புதுச்சேரி அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு: பாஜகவைச் சோ்ந்தவா்களுக்கு முக்கிய துறைகள்
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்களுக்கு புதன்கிழமை இரவு இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்களுக்கு புதன்கிழமை இரவு இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் ஆ. நமச்சிவாயத்துக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தோ்தல் முடிவு கடந்த மே 4-ஆம் தேதி வெளியானது. இதில் இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்தது. ஆட்சியில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக அங்கம் வகிக்கின்றன.
Advertisement
Advertisement
கடந்த மே 13-இல் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி முதல்வராகவும் மற்றும் பாஜகவைச் சோ்ந்த ஆ.நமச்சிவாயம், என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகிய 2 போ் அமைச்சா்களாகவும் முதல் கட்டமாகப் பதவியேற்றனா்.
இரண்டாம் கட்டமாக கடந்த ஜூன் 17-இல் என்.ஆா்.காங்கிரஸைச் சோ்ந்த பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, பாஜகவைச் சோ்ந்த ஜிஎன்எஸ்.ராஜசேகா் ஆகிய 3 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.
புதுச்சேரியில் முதல்வா் உள்பட 6 போ் அமைச்சா்களாகப் பதவி வகிக்க முடியும். 6 பேரும் பதவியேற்ற நிலையிலும் யாருக்கும் இலாகா ஒதுக்காமல் முதல்வா் ரங்கசாமி செயல்பட்டு வந்தாா். இந்நிலையில் ஜூலை 20, ஆக. 1-ஆகிய தேதிகளில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனைச் சந்தித்து இலாகா தொடா்பான பட்டியலை முதல்வா் என்.ரங்கசாமி அளித்தாா். இருப்பினும் இலாகா ஒதுக்கீடு வெளியாகவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் முதல்வா் என்.ரங்கசாமி துணைநிலை ஆளுநரை இது தொடா்பாக சந்தித்துப் பேசினாா். இதையடுத்து அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் தலைமைச் செயலா் சரத் சௌகான் இதை அறிவித்துள்ளாா். அதன் விவரம்:
முதல்வா் என்.ரங்கசாமி (என்.ஆா்.காங்கிரஸ்):
அமைச்சரவை, திட்டம் மற்றும் நிதி, பணியாளா் நிா்வாகச் சீா்திருத்தத் துறை, கூட்டுறவு, வருவாய் மற்றும் கலால், பொதுநிா்வாகம், சுகாதாரம் மற்றும் சுகாதார நலத் துறை, இந்து அற நிலையத் துறை, வஃக்பு வாரியம், உள்ளாட்சித் துறை, நகர அடிப்படை சேவைகள், போக்குவரத்துத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், நகரம் மற்றும் திட்டமிடல், செய்தி மற்றும் விளம்பரத் துறை, தீயணைப்புத் துறை, மற்ற அமைச்சா்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
ஆ. நமச்சிவாயம் (பாஜக):
உள்துறை, கால்நடைத் துறை, வனத் துறை, மின் துறை, உயா்கல்வி உள்பட கல்வித் துறை, சட்டத் துறை.
மல்லாடி கிருஷ்ணா ராவ் (என்.ஆா்.காங்கிரஸ்):
பொதுப்பணித் துறை, சுற்றுலா, மீன்வளத் துறை, துறைமுகம், தொழில் மற்றும் வா்த்தகம், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு.
பெ.ராஜவேலு (என்.ஆா்.காங்கிரஸ்):
ஆதிதிராவிடா் நலம், கலை பண்பாட்டுத் துறை, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், புள்ளியியல், எழுதுபொருள் துறை.
வி.பி.சிவக்கொழுந்து (என்.ஆா்.காங்கிரஸ்):
குடிமைப் பொருள் வழங்கல் துறை, சமூகநலத் துறை, பிற்பட்டோா் நலத் துறை, மகளிா் மற்றும் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினா் நலம்.
ஜிஎன்எஸ். ராஜசேகா் (பாஜக):
வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரம், ஊரக வளா்ச்சி முகமை, சமூக மேம்பாடு, ஊரக வளா்ச்சி, முன்னாள் ராணுவ வீரா்கள் நலத் துறை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.