இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்
விழுப்புரத்தில் நேரு இளையோர் மையம் சார்பில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரத்தில் நேரு இளையோர் மையம் சார்பில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட நேரு இளையோர் மையம், சேர்ந்தனூர் நேரு இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை சார்பில் இளைஞர் மன்றங்களுக்கான ஒன்றிய அளவிலான கைப்பந்து, கபடி, குண்டு எறிதல், தடகளம் ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கண்டமங்கலம், விக்கிரவாண்டி ஆகிய 3 ஒன்றியங்களுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 15 வயது முதல் 29 வயதுக்கு உள்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குழு அளவிலான கைப்பந்து போட்டியில் வாக்கூர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் இளைஞர் மன்றமும், கபடி போட்டியில் கொத்தமங்கலம் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மன்றமும் வெற்றி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி தலைமை வகித்தார்.
சேர்ந்தனூர் நேரு இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் பஞ்சநாதன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ் வாழ்த்துரை வழங்கினார். அயன்வேலூர் உடல்கல்வி ஆசிரியர் வசந்த்குமார், விழுப்புரம் கைப்பந்து பயிற்றுநர் சீத்தாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்டமங்கலம் தேசிய இளையோர் சேவை தொண்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.