தங்க ரதம் வந்தது வீதியிலே...
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் சுமார் 40 ஏக்கரில் ஆயிரங்கால் மண்டபத்துடன் அமைந்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் சுமார் 40 ஏக்கரில் ஆயிரங்கால் மண்டபத்துடன் அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவர் அருள்பாலிப்பதால், நீராபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இந்தக் கோயிலுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் 2010- ஆம் ஆண்டு மரத் தேர் செய்யப்பட்டு, தேர்த் திருவிழா பங்குனி பிரமோற்சவ நாளின்போது நடைபெற்று வருகிறது. 2025- ஆம் ஆண்டில் ரூ.30 கோடி மதிப்பில் தங்கத் தேரும் செய்யப்பட்டு, 2026 -ஆம் ஆண்டு ஜூலை 12-இல் தங்கத் தேரோட்டமும் நடைபெற்றது.
நாட்டிலேயே மிக உயரமாக 25 அடி அளவில் மிகுந்த தொழில் நுட்பங்களுடன் வடிவமைத்த தங்கத் தேரை ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
இந்தத் தேர் உருவானது குறித்து அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் ஸ்தபதியிடம் பேசியபோது:
'ஏகாம்பரநாதர் கோயிலில் தேர் இல்லாததால் தேர்த் திருவிழா நடைபெறாமல் இருந்தது. 2010- ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சிவார்ப்பணம் அறக்கட்டளையினர் ரூ.1.50 கோடி மதிப்பில் மரத்தேர் ஒன்றைக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அப்போது, பணி ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் நாகராஜன், 'கோயிலுக்கு தங்கத் தேர் செய்ய வேண்டும்' என்றார். 'தங்கத் தேரெல்லாம் நம்மால் செய்ய முடியுமா?' என்று நான் கேட்டேன். 'ஏகாம்பர
நாதர் அருளால் கண்டிப்பாக நடக்கும்' என்று அவர் சொன்னார். அப்போதே நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டும் கோயில் உண்டியலில் செலுத்தி வேண்டினோம்.
பின்னர் எங்களது கோரிக்கையை சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடமும் தெரிவித்தோம். அவரும் தெலுங்கு வருடப்பிறப்பன்று தங்கத்தேர் திருப்பணிக்காக உள்ளூர் மக்கள் சிலரை அழைத்து 'ஸ்ரீஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை'யை நிறுவி, காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். அன்று முதல் அவருக்கு பாத காணிக்கையாக வந்த பொன், வெள்ளி, ரொக்கத்தை அறக்கட்டளைக்கு அளித்தார்.
மாமல்லபுரம் ரமேஷ் ஸ்தபதி மூலமாக பர்மா தேக்கு மரத்தால் முதலில் 25 அடி உயர மரத் தேர் உருவாக்கப்பட்டது. அதன் மீது சுமார் 1,500 கிலோ தாமிரத் தகடுகளால் கவசம் செய்யப்பட்டு, பின்னர் அவற்றின் மீது 24 காரட் தங்க ரேக்குகள் ஒட்டப்பட்டன. இந்த நேரத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்தார்.
சில வாரங்களுக்குப் பின்னர், 70-ஆவது பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் பேசினோம். அவர் சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மணிமாமாவையும், மகாலட்சுமி சுப்பிரமணியத்தையும் ஆலோசகர்களாக நியமித்தார். ஓரிக்கையில் மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் தங்க ரத திருப்பணியை பூர்த்தி செய்ய சுவாமிகள் அனுக்கிரகித்தார். தங்க ரத திருப்பணி வேகமாக நடைபெறத் தொடங்கியது.
தங்கத்தேரின் சிறப்புகள்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமீம் என்ற இஸ்லாமியர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட சிற்பிகள் தினமும் 24 காரட் தங்கக் கட்டிகளை சிறு துண்டுகளாக்கி, பின்னர் தகடுகளாக்கி, தங்க ரேக்குகளாக மாற்றி, 25 அடி உயரமுள்ள செப்புத் தகட்டின் மீது 7 அடுக்குகளாக விகிதாசார அடிப்படையில் ஒட்டினர். நவீனக் காலங்களில் தங்க முலாம் பூசப்படும் பணிகளே செய்யப்பட்டன.
அவற்றுக்கு உழைக்கும் காலம் குறைவு என்பதால், தங்க முலாம் பூசும் முறையைப் பயன்படுத்தாமல் பழைய காலங்களில் எவ்வாறு செய்யப்பட்டதோ, அதே வழிமுறையைப் பின்பற்றி 22 கிலோ 306 கிராம் தங்க ரேக்குகள் ஒட்டப்பட்டு அற்புதமான தங்கத்தேர் உருவானது.
பிரம்மா 4 குதிரைகளுடன் தேர் ஓட்டுதல், 8 சங்க நாத பூதங்கள்,16 நந்திகள், 8 கந்தர்வர்கள், சாமரம் வீசும் 4 பெண்கள், கோயிலின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான சிற்பங்களோடு மிகுந்த கலைநயத்துடன் தங்க ரதமானது உயரம் 25 அடியும், அகலம் 10 அடியும், நீளம் 13 அடியும் என தங்கத் தேர் உருவானது.
நாட்டிலேயே மிக உயரமான தங்கத் தேரை வடிவமைத்து, 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள மகா சுவாமிகள் மணிமண்டபத்திலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுக்க, வெள்ளோட்டம் நடைபெற்றது. இதை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகளில் சுமார் 7 கி.மீ.தூரம் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றதால், 25 உயர் மின்னழுத்த வயர்கள்,1500 வீட்டுப் பயன்பாட்டு வயர்கள், இணைய கேபிள்கள், டி.வி.கேபிள்கள் ஆகியனவற்றை ஒழுங்குப்படுத்த 250-க்கும் மேற்பட்ட மின்வாரியப் பணியாளர்களின் ஒத்துழைப்போடும், காவல் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறையினரின் ஆதரவுடன் கோயிலுக்கு தேர் கொண்டு வரப்பட்டது.
முதல் தங்கத்தேர் திருவிழா
ராஜ வீதிகளில் வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேர் திருவிழா 2026- ஆம் ஆண்டு ஜூலை 12-இல் விமரிசையாக நடைபெற்றது. உற்சவர் ஏகாம்பரநாதரும், ஏலவார்
குழலியும் ஜொலிக்கும் தங்கத்தேரில் எழுந்தருளினர். 108 நாகசுவரக் கலைஞர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவ வாத்தியங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, திருப்பூர் காவடி குழுவினரின் நடனம் போன்றவை தேர்த்திருவிழாவை மேலும் மெருகேற்றியது.
சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சீ.ரமேஷ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு, வனத் துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் வடம்பிடித்து தங்கத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்' என்கிறார் நந்தகுமார் ஸ்தபதி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.