முகப்பு
ஜோதிட கட்டுரைகள்

மீன ராசிக்காரர்களின் பலம், பலவீனம்!

மீன ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:34 PM
மீனம் - DPS
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:50 PM

ஜாதகரின் வாழ்க்கையை முக்கியமாக வழிநடத்தும் கிரகம் குரு. இவர் குழந்தைப் பாக்கியம், வங்கி சேமிப்பு, மற்றும் அதிகளவிலான தங்கச் சேமிப்பைக் குறிக்கிறார். மீன லக்னத்திற்கு குரு ஆட்சியாளராக இருப்பதால், அதன் பலன் மிக முக்கியமானதாகும். இந்த நிலையில், ஆபரணங்கள் மற்றும் செல்வச் சுகங்களைக் குறிக்கும் சுக்கிரன் இங்கு உச்சமாக இருப்பது பொருள் வசதிகளை அதிகரிக்கும். ஆனால், ஜோதிட சூட்சும விதிப்படி, புத்திகாரகனான புதன் மீனத்தில் நீச்ச நிலை பெறுகிறார்.

இதனால் புதன் பலமின்றி இருந்தால், சம்பாதித்த மற்றும் சேமித்த செல்வங்கள் நிலைத்திருக்காமல், செலவு அல்லது இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். காலபுருஷ தத்துவப்படி, 12ம் பாவமான இது மறைமுக எதிரிகள், வெளிநாட்டுப் படிப்பு, பல்வேறு நாடுகளில் வணிகம், சுப அசுப செலவுகள், ஆன்மிகம், மோட்சம், தூக்கம், உடலில் எதிர்ப்புச் சக்தி, இழப்பு, கடன், துர்மரணம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றைக் குறிக்கும்.

மேலும், "பாவத்திற்கு பாவம்" முறையில் பார்க்கும்போது தந்தை, தாய், சகோதரர், மனைவி தொடர்பான பல விஷயங்களைச் சொல்லமுடியும். எடுத்துக்காட்டாக, தாயின் 4ம் பாவத்திற்கான 9ம் பாவம் 12ம் பாவமாகும். இதன் மூலம் தாயின் பாக்கியம், திடீர் வருமானம் மற்றும் அவர்களின் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை அறியலாம்.

Advertisement

புலிபாணி தன் பாடலில் மீன லக்கின பலன்களை கூறுகின்றார்..

“கூறே நீ மீனத்தில் குழவி தோன்ற,

கொற்றவனே மாலோடு வெள்ளி ஆகா!

ஆரேநீ அகம்பொருளும் நிலமும் சேரும்,

அப்பனே அங்கத்தில் மச்சமுண்டு,

பாரேநீ கோணத்தி லிருந்த பேர்க்கு

பகருவாய் நற்பலனை யறிந்துநீதான்

யேரேநீ போகருட கடாக்ஷத்தாலே

யெமலோகஞ் சேர்வனடா இயம்பினேனே!” (பாடல் - 33)

பாடலின் சுருக்கமான விளக்கம்

மீன லக்கின பிறந்தவர்களுக்கு தேவ குரு லக்னாதிபதியாக இருப்பதால் நல்ல வழிநடத்தலை வழங்குவார். ஆனால் இந்த லக்கினத்திருக்கு முக்கிய பாவர்கள் என்று சொல்லும் புதனும், அசுர குருவாகிய சுக்கிரனும் பாதக கிரகங்களாக இருந்து கெடுதல் செய்வார்கள். இவர்கள் திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் புத்திசாலித்தனத்தால் செல்வமும் நிலமும் சேர்க்கும் யோகம் கிடைக்கும்; உடலில் மச்சம் போன்ற அடையாளங்களும் இருக்கலாம். ஆனால் புதன், சுக்கிரன் கேந்திர ஸ்தானங்களில் (1, 4, 7, 10) இருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் காரணமாக சிரமங்கள் அதிகரிக்கலாம். புதன் மற்றும் சுக்கிரன் தசா-புத்தி காலங்களில் மாரகத்திற்குச் சமமான பிரச்னைகளை தரக்கூடியவர்கள். சனியும் இங்கு மாரகாதிபதி ஆவார். இக்கிரகங்கள் பரிவர்த்தனை அல்லது வக்கிர நிலையில் இருந்தால் பலன்கள் மாறுபடும்.

மீன ராசியின் அடையாளச் சின்னம் எதிர்-எதிர் திசையில் நீந்தும் இரண்டு மீன்கள். இது வாழ்க்கையில் இரட்டை சிந்தனை கொண்ட மனநிலையைக் காட்டுகிறது. இந்த சின்னம், உணர்ச்சி மற்றும் யதார்த்தம் ஆகியவற்றின் சமநிலையை வெளிப்படுத்துகிறது. இந்த ராசிக்காரர்களின் மனநிலை அவ்வப்போது மாறுபடும். ஒரே முடிவில் நிலைக்காமல், சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். "மீன் தண்ணீரில் தான் வலிமை" என்பதுபோல், இவர்களின் வலிமை குடும்ப சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக அந்த வலிமை தாய், மாமியார் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு முக்கிய பங்காற்றும். மீன ராசியில் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 1-4ம் பாதங்கள் மற்றும் ரேவதி 1-4ம் பாதங்கள் அடங்குகின்றன. இவை முறையே குரு, சனி மற்றும் புதன் நட்சத்திரங்களாகும். சனி பிறந்த நட்சத்திரம் ரேவதி மற்றும் உத்தரட்டாதி சனியின் நட்சத்திரம். இவர்களுக்கு சனியின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படும்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:50 PM

