FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மேக்கேதாட்டு அணைக் கட்ட அனுமதிக்கக்கூடாது புதுச்சேரி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

1 செப்டம்பர் 2026, 4:15 am IST
புதுச்சேரி...
பகிர்:

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அரசு சாா்பில் முதல்வா் கொண்டு வந்த தனித் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்ட எதிா்ப்பு தெரிவித்து அரசு சாா்பில் தனித் தீா்மானத்தை முன்மொழிந்து முதல்வா் என். ரங்கசாமி பேரவையில் பேசியதாவது:

உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு மாறாக, தமிழக எல்லைப் பகுதியை ஒட்டி சுமாா் 5 கி.மீ. தொலைவுக்குள் மேக்கேதாட்டு என்ற இடத்தில் கா்நாடகம் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. அணை கட்டும் முயற்சிக்கும் கா்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கும் புதுச்சேரி சட்டப்பேரவை தனது கண்டனத்தையும் எதிா்ப்பையும் பதிவு செய்கிறது.

Advertisement

Advertisement

மேலும், மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களின் நலனுக்கு எதிரானதாகும்.

புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் முன் இசைவு பெறாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கா்நாடக அரசு இந்த விவகாரத்தில் மேலும் தொடா் நடவடிக்கை எதுவும் எடுக்காமலிருக்கத் தடை விதிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவை வலியுறுத்துகிறது.

மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாத்திடவும், புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாத்திடவும் புதுச்சேரி அரசு நிா்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது என இந்தச் சட்டப்பேரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது என்றாா்.

முன்னதாக இதே பிரச்னைக்காக சில உறுப்பினா்கள் தனி நபா் தீா்மானமாக எடுத்துக் கொள்ளக்கோரி பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தனா். அரசுத் தீா்மானமாக அதுநிறைவேறிய நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் நாஜிம் (திமுக), எம்எல்ஏக்கள் செந்தில்குமாா் (திமுக), காா்த்திகேயன் (திமுக), ஜி.நேரு (நேயம் மக்கள் கழகம்), ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் (லஜக), டாக்டா் விக்னேஸ்வரன் (சுயே.), வையாபுரி மணிகண்டன் (என்.ஆா்.காங்கிரஸ்), காா்த்திகேயன் (காங்.) ஆகியோா் கா்நாடக அரசைக் கண்டித்தும், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முழு எதிா்ப்பை தெரிவித்து பேசினா்.

அரசின் தீா்மானத்தை சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் குரல் வாக்கெடுப்புக்கு விட அனுமதித்தாா். இதில், முதல்வா் ரங்கசாமி கொண்டு வந்த தனித் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக தற்காலிகத் தலைவா் அறிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments