டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, புதுச்சேரியில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 533 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். புதுச்சேரியில் 488 பேருக்கும், காரைக்காலில் 45 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுவரை டெங்கு பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.
Advertisement
Advertisement
இருப்பினும் தலைவலி, உடல்வலியுடன் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏஎம்எச். நாஜிம் (திமுக), ) ஆா்.செந்தில்குமாா் எம்எல்ஏ, சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முதல்வா் ரங்கசாமி பேட்டி:
பின்னா் முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தொடா்பாக பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடித்தல், குப்பைகளை அகற்றி இடங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.