மீன ராசிக்காரர்களின் பலம்

மீனம் என்பது உபய மற்றும் நீர் ராசி என்பதால், வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளும் இரட்டை தன்மையும் காணப்படும். இவர்கள் மென்மையான, கலை, கற்பனை, பேச்சுத் திறன், உணர்ச்சிப்பூர்வமான, கருணை, ஆன்மிக சிந்தனை மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை இவர்களின் பலமாகும். குரு முக்கிய கேந்திர ஸ்தானமான 10ம் பாவத்தில் ஆட்சி என்பதால் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இவர்கள் பொதுவாக மற்றவர்களுக்கு வழிகாட்டும் பணிகளில் ஈடுபடுவார்கள். உதாரணமாக மருத்துவம், ஆசிரியர், ஆன்மிகம், நீதித்துறை, கல்வித் துறை, உணவு தொடர்பான தொழில், ஆய்வகங்கள், சேமிப்பு கிடங்கு, போக்குவரத்து வணிகம் மற்றும் வங்கித் துறைகளில் மேலாளர், காசாளர் அல்லது ஆலோசகராக பணியாற்றுவார்கள்.

மீன ராசிக்காரர்களின் பலவீனம்

செயலில் தாமதம் செய்வது, பிறரை எளிதில் நம்புவது, வாக்குவாதம், உணர்ச்சிவசப்படுவது, அரசியல் சிக்கல் மற்றும் கனவுலகில் வாழும் பழக்கம் ஆகியவை காணப்படும். இங்கு அஷ்டமாதிபதியான சுக்கிரன் உச்சமாக இருப்பதால் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பேராசை கொஞ்சம் அதிகம். இவைகள் அனைத்தும் பொது பலன்கள், மற்ற கிரகங்கள் பொறுத்து குணநலன்கள் மாறுபடும். இங்கு புதன் நீச்சமாக இருப்பதால், நண்பன் / மாமன் உறவுகளில் பிரச்னைகள் தோன்றலாம். மேலும், கேந்திர ஸ்தான ஆட்சியில் இருக்கும் புதன் - தாய் மற்றும் துணைவரின் நிலைக்கு தோஷம் அளிக்கக்கூடியவர். குடும்பத்தை மதிக்கும் இவர்கள், நல்ல புரிதல் இருந்தால் அமைதியான வாழ்க்கையை நடத்துவர்.

மீனத்தில் குரு பலமாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம். குரு பாப கிரகங்களுடன் சேர்ந்தால், பணத்தில் திருப்தி இருந்தாலும் உடலில் பிரச்னை ஏற்படும். சாத்தியமான பிரச்னைகள் என்றால் வயிறு, மூக்கு, தோல் கோளாறுகள், பாத எரிச்சல், சர்க்கரை நோய், மூச்சு சிரமம், ஈரல் மற்றும் கொழுப்பு பிரச்னைகள், நரம்பு பலவீனம், வாயு, மனஅழுத்தம் ஆகும்.

சிறிய அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாமல் உடனடி மருத்துவ பரிசோதனை அவசியம். கோசாரத்தில் குரு மற்றும் சனி இணைவு ஏற்படும் போது, உடலில் சதை மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அழுக்கு பாக்டீரியா, கிருமித் தொற்று போன்றவை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். சில சமயங்களில், இவை தீவிர நோய்களாகவும் வளரக்கூடும். சனி கோச்சார காலத்தில், உடலில் நீர் தேக்கம், சதைப் பகுதிகளில் வீக்கம், மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குறிப்பாக, கொழுப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தொற்று உருவாகும் வாய்ப்பு இருக்கும். அதேபோல், குருவின் தொடர்பு காலத்தில், உடலில் இருந்த சிறிய காயங்கள் அல்லது மறைந்திருந்த உடல்நலப் பிரச்னைகள் கூட வெளிப்படையாகப் பெரிய நோய்களாகத் தெரியும். ஆனால், குருவின் சுப பார்வை (அதாவது குரு கடாட்சம்) இருந்தால், அந்த ஜாதகர் நோயிலிருந்து மீண்டு முழுமையான குணம் பெறுவார் என்பது ஜோதிட விதியாகும்.

எந்த ஒரு நிகழ்வும் (நோய், நன்மை அல்லது தீமை) கோசாரம் மட்டும் காரணமாக ஏற்படாது. அதனுடன் தசா–புத்தி சேர்ந்து செயல்படும்போது தான் முழுமையான பலன் வெளிப்படும். தற்போது சனி மீன ராசியில் உள்ள நிலையில், சிறிய உடல்நல குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். சனி கோசார காலத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பும், வேலை தொடர்பான மாற்றங்களும் ஏற்படலாம்.

பரிகாரம்

நீர்நிலைகள் உள்ள கோயில்களில் நீராடுவது நன்மை தரும். குறிப்பாகத் திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபடுவது விசேஷ பலன் அளிக்கும். ரத்த தான முகாம்களில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்வதும் நல்ல பரிகாரமாகக் கருதப்படுகிறது.

Whatsapp:8939115647

vaideeshwra2013@gmail.com

summary

What are the characteristics of people born under the sign of Pisces?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.