மோகன்லால், சிம்பு நடிப்பில் புதிய படம்?
2018 திரைப்பட இயக்குநர் இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால், சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல்.
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
Advertisement
Advertisement
கேரளத்தில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்றிருந்தது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃபின் அடுத்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்தன. போட்டியில், லைகா நிறுவனம் ஜூட் ஆண்டனியின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது ஜூட் ஆண்டனி நடிகர்கள் மோகன்லால் மற்றும் சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.