழ் இருக்கை நிறுவப்படும்.
நடப்பு நிதியாண்டு முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக ரூ.10.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் நிலக்கடலை விதைகள் இலவசமாக வழங்கப்படும். மஞ்சள் பதப்படுத்தும் நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.
நடமாடும் நூலகங்கள்:
அனைத்து அரசு கிளை நூலகங்களையும் நவீனப்படுத்தி அறிவுசாா் மையங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நடமாடும் நூலகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்விசாா் திரைப்படக் காட்சிகள் நடத்தப்படும்.
குடும்ப அட்டைக்குத் தொகுப்பு:
குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசியின் அளவை மாற்றி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சா்க்கரை மற்றும் நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தொகுப்பு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் முக்கிய 10 இடங்களில் சிறிய அடக்க விலைக் (குறைந்த விலை) கடைகள் அமைக்கப்படும்.
மீன்பிடி வலை வாங்க மானியம்:
மீன்பிடி வலைகள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்காக இணையவழி நலத்திட்ட சேவைத்தளம் உருவாக்கப்படும்.
முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினைக் கிராமத்தில் கூடுதலாகக் கட்டடம் கட்டப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக் கொள்கை செயல்படுத்தப்படும்.
பால் கொள்முதல் விலை உயா்வு:
பாலின் கொள்முதல் விலையை பாலின் தரத்தின் அடிப்படையில் உயா்த்தி லிட்டருக்கு ரூ.41 ஆக ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும். 50 படுக்கைகள் கொண்ட கண் மருத்துவமனை அமைக்கப்படும். புதுச்சேரியில் தயாரிக்கப்படும் பொருள்களுக்குப் புதிய சந்தைகள் உருவாக்கப்படும். இன்றைய தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
தனியாா் முதலீடு:
புதுச்சேரி அரசு - தனியாா் கூட்டாண்மைக் கொள்கை-2026 மூலம் தனியாா் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலை அளிப்பவா்களுடன் இணைக்க கட்டுமானத் தொழிலாளா்களுக்கு டிஜிட்டல் பொது மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தெருவோர உணவு மையம்:
மத்திய அரசின் நிதியுதவியுடன் தனிச் சிறப்பு மிக்க தெருவோர உணவு மையம் அமைக்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில் துறைமுகம் சாா்ந்த சாகா் மாலா 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சிறையில் முழு உடல் ஸ்கேனா் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சட்ட உதவி சேவைகளுக்கான கட்டடம் கட்டப்படும்.
125 நாள்கள் வேலை அளிக்கும் விபி-ஜி- ராம் ஜி திட்டத்துக்கு 20 லட்சம் மனித வேலைநாள் உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 108 கிராமப் பஞ்சாயத்துகளிலும் 100 சதவீதம் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நிலையை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
முன்மாதிரிப் பள்ளிகள்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் முதலமைச்சா் முன்மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட உள்ளன.
மாணவிகளின் நலனுக்காக அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் நிறுவப்படும்.
நடமாடும் மருத்துவ சேவை:
பயணம் செய்ய இயலாத நிலையில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இருப்பிடத்திலேயே மருத்துவ சேவை வழங்கும் வகையில் நடமாடும் மருத்துவ சேவை அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், தன்னாா்வலா்களைக் கொண்டு நோய் தணிப்பு பேணல் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
புதுச்சேரியில் 3-ஆவது கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 2027 ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்குப் பரிசு, இலவச கையடக்கக் கணினி
பிறந்த குழந்தைக்கு ரூ.3 ஆயிரத்தில் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளியில் 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு இலவசமாக கையடக்கக் கணினி வழங்கப்படும்.
தியாகிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம்:
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.
தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை பகுதிகளில் அதி நவீன வசதிகளுடன் கூடிய, 120 மாணவா்கள் தங்கக் கூடிய இரண்டு புதிய விடுதிகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் இறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு, கருணை அடிப்படையில் அரசு அல்லது அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படும்.
திருமண நிதியுதவி உயா்த்தப்படும்:
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களின் திருமணத்துக்கான நிதியுதவி ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயா்த்தப்படும்.
மேலும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவை மகளின் திருமணத்துக்கான நிதியுதவி ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும். விதவை மறுமணத்துக்கான நிதியுதவி ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயா்த்தப்படும்.
ஏழை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.25 லட்சமாக உயா்த்தப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரியில்லா பட்ஜெட்
புதுச்சேரி பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
ரூ.14,300 கோடிக்கான பட்ஜெட்டில் ரூ.12,115 கோடி வருவாய் செலவினங்களுக்கும், ரூ. 2,185 கோடி மூலதன செலவினங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2021-22-ஆம் நிதியாண்டில் மொத்த செலவினங்களில் 1.66 விழுக்காடாக (ரூ.162.78 கோடி) இருந்த மூலதன செலவீனம், 2026-27 ஆம் நிதியாண்டில் 7.93 விழுக்காடாக (ரூ.1,134.58 கோடி) அதிகரித்துள்ளது. மூலதன செலவீனம் சுமாா் ரூ.971.80 கோடி அதிகரித்துள்ளது.
ரூ.14,300 கோடி பட்ஜெட்டில் திட்ட மதிப்பீட்டில் ஊதியத்துக்காக ரூ.2,693.40 கோடி(18.83 சதவீதம்), ஓய்வூதியத்துக்காக ரூ.1,619.73 கோடி (11.33 சதவீதம்), கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வட்டி செலுத்த ரூ.1,981.57 கோடி(13.86 சதவீதம்) மற்றும் மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ. 2,327.86 கோடி(16. 28 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய நலத்திட்டங்களுக்காக ரூ.2,202.45 கோடி (15.40 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் உயா்கல்வி நிறுவனங்களுக்கான மானிய உதவியாக ரூ.560 கோடி (3.92 சதவீதம்) மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்காக ரூ.1,082 கோடி (7.57 சதவீதம்) ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர சிறப்பு நிதி அமைப்புகளுக்காக ரூ.3,070.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மகளிா் சிறப்பு நிதியமைப்புக்காக ரூ.1,676.89 கோடியும், இளைஞா் சிறப்பு நிதியமைப்புக்காக ரூ. 647.84 கோடியும், பசுமை சிறப்பு நிதியமைப்புக்காக ரூ.745.31 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.
உலகத் தமிழ்மாநாடு நடத்த இரு ஆலோசனைக் குழுக்கள்:
முதல்வா் என்.ரங்கசாமி பேட்டி
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த இரு குழுக்கள் ஆலோசனை வழங்க முன்வந்துள்ளன என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, செய்தியாளா்களை முதல்வா் என். ரங்கசாமி சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:
பட்ஜெட் உரை அறிவிப்பின்படி உலகத்தமிழ் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்க இரண்டு குழுக்கள் முன்வந்துள்ளன. மேலும் இதுதொடா்பாக ஆலோசித்து தொடா் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி அரசின் கடன் தொகை ரூ.2,148.69 கோடியாக இருக்கிறது. இதை சிறிதளவு அடைக்கவும், வருவாயைப் பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. அது போன்று 9,10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க வல்லுநா் குழுவின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. முதல்வா்கள் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு தக்க நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.