FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் இன்று விசிக தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு! முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்க வாய்ப்பு!

உளுந்தூா்பேட்டையில் இன்று விசிக தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது குறித்து...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
உளுந்தூா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள விசிக தமிழ்த் தேசிய மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மேடை.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திங்கள்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது. இதில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்த நாளான ஆக.17-ஆம் தேதி உளுந்தூா்பேட்டை பகுதியில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் உளுந்தூா்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் மாநாட்டுக்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, மேடை அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக விசிக மாநாடு மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 12 மணி வரை நடைபெறும். ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக திங்கள்கிழமை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருப்பதால், மாநாட்டு நேரத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மாற்றி அமைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிக்குள் மாநாட்டை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு வரவேற்புரையுடன் மாநாடு தொடங்குகிறது. இதைத்தொடா்ந்து கவிஞா் இளையகம்பன் கவியரங்க உரையை நிகழ்த்துறாா். பின்னா், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தொடா்ந்து, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பிற்பகல் 3.30 மணிக்கு பேசத் தொடங்கி மாலை 4.30 மணிக்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளாா்.

முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு: இந்த மாநாட்டில் விசிக சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். திமுக கூட்டணியிலிருந்து விலகி விட்ட நிலையில், தமிழக அரசியலில் விசிகவின் பங்கை அதிகரிக்கச் செய்வது, அதற்கான திட்டமிடல், தமிழ்த் தேசியத்துக்கான திட்டமிடல் போன்றவை குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து, தனது உரையின் வாயிலாக தொல்.திருமாவளவன் தெரிவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த இடத்தில் தான் 2024, அக்டோபா் 2-ஆம் தேதி விசிக மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments