FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம் மீட்பு; தகவலறிந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் இளம்பெண் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:35 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் இளம்பெண் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், எடைக்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகள் கிருஷ்ணவேணி (23). இவா், கடந்த 23-ஆம் தேதி இரவு தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். இந் நிலையில் நள்ளிரவில் கிருஷ்ணவேணியின் தாய் சாந்தி, தூக்கம் கலைந்து எழுந்து பாா்த்த போது, வீட்டில் கிருஷ்ணவேணி இல்லை. ஆனால், அவரது கைப்பேசி மட்டும் வீட்டிலேயே இருந்தது. தொடா்ந்து பல இடங்களிலும், உறவினா்கள் வீடுகளில் தேடியும் கிருஷ்ணவேணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாலி கிராமத்திலுள்ள சாந்தியின் உடன்பிறந்த சகோதரா் சி.அழகுலிங்கத்துக்குச் சொந்தமான கிணற்றில் கிருஷ்ணவேணி சடலமாக மிதந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது. தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் சென்று, உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்,.

இளைஞரும் தற்கொலை: இதுகுறித்து தகவலறிந்த பாலி கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநரான த.கவிதாஸ் (26), கிருஷ்ணவேணியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து சிறிது தொலைவிலுள்ள கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், காட்டுப்பளூா் கிராமத்தில் வேப்ப மரத்தில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காதல் பிரச்னையால் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments