தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது: 20 பவுன் நகைகள், 25 செல்லிடப்பேசிகள் பறிமுதல்
விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்
விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள், 25 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் நகரம், புறவழிச் சாலைப் பகுதி, விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாகனங்களில் செல்வோரிடம் வழிப்பறி மற்றும் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
இதைத் தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதன்படி, விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் சத்தியசீலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், வாக்கூரைச் சேர்ந்த பழைய குற்றவாளியான கலியநாதன் மகன் சிவபாலன் (34) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரைத் தேடி வந்தனர்.
ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை தனிப்படை போலீஸார் ஜானகிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த சிவபாலனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 செல்லிடப்பேசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர் மீது விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட சிவபாலனுக்கு உதவியாக இருந்த இளந்தளிர் என்பவரை தேடி வருகிறோம். இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களிலும், இரவு நேரங்களிலும் அதிகமாக நடைபெறுகின்றன. குற்றச் சம்பவங்களைத் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
திருட்டுச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடியிருப்போர் சங்கங்கள் அமைத்து கண்காணிக்கவும் முன்வர வேண்டும் என்றார்.
விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் சத்தியசீலன், தனிப் பிரிவு காவலர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.