என் மகளுக்கு ஏழுக்குடையவன் எட்டில் மறைந்துள்ளது குறையா? லக்னத்தில் செவ்வாய் இருப்பது தோஷமா? தந்தை இல்லை. தெய்வ நம்பிக்கை இல்லை. சூரியனும் குருவும் ராகு சுக்கிரனோடு இணைந்திருப்பதால் இப்படி ஆனதா? கஜகேசரி யோகம் பலனளிக்கவில்லையா? திருமணம் எப்போது கைகூடும்? நல்ல வேலை கிடைக்குமா? - வாசகி, மயிலாடுதுறை
உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
உங்கள் மகளுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுயசாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானாதிபதியான இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்திலேயே செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் சுகஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் ஏழாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் (பெண்களுக்கு எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானத்துடன் மாங்கல்ய ஸ்தானமாகவும் ஆகிறது) அதிபதியான சனிபகவான் எட்டாம் வீட்டிலேயே ராகு பகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். ராகுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேதுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
அவருக்கு லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். லக்ன கேந்திரத்தில் பூர்வபுண்ணிய புத்திர புத்தி தொழில் ஸ்தானாதிபதியான ஒரு திரிகோண ராசிக்கும்; ஒரு கேந்திர ராசிக்கும் அதிபதியான செவ்வாய்பகவான் நீச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் அவருடன் கடக ராசிக்கு அதிபதியான சந்திரபகவான் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. அதோடு சந்திரமங்கள யோகமும் உண்டாகிறது. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றிருப்பதால் ஜாதகத்திற்கு மூல பலம் ஏற்படுகிறது. ஜன்ம லக்னத்தைக் கொண்டு உடல் ஆரோக்கியம், பழக்கவழக்கங்கள் பண்பு ஆகியவற்றை அறிய முடியும். மேலும் இதனால்
சமுதாயத்தில் அந்தஸ்தும் மதிப்பும் கூடும். ஐந்தாம் வீட்டோன் வலுத்திருப்பதால் ஞாபக சக்தி சிறப்பாக அமையும். பொதுவாக, மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் லக்னங்களுக்கு செவ்வாய்தோஷ பாதிப்பு ஏற்படாது. அதனால் அவருக்கு செவ்வாய்தோஷம் இல்லை என்று கூறவேண்டும்.
சந்திரபகவானின் கேந்திரத்தில் குருபகவான் இருப்பதால் கஜகேசரி யோகம் உண்டாகும் என்பதை அனைவரும் அறிந்ததே. கஜகேசரி யோகம் உள்ளவர்களுக்கு உற்றார் உறவினர்கள் அதிகமாக இருப்பார்கள். தன்மையான சாந்தமான தோற்றம் உடையவர். பெருந்தன்மையுடன் தாராள மனப்பான்மையுடன் இருப்பார். நிர்வாகத் திறன் இயற்கையாகவே அமையும். இந்த யோகம் முழுமையாக அமையப் பெற்றவர்கள் நீதிமான்களாகவும் இறவாப்புகழ் என்பார்களே அதேப்போல் புகழைப் பெற்றவர்களாகவும்
இருப்பார்கள். இங்கு முழுப்பலன் எவ்வாறு உண்டாகிறது என்று பார்க்க வேண்டும். சந்திரபகவான் சுபர்களுடன் கூடினால் முழுப்பலனாகும். சுபர்களால் பார்க்கப்பட்டாலும் முக்கால் பங்கு பலன் கிடைக்கும். அதேபோன்று குருபகவானுடன் சுபக்கிரகங்கள் (அவருக்கு நண்பர் என்கிற நிலையில் இருந்தால் சிறப்பு) கூடியிருந்தால் முழுப்பலன் உண்டாகும். அதனால் சந்திர, குரு பகவான்கள் அடைந்த தன்மையை பொறுத்தே பலன்கள் மாறுபடுகின்றன என்பதை அறிய வேண்டும். மற்றபடி கஜகேசரி யோகம் யோகங்களில் தலை சிறந்ததாக கருதப்படுவதால் பெரும்பான்மை வெற்றிகளும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் மகளுக்கு சூரிய, குரு பகவான்களுடன் ராகு, சுக்கிர பகவான்கள் இணைந்திருப்பதால் தெய்வ நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். இத்தகையோருக்கு பொதுவான தியானம், பிராணாயாமம், ஜோதிடம் போன்ற மறைமுகக் கலைகள் கைவரக்கூடும். பல யோகக்கலை ஆசிரியர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் இத்தகைய சேர்க்கை இருப்பதைப் பார்க்கிறோம். இவர்கள் இறை அம்சத்தைத் தேடுபவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம். அதனால் உங்கள் மகள் வெளிதோற்றத்தில் தெய்வ நம்பிக்கை இல்லாததைப் போல் இருந்தாலும் ஆழ் மனதில் தெய்வத்தேடல் இருக்கும். அது தக்க சமயத்தில் அதாவது தொடரும் கேது மஹா தசையில் வெளிப்படும் என்றும் கூறவேண்டும்.
சிலர், எட்டாம் ஸ்தானாதிபதியை எப்பொழுதும் அசுபக் கிரகமாகவே கணிக்கின்றார்கள். ஆனாலும் ஆதாரப் பூர்வமான ஜோதிட நூல்கள் எட்டாம் ஸ்தான அதிபதியை அதனுடைய மற்றைய ஸ்தான ஆதிபத்யத்தை வைத்தே கணக்கிட வேண்டும் என்று கூறுகிறது. அவருக்கு சனிபகவான் ஏழாம் வீடான களத்திர நட்பு ஸ்தானத்திற்கும் அஷ்டம ஸ்தானமான ஆயுள் மாங்கல்ய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். அதனால் ஏழாம் வீடு (கேந்திர வீடு) அசுபக் கிரகங்களுக்கு சுபத்துவம் நிறைந்தது என்பதால் சனிபகவானை சுபராகவே கருதவேண்டும். இது அனுபவத்திலும் ஒத்து வருகிறது. அதோடு சனிபகவானை குருபகவான் ஐந்தாம் பார்வையாகப் பார்வை செய்கிறார். மேலும்
குருபகவான் சுக ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் குருபகவான் பலமாக உள்ளார் என்று கூறவேண்டும். அதோடு "ஸ்திரீனாம் குருபலம் ஸ்ரேஷ்டம்' என்பதும் ஜோதிட வழக்கு. அவருக்கு தற்சமயம் நடக்கும் புத மஹாதசை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்தில் குருபலமும் நிறைவதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். நல்ல வேலையும் கிடைத்துவிடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.