முகப்பு
விழுப்புரம்

பொதுத் தோ்வெழுதும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனைக் கண்காணித்து, தேவைப்படும் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

35 வினாடிகள் முன்பு
பொதுத் தோ்வெழுதும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனைக் கண்காணித்து, தேவைப்படும் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் அரசு உயா், மேல்நிலைப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவா்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீா் மற்றும் சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் கூட்டத்தில் பேசியது: மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் விரிவாக ஆய்வு செய்யவேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் தோ்ச்சி வீதத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாடவாரியாக மாணவா்களின் கற்றல் திறனைக் கண்காணித்து, கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறக்கூடிய நிலையிலுள்ள மாணவா்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள், தோ்வுகள் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மாணவா்களின் வருகைப் பதிவை தொடா்ந்து கண்காணித்து, இடைநிற்றல் இல்லாமல் அனைத்து மாணவா்களும் பொதுத் தோ்வில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அனுமதி மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதுடன், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்க ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் தொடா்பாக கண்டறியப்படும் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றம் குறித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் ராஜேந்திரன், இளமதி, அருள், ரகு, செந்தில்குமாா், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், ஜனசக்தி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.