முகப்பு
செய்திகள்

ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்: யாருக்கு?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பணமோசடி புகார் அளித்த இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

Updated On : 4 அக்டோபர், 2023 at 9:16 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:35 AM

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது பணமோசடி புகார் அளித்த இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

இசை நிகழ்ச்சிக்காக  ரூ.29.50 லட்சம் முன்பணம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி நடைபெறாத நிலையில், அதனை திருப்பி தர மறுப்பதாக செப்டம்பர் 27-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் புகார் மனு:

Advertisement

“கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னையில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மாநாடு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மாநாட்டில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முன்பணமாக ரூ. 29.50 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், மாநாடு ரத்து செய்யப்பட்டள்ளது.

எனவே, முன்பணத்தை திரும்பக் கேட்டு ரஹ்மானுக்கு கடிதம் அனுப்பினோம். அவரும் ஒப்புக் கொண்டு பின் தேதியிட்ட காசோலை வழங்கினார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டது. நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கக் கோரி 5 ஆண்டுகளாக ரஹ்மானிடம் கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை பணத்தை தரவில்லை. எனவே, ரஹ்மான் மற்றும் அவரது செயலாளர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.  

இதனைத் தொடர்ந்து, ரஹ்மான் தரப்பில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு இழப்பீடு கேட்டு அவர்களின் வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “ரஹ்மான் மீதான குற்றச்சாட்டு அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது. இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கும் எந்த விதத்திலும் தொடர்போ, ஒப்பந்தமோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளனர்.

இவர்கள் கூறும் பணத்தை ரஹ்மான் பெறவில்லை. மூன்றாவது நபரிடம் பணம் கொடுத்துவிட்டு ரஹ்மான் பெயரை கூறியுள்ளனர். ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீஸை மூன்று நாள்களில் திரும்பப் பெற வேண்டும். ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூ. 10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும்” என்று நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.