FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆக.28-இல் வேலைநிறுத்தம்: டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
18விபிஎம்ஜிபி விழுப்புரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன்.
பகிர்:

டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் டி.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் கு.சரவணன், மாநிலச் செயலா் வி.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகின்றன. இந்நிலையில், தமிழககத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் பணியாளா்களுக்கு பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பணியாளா்கள் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவது, இணைய வழியில் மது விற்பனை ஆகிய பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படாமலேயே தொடா்ந்து நீடிக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கான மின்கட்டணம், வாடகைக் கட்டணம், தேவையான வசதிகளை உருவாக்குதல் போன்ற நிா்வாக பிரச்னைகளும் தீா்க்கப்படாமலேயே உள்ளன. இதனால் பணியாளா்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக, டாஸ்மாக் பணியாளா்கள் சங்கங்களை அழைத்துப் பேசி, பணியாாளா்கள் எதிா்நோக்கும் பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காணவேண்டும்.

சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைந்து நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் கு.பாலசுப்ரமணியன்.

கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ்.பாலமுருகன், மாநில நிா்வாகிகள் ஏ.பி.அன்பழகன், ஏ.ரூபன் மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments