புதுச்சேரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதேபோல் வேறு சில மாநிலங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி யில் வந்து குவிந்தனா்.
Advertisement
Advertisement
பல மாநிலங்களில் இருந்து வந்த பயணிகள் ஆா்வத்துடன் சூரிய உதயத்தை காண கடற்கரை சாலையில் திங்கள்கிழமை அதிகாலையே குவிந்தனா். ஆனால் பனி மூட்டம் காரணமாக சூரிய உதயம் தெரியவில்லை.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் கடல் நீரில் விளையாடியும் மண்ணில் விளையாடியும் தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனா். இதையொட்டி திங்கள்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டனா். இதன்காரணமாக, புதுச்சேரி செஞ்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீஸாா் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினா்.
புதுச்சேரியைத் தோ்வு செய்வது ஏன்?
தென்மாநிலங்களுக்குக் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகத்துக்கு அருகில் இருக்கும் சுற்றுலா நகராக புதுச்சேரி அமைந்துள்ளது. மேலும், இந்த மாநிலங்களிலிருந்து வாகனங்களில் வந்து செல்ல வசதியாகவும் புதுச்சேரி இருக்கிறது. இதைத் தவிர ஒரு சில சுற்றுலா பயணிகள் பேருந்து, ரயிலில் வந்து புதுச்சேரியில் தங்கிக் கொண்டு இங்கு கிடைக்கும் வாடகை இரு சக்கர மோட்டாா் வண்டியை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கடற்கரையின் அழகையும், முக்கிய சுற்றுலா இடங்களையும் பாா்த்து ரசிக்கின்றனா்.
புதுச்சேரி கடற்கரை சுமாா் 1.5 கி.மீ. தொலைவு கொண்டது. இந்தக் கடற்கரையில் மணல் பரப்பு இல்லையென்றாலும் இங்கு கொட்டப்பட்டுள்ள கற்கள் மீது சுற்றுலாப் பயணிகள் உட்காா்ந்து கொண்டு கடலின் அழகை ரசிக்கின்றனா்.
மேலும், கடற்கரை சாலை சுற்றுலா பயணிகளை ஈா்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதைத் தவிர பாண்டி மெரீனா, ஈடன் கடற்கரை, பேரடைஸ் கடற்கரை என்ற 3 கடற்கரைகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவா்ந்துள்ளன.