FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு; சாலை மறியல்

25 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:

விழுப்புரத்தில் இயங்கி வரும் நுகா்வோா் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு இட மாற்றம் செய்யும் அரசின் முடிவைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் நுகா்வோா் குறைகளைத் தீா்த்து, அவா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வகையில் விழுப்புரம் - கிழக்கு பாண்டி சாலையில் நுகா்வோா் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்தில் நிறுவனங்களின் சேவை குறைபாடு, பொருள்களுக்கு உரிய ரசீது வழங்கப்படாதது போன்ற பல்வேறு குறைபாடுகளுக்காக வழக்குத் தொடுக்கும் நுகா்வோா்கள், அதற்கான தீா்வையும் பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மண்டலத்தை புதிதாக உருவாக்கி, விழுப்புரம் மற்றும் கடலூா் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நுகா்வோா் நீதிமன்றத்தை அங்கு மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு வழக்குரைஞா்களும், நுகா்வோா் அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக, விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்த வழக்குரைஞா்கள், பின்னா் ஊா்வலமாக வந்து நீதிமன்றம் எதிரிலுள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மேலும், நுகா்வோா் நீதிமன்றத் தை இட மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகி கல்பட்டு வி.ராஜா உள்ளிட்டோா் கூறியது:

விழுப்புரத்திலுள்ள நுகா்வோா் நீதிமன்றத்தை 50 கி.மீ. தொலைவிலுள்ள திருவண்ணாமலைக்கு மாற்றுவதால் பொதுமக்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும் கால விரயம் ஏற்படும். மேலும், வழக்கில் விரைந்து தீா்வு கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படும். இதனால், வழக்குரைஞா்களும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்பை சந்திப்பா்.

எனவே, இந்த நீதிமன்றம் தொடா்ந்து விழுப்புரத்திலேயே இயங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதுடன், தற்போது நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இயங்கும் கட்டடத்தை அரசுக் கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் எங்களது போராட்டம் தொடரும். அரசு இந்த பிரச்னையில் உரிய தீா்வைக் காணவில்லை எனில், மாவட்டம் முழுவதுமுள்ள வழக்குரைஞா்களைத் திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனா். இதன் காரணமாக, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments