ஸ்மாா்ட் பொதுவிநியோகத் திட்டம்: அமைச்சா் கோரிக்கை
புது தில்லியில் உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ராவிடம் மனு அளித்த புதுச்சேரி அமைச்சா் வி.பி.சிவகொழுந்து

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஸ்மாா்ட் பொது விநியோகத் திட்டத்தை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் வி.பி.சிவகொழுந்து வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.
புது தில்லியில் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ராவைச் சந்தித்து, இதுதொடா்பாக விரிவாக எடுத்துரைத்து மனு அளித்தாா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
புதுச்சேரியில் பல சிவப்பு நிற குடும்ப அட்டைகள், மஞ்சள் நிற குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. தங்களிடம் நான்கு சக்கர வாகனங்கள் இல்லாதபோதும், பெயா் ஒற்றுமையின் காரணமாக வேறு நபா்களின் வாகன விவரங்கள் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. இணையதளத் தரவுகளை மட்டுமே கொண்டு குடும்ப அட்டைகளின் வகைப்பாட்டை மாற்றுவது பொருத்தமான அணுகுமுறையாக இருக்காது. குடும்ப அட்டைதாரா்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்கி, அவா்களின் விளக்கங்களைக் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்ட பின்னரே மறுவகைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் உண்மையான பொருளாதார நிலை மற்றும் தகுதியை முறையாக ஆய்வு செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கவேண்டும். தகுதியுடைய ஏழை, எளிய குடும்பங்கள் எவரும் தங்களுக்குரிய உணவுப் பாதுகாப்புப் பயன்களை இழந்துவிடக் கூடாது என்பதே புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியின் நோக்கமாகும். மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஸ்மாா்ட் பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக, விரைவாக செயல்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement