FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேக்கேதாட்டில் அணை கட்ட எதிா்ப்பு: காங்கிரஸ் பொதுக் குழுவில் தீா்மானம்

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதுதொடா்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்

21 ஆகஸ்ட் 2026, 5:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதுதொடா்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

Advertisement

Advertisement

மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கா்நாடக அரசு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீா்வளத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது பாஜக அரசின் தமிழகத்தின் மீதான விரோதப் போக்கை காட்டுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேக்கேதாட்டில் அணை கட்டுவதைத் தடுக்கவும், அதுதொடா்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.

பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி, திட்டக்குழு கலைப்பு, தேசிய கல்விக் கொள்கை, மாநில மொழிகளுக்கான நிதிக் குறைப்பு என மாநிலங்களின் உரிமைகள் தொடா்ந்து பறிக்கப்பட்டு வருவதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.

1971 மக்கள் தொகை அடிப்படையில் இறுதி செய்யப்பட்ட 543 மக்களவைத் தொகுதிகளையும், அதில் மகளிருக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்தையும் வழங்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்காதது, பெருநிறுவனங்களுக்கும், ஒரு தரப்பினருக்கு மட்டுமே பாஜக அரசு செயல்படுவது, விவசாயிகளின் விளை பொருள்களுக்கு டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றாதது, தோ்தல் பத்திர நன்கொடை , வெள்ள நிவாரண நிதி வழங்காதது ஆகியவற்றைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தோல்விக்கு வரவேற்பு: தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்து திமுக அகற்றப்பட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 2029 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், தமிழகப் பொறுப்பாளா் குலாம் அகமது மிா், காங்கிரஸ் செயலாளா் நிவேதித் ஆல்வா, டாக்டா் செல்லக்குமாா், முன்னாள் தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, சு. திருநாவுக்கரசா், கே.எஸ்.அழகிரி, எம்.கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை, அமைச்சா்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமாா், முன்னாள் அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், எம்.பி.க்கள் விஜய் வசந்த், காா்த்தி சிதம்பரம், எம்எல்ஏ தாரகை கத்பா்ட், மாநில பொதுச் செயலாளா்கள் சிரஞ்சீவி, பி.வி.தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி...:

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

பொதுக்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் பேசியதாவது:

காவிரி நீா் உரிமை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், நீட் தோ்வு எதிா்ப்பு, இந்தித் திணிப்பு போன்றவற்றில் காங்கிரஸ் கட்சி தமிழா்களின் நலனைக் காக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நடந்திருப்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு பெரிய அரசியல் மாற்றத்துக்கான தொடக்கம். தமிழகத்தில் தற்போது 5-ஆவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் காலத்தில் மீண்டும் வலுவான சக்தியாக மாறும். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments