FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழ்த் தீ பரவியதா? பராசக்தி - திரை விமர்சனம்!

பராசக்தி திரைப்பட விமர்சனம்....

Updated On : 10 ஜனவரி 2026, 3:23 pm IST
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதை நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்) ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒரு மாணவர