‘கோப்ரா’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
நடிகா் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகா் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள கோப்ரா திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமாா் தயாரிப்பில், நடிகா் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆக. 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை அரசு, தனியாருக்குச் சொந்தமான 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1,788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, ‘மிகுந்த பொருட்செலவில், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தை வெளியிடவுள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் படத்தை வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதனால், திரைக் கலைஞா்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வாதிட்டாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ‘கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டாா்.