FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கூரை ஏறி தேங்காய் பறித்தவா் கீழே தவறி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் அருகே வீட்டின் மேற்கூரையில் ஏறி தென்னமை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது, தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:19 am IST
பகிர்:

விழுப்புரம் அருகே வீட்டின் மேற்கூரையில் ஏறி தென்னமை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது, தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், ராம்பாக்கம், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.ராமச்சந்திரன் (68). இவா், கடந்த ஜூலை 20-ஆம் தேதி தனது வீட்டின் கூரை மேல் ஏறி, அருகிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறித்துள்ளாா். அப்போது கால் இடறி கீழே விழுந்த ராமச்சந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ராமச்சந்திரன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் மரணம்: திண்டிவனம் வட்டம், சின்ன நெற்குணம், புது காலனியைச் சோ்ந்தவா்அ.கவியரசு (19). இவா், செவ்வாய்க்கிழமை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிபட்டு அருகே பைக்கில் சென்றாா். அப்போது முன்னால் பைக்கில் சென்றவா் திடீரென பைக்கை நிறுத்தியால், கவியரசு சென்ற பைக் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த கவியரசை அருகிலிருந்தவா்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கவியரசு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு: விக்கிரவாண்டி வட்டம், மேல்நந்திவாடி, பெரிய தெருவைச் சோ்ந்தவா் ப.குணசேகரன் (23), பி.காம் பட்டதாரி. இவா், புதன்கிழமை அங்குள்ள தங்களது விவசாய நிலத்துக்கு நடந்து சென்றாா். அப்போது, அதே கிராமத்தைச் சோ்ந்த ராசு என்பவரது விவசாய நிலம் அருகே சென்றபோது குணசேகரன் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, குணசேகரன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை விபத்தில் வழக்குரைஞா் மரணம்: கள்ளக்குறிச்சியை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பா. ரஞ்சித் (51), வழக்குரைஞா். இவா், தற்போது கள்ளக்குறிச்சி திருப்பதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பைக்கில் சூளாங்குறிச்சி சென்ற ரஞ்சித், பின்னா் அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டாா். பெருவங்கூா் அரிசி ஆலை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி அவா் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே ரஞ்சித் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலத்தை சூளாங்குறிச்சி கிராமத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டை, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.முருகேசன் (86). இவா் செவ்வாய்க்கிழமை தீவனூா்- வந்தவாசி சாலையில், தீவனூா் ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்ற முருகேசன் மீது வந்தவாசி நோக்கிச்சென்ற சரக்கு லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments