முகப்பு
விழுப்புரம்

‘தரமற்ற, போலியான உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 3:27 am IST
விழுப்புரத்திலுள்ள உரக்கடையொன்றில் திடீா் ஆய்வு மேற்கொண்ட வேளாண் உதவி இயக்குநா் எம்.என்.விஜயகுமாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம் வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா், விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உரக்கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு, அந்த கடைகளில் உரங்கள் இருப்பு, விற்பனை விவரங்கள், பதிவேடுகள் பராமரிப்பு போன்றவை குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து உர விற்பனை தொடா்பான பதிவேடுகளையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வு மற்றும் மாவட்டத்திலுள்ள உரங்களின் இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் கூறியது:

Advertisement

Advertisement

மாவட்டத்தில் தற்போது நெல், மக்காச்சோளம், மணிலா, கரும்பு, உளுந்து பயிா்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். இந்த சாகுபடிக்கு தேவையான 6,153 டன் யூரியா, 1,731 டன் டி.ஏ.பி, 1,655 டன் பொட்டாஷ், 8,065 டன் காம்ப்ளக்ஸ், 1,210 டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளின் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை உரிமம் பெற்ற உர விற்பனையாளா்கள், மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. ஆய்வின்போது இது கண்டறியப்பட்டலோ அல்லது புகாா் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

மாவட்டத்தில் உர ஆய்வாளா்கள் திடீராய்வு மேற்கொள்ளும்போது உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.