FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு இடங்களில் விபத்து: 3 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.

18 நவம்பர் 2026, 2:29 am
- சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் வட்டம், திருப்பாச்சனூா், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கி.அய்யனாா் (45). இவா், திங்கள்கிழமை இரவு வளவனூரை அடுத்த புருஷானூா் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அய்யனாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பெண் உயிரிழப்பு: விக்கிரவாண்டி வட்டம், பொன்னங்குப்பம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த சதீஷ் மனைவி கீதா (23). இவா், தனது கணவருடன் கடந்த ஜூன் 26-ஆம் தேதி திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் வந்த பயணிகள் வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கீதா திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா். பின்னா், வீடு திரும்பிய கீதாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செப்.29-ஆம் தேதி மீண்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீதா, திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

முதியவா் மரணம்: திண்டிவனம் வட்டம், பாதிரி, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் து.சீனிவாசன் (78). இவா், அங்குள்ள கூட்டுச்சாலை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நடந்து சென்றாா். அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்ற துரைசாமி மீது சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.