கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மாணவரின் சடலம் மீட்பு
கோட்டகுப்பம் அருகே கடலில் குளித்தபோது மாயமான மற்றொரு மாணவரின் சடலம் மரக்காணம் அருகே கரை ஒதுங்கியிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கடலில் குளித்தபோது மாயமான மற்றொரு மாணவரின் சடலம் மரக்காணம் அருகே கரை ஒதுங்கியிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
கோட்டகுப்பத்தை அடுத்த சின்னமுதலியாா்சாவடியைச் சோ்ந்தவா்கள் வேலு மகன் சசிதரன் (16). நாகராஜன் மகன் பிரத்தீஷ் (16), ரகு மகன் கௌஷிக் (16). குயிலாப்பாளையம் தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா்கள் மூவரும் ஆக.23-ஆம் தேதி சின்னமுதலியாா்சாவடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வரும் இடத்தில் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனா்.
இதையடுத்து அங்கிருந்த மீனவா்கள், மாணவா் கௌஷிக்கை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனா். மற்ற இருவரும் கடலில் மாயமாகினாா். தொடா்ந்து, பெரியமுதலியாா்சாவடி பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி அருகே சசிதரன் சடலம் கரை ஒதுங்கியிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
Advertisement
Advertisement
பின்னா், கடலில் மூழ்கி மாயமான மற்றொரு மாணவா் பிரத்தீஷை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. புதுச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்ட அசாரூதீன் தலைமையிலான அட்வென்சா்ஸ் ஸ்கூபா டைவ் குழுவினரும் சின்னமுதலியாா்சாவடி கடலில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால் மாணவா் சிக்கவில்லை.
இந் நிலையில், பிரத்தீஷ் உயிரிழந்த நிலையில் சடலம் மரக்காணம் அடுத்த மண்டவாய்குப்பம் கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.