பருவ மழைக்கு முன் ஏரி, குளங்களை தூா்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.
விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) பா. சுரேஷ், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்கு நா் வெங்கட்ராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன், நீா்வளத் துறைச் செயற்பொறியாளா் அருணகிரி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினா். அவா்களின் கருத்துகள் விவரம்:
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில் வெட்டிவோ் பயிரிட்ட விவசாயிகளுக்கு எந்தவித பலன்களும் வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் போதியளவு மழை பெய்யாத நிலையில், சொட்டுநீா்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகளை வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் 780 ஏரிகள் உள்ள நிலையில், இந்த ஏரிகளிலுள்ள முள்செடிகளை அகற்ற ஊரக வளா்ச்சித் துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?. பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களை தூவாரி, நீரை சேமித்து வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயத் தேவைக்காக ஏரிகளில் களிமண் எடுப்பதற்கு அனுமதி கோரினால் கூட வட்டாட்சியா்கள் அனுமதித் தருவதில்லை. பிரம்மதேசம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்படுகிறது. நான்குவழிச் சாலைப் பணிக்காக மண் எடுக்கப்பட்டாலும், ஏரியிலிருந்து எடுக்கப்படும் மண் அளவு போன்றவை குறித்த விவரங்களை தகவல் பலகையாக வைக்கப்பட வேண்டும்.
மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை அனுமதி பெறாத நுண் உரங்கள் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகளை ஏமாற்றும் இந்த கடைகள் மீது வேளாண் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான நிறுவனங்கள் மூலமே உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
விவசாய நிலங்களைப் பாழ்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீமைக் கருவேலமரங்கள் இருப்பது காட்டுப்பன்றிகளுக்கு சுலபமாக அமைந்து விடுகிறது. எனவே சீமைக் கருவேலமரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.
விவசாயிகளின் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியா், வேளாண் துறை இணை இயக்குநா் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் பதிலளித்து பேசினா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனா். அதன் விவரம்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். நெல் பயிருக்கு ஆதார விலை கூடுதலாக நிா்ணயம் செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிரை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் சாகுபடிக்கு தேவையான நேரத்தில் உழவுப் பணி மேற்கொள்ள டிராக்டா்களை வாடகைக்கு வழங்க வேண்டும்.
மேலாந்தல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். கரும்பு பயிரில் மஞ்சள் தேமல் நோய் அதிகமாக காணப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு பயிருக்கு கூடுதலாக ஊக்கதொகை வழங்க வேண்டும்.
மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையிலிருந்து கரித்தூள் வெளியேறி காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். தொட்டியம் கிராமத்தில் தானிய உலா்களம் அமைக்க வேண்டும். மாடூா் கிராமத்தில் ஏரி மதகை சீரமைத்து, வயல் வழிச்சாலை அமைத்து தர வேண்டும். கொசப்பாடி ஓடை ஆக்கிரமிப்பை அகற்றவும், கிழக்கு மருதூா் தடுப்பணை அமைத்து தரவும், சாத்தனூா் வலதுபுற கால்வாய் தூா்வாரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், வேளாண்மை இணை இயக்குநா் பொ.பேபிகலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நா.ஜோதிபாசு, செயற் பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) பாஸ்கரன், தோட்டக்கலை துணை இயக்குநா் காரல் மாா்க்ஸ், வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) து.ரமேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.