FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய அளவில் ஆர்ஆர்ஆர் (ஹிந்தி) பட வசூல் புதிய சாதனை

ஆர்ஆர்ஆர் படம் 2-ம் இடத்தைப் பிடித்ததுடன் ரூ. 250 கோடி வசூலையும் அடைந்துள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2022, 3:34 pm IST
பகிர்:

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்துள்ளார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசை. ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்துள்ளார்கள். ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. 

திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், கொரியன் உள்பட வெளிநாட்டு மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமை ஜீ சினிமா (ஹிந்தி), ஸ்டார் (தெலுங்கு), விஜய் டிவி (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் (கன்னடம்) போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் ஹிந்திப் பதிப்பு மட்டுமே ரூ. 250 கோடியைத் தொட்டு சாதனை செய்துள்ளது. ஞாயிறு வரை ரூ. 253 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களில் இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட 2-வது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு மட்டுமே இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைக் கண்டது. இதுவரை வேறெந்த ஹிந்திப் படத்தாலும் ரூ. 400 கோடியை இந்தியாவில் பெற முடியாததால் பாகுபலி 2 படத்தின் வசூல் யாராலும் தாண்ட முடியாத ஒன்றாக உள்ளது.

கடந்த வாரத்துக்கு முன்பு 2-வது இடத்தில் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படம், ரூ. 188 கோடி வசூலுடன் இருந்தது. தற்போது ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் படங்கள் அதன் வசூலைத் தாண்டிச் சென்றுள்ளன.

ஆர்ஆர்ஆர் படம் 2-ம் இடத்தைப் பிடித்ததுடன் ரூ. 250 கோடி வசூலையும் அடைந்துள்ளது. இதனால் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களில் இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட முதல் இரு படங்களையும் இயக்கியவர் என்கிற பெருமையை ராஜமெளலி பெற்றுள்ளார். எனினும் இன்று ரூ. 200 கோடி வசூலை கேஜிஎஃப் படம் தொட்டுவிடும் என்பதால் விரைவில் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூலை அது தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள்: இந்திய அளவில் அதிக வசூல்

பாகுபலி 2: ரூ. 511 கோடி
ஆர்ஆர்ஆர்: ரூ. 253 கோடி*
கேஜிஎஃப்: ரூ. 193 கோடி*
2.0: ரூ. 188 கோடி

ஆர்ஆர்ஆர் (ஹிந்தி) வசூல்

முதல் வாரம்: ரூ. 132.59 கோடி
2-வது வாரம்: ரூ. 76 கோடி
3-வது வாரம்: ரூ. 35.20 கோடி

ரூ. 50 கோடி: 3-வது நாள்
ரூ. 100 கோடி: 5-வது நாள்
ரூ. 150 கோடி: 9-வது நாள்
ரூ. 200 கோடி: 13-வது நாள்
ரூ. 250 கோடி: 23-வது நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments