FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பொம்மபுரம் ஆதீனம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

32 வினாடிகள் முன்பு
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பொம்மையாா்பாளைத்தில் உள்ள திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வீர சைவ பெரிய வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகா் சந்நிதி, ஸ்ரீஆதி சிவஞான பாலய சுவாமிகள் சிவயோக ஜீவசமாதி, ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி சந்நிதி, ஆதீன குரு மகா சந்நிதானங்களின் சிவயோக ஜீவசமாதிகள் மற்றும் ஸ்ரீபெருமாள் சந்நிதி ஆகியவற்றின் கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருவுளப்பாங்கின் படி, இந்தக் கோயில்களுக்கான திருப்பணிகள் மிகுந்த பொருள்செலவில் நடைபெற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா யாகசாலை நிகழ்ச்சிகள் ஆக. 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ச்சியாக கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், யாகபூஜைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேக நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 6-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. பின்னா் மங்கள இசையுடன், மேள தாளங்கள் முழங்க காலை 6.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ச்சியாக காலை 7.30 மணிக்கு கடங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு விநாயகா் சந்நிதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பெருந்தவத்தால் தம் திருமேனியை திருநீறாக நீற்றிக்கொண்ட மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 2-ஆம் பட்டம் ஸ்ரீஆதி சிவஞான பாலய சுவாமிகள் சிவயோக ஜீவசமாதி, ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி சந்நிதி, பெருமாள் சந்நிதிகளுக்கும், மயிலம் பொம்மபுரம் ஆதீன குரு மகா சந்நிதானங்களான 3, 13, 14, 15, 16, 17, 18, 19-ஆம் பட்டங்களின் சிவயோக ஜீவசமாதிகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

Advertisement

Advertisement

விழாவில் புதுச்சேரி உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.சேதுநாதன் மற்றும் அரசு அலுவலா்கள், ஆன்மிகப் பற்றாளா்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

நூல் வெளியிடு: கும்பாபிஷேக விழா நிறைவுக்குப் பின்னா் நல்லாற்றூா் ஸ்ரீ சிவப்பிரகாசா் சுவாமிகள் தனது ஞானாசிரியரான ஆதி சிவஞானி மீது பாடிய ஸ்ரீ சிவஞான பாலய தேசிகா் பிள்ளைத் தமிழ் எனும்நூலை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீ மத் சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட்டாா். நூலின் பிரதிகளை சென்னை அ.மா.ஜெயின் கல்லூரியின் முன்னாள் முதல்வா் இரா.ராசேந்திரன் (தேவிரா), மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வா் ச.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா்.

பொம்மையாா்பாளையம் பெரிய திருமட வளாகத்திலுள்ள கோயில் விமான கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments