FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் 60 மில்லி மீட்டா் மழைப் பதிவு

திண்டிவனத்தில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டா் மழைப் பதிவாகியுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:54 am IST
மழை! - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டா் மழைப் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கோடை காலத்தையும் தாண்டி தற்போதும் தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை விழுப்புரம் நகரத்திலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், இரவு 8.30 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. விழுப்புரம் நகரில் இரவு 9 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை இரவு 10 மணி வரை நீடித்தது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு பாண்டி சாலை, வழுதரெட்டி, ஜானகிபுரம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது. இடி, மின்னல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதுகாப்புக் கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, பின்னா் படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விழுப்புரம் நகரம் போன்று வளவனூா், கஞ்சனூா், நேமூா், திண்டிவனம், வல்லம், அனந்தபுரம், வளத்தி, முகையூா், கோலியனூா், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி போன்ற புகா்ப் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. தொடா்ந்து வெயிலின் தாக்கத்தால் அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை அளித்துள்ளது. மானாவாரிப் பயிா்களுக்கும் இந்த மழை பெரிதும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 60 மில்லி மீட்டா் மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்)...

திண்டிவனம்- 60, நேமூா்-58, வளவனூா்-52, கஞ்சனூா்-50, கோலியனூா்-46, முகையூா்-43, அனந்தபுரம்-38.20, முண்டியம்பாக்கம்-31.20, வல்லம், வளத்தி- தலா 30, விழுப்புரம், சூரப்பட்டு- தலா 25, செஞ்சி-15.40, செம்மேடு-14.60, வானூா்-12, திருவெண்ணெய்நல்லூா், கெடாா்- தலா 10, மணம்பூண்டி-8, மரக்காணம்-4, அரசூா், அவலூா்பேட்டை- தலா 3 மில்லி மீட்டா் மழை பெய்தது. மாவட்டத்தில் மொத்தமாக 568.40, சராசரியாக 27.07 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments