முகப்பு
சினிமா

பாரதிராஜா நடித்த கடைசிப் படம் புலவர்! ரிலீஸ் எப்போது?

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்த கடைசிப் படமான புலவர் ரிலீஸ் எப்போது? என்பதைப் பற்றி...

Updated On : 12 ஜூன் 2026, 7:03 pm IST
பாரதிராஜா.
பகிர்:

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்த கடைசிப் படமான புலவர் ரிலீஸ் எப்போது? என்பது பற்றி எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் எனப் புகழப்படும் பாரதிராஜா, ஜூன் 10 ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரை இல்லத்தில் காலமானார்.

சென்னையில் அவரது உடலுக்கு முதல்வர் விஜய், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு அருகே உள்ள வத்தலக்குண்டு கொண்டு செல்லப்பட்டு காட்ரோடு தோப்பில் அரசு மரியாதையுடம் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

ஸ்டூடியோக்களில் சுழன்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமத்துக்கு மண்ணுக்கு அழைத்துச் சென்ற பாரதிராஜா, தமிழில் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

16 வயதினிலே, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி கொடிக்கட்டி பறந்த பாரதிராஜா, தான் இயக்கிய படங்களுக்காக 6 தேசிய விருதுகளையும், 4 ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இயக்குநராக தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பாரதிராஜா, குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் மிரட்டியுள்ளார். சூர்யாவின் ஆயுத எழுத்து, ராக்கி ஆகிய படங்களில் வில்லனாகவும், குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப்பிள்ளை, மகாராஜா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக அவர் நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் கடைசியாக தனது 84 வயதிலும் மலையாளத்தில் மோகன் லாலின் துடரும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காலஞ்சென்ற இயக்குநர் பாரதிராஜா, கடைசியாக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் முருகைய்யா இயக்கத்தில், “புலவர்” படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்துக்கான முதல் பார்வை விடியோவை கடந்தாண்டு ஆகஸ்ட்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டார்.

டார்க் காமெடி பாணியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் குறித்து இதன் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் தனியார் நேர்காணலில் கூறுகையில், “இந்தப்படமானது தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, குற்றவாளிகளை எப்படி கையாளுகிறார் என்பதைப் பற்றியதுதான் கதையின் கரு.

அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நல்ல அறிவும் சிந்தனையும் கொண்டவர் தேவைப்பாட்டார். அதற்கு பாரதிராஜாதான் சரியாக இருப்பார் என்றும் தோன்றியது.

அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்னதாக, நாங்கள் படப்பிடிப்பையும் டப்பிங் வேலையையும் முடித்துவிட்டோம். பட வெளியீட்டுக்காக காத்திருந்தோம். அப்போதுதான் அவரது மகன் மனோஜ் உடல்நலக் குறைவால் மரணமடைந்ததால், திரும்பிச் செல்வதில் எனக்கு மனமில்லை.

அவரிடம் ஆசி பெறுவதற்காக இந்த வாரம் நாங்கள் அவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்தோம். அவர் குணமடைந்து, திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்தப் படம் கடந்த வாரம் நார்வே திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது” என்றார் அவர்.

இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் முத்திரை பதித்த பாரதிராஜாவின் கடைசிப் படத்தின் வெளியீடு எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

summary

While film fans are mourning the passing of Bharathirajaa, fans will still get to see him on screen in the dark satire Pulavar, likely to be his final screen performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.