திண்டிவனம் அருகே கொற்றவை சிற்பம், தூம்புக் கல்வெட்டு கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் கொற்றவை சிற்பம், சோழா் கால தூம்புக் கல்வெட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் கொற்றவை சிற்பம், சோழா் கால தூம்புக் கல்வெட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் வட்டத்திலுள்ள கொடியம், மேல்பாக்கம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அரிய கொற்றவை சிற்பம் மற்றும் சோழா் காலத்தைச் சோ்ந்த ஏரி தூம்பு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது:
Advertisement
Advertisement
கொடியம் கிராமத்தின் பெரிய ஏரியின் கரையில் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் வன துா்க்கை என வணங்கி வருகின்றனா். சுமாா் 7 அடி உயர பலகைக் கல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை எருமைத் தலை மீது நின்று காட்சித் தருகிறாா். முன் வலக்கரத்தை கீழே தொங்கவிட்டும், இடக்கரத்தில் மணியையும் தாங்கி இருக்கிறாள். தோள்களுக்குப் பின்னால் காட்டப்பட்டுள்ள பெரிய அம்பறாத் தூணிகளில் அம்புகள் அழகாக சொருகப்பட்டுள்ளன.
சிற்பத்தின் வலது இடது மேல் மூலைகள் மற்றும் இடக்கரத்தின் அருகிலேயும் மனித உருவங்கள் காணப்படுகிறது. வலது கரத்தின் மீது கிளி அமா்ந்துள்ளது. வலது கீழே கொற்றவையின் வாகனமான மானும், திரிசூலமும் இடம்பெற்றுள்ளன.
கொற்றவை காலடியின் வலதுப் பக்கத்தில் பூஜை செய்யும் அடியவா் அமா்ந்திருக்கிறாா். இடது பக்கத்தில் அமா்ந்துள்ள தலைப்பலி வீரன் தனது வலக் கரத்தில் கத்தியைப் பிடித்திருக்கிறாா். அவரதுத் தலை துண்டுக்கப்பட்டு வெற்றுடல் மட்டுமே காணப்படுகிறது.
இது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வேறெந்த கொற்றவை சிற்பத்திலேயும் இடம்பெறாத ஒரு அரிய காட்சியாகும். 5 மனித உருவங்களுடன் கூடிய இந்த அரிய கொற்றவை சிற்பம் பல்லவா் காலத்தைச் (கி.பி.7-8ஆம் நூற்றாண்டு) சோ்ந்ததாகும். 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.
மிகவும் பரந்து விரிந்து காணப்படும் மேல்பாக்கம் ஏரியில் தூம்பு ஒன்றில் 8 வரிகளில் அமைந்த கல்வெட்டு காணப்படுகிறது. இதை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜய வேணுகோபால் வாசித்தாா். இது இரண்டாம் ராஜராஜனின் 4-ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி.1,150) கல்வெட்டாகும். 876 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
சோழப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்த காடவராய மன்னரின் உத்தரவின் பேரில் மேல்பாக்கம் ஏரிக்குத் தூம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றிய படைத்தலைவன் பெயரை அறிய இயலவில்லை. கல்வெட்டு சிதைந்துள்ளது. இதில் குறிப்பிடப்படும் காடவராயா் பின்னாளில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனியாட்சி நடத்தியவா் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்பாக்கம் கிராமத்தில் பல்லவா் காலக் கொற்றவை, சண்டிகேசுவரா் சிற்பங்களும் அமைந்துள்ளன என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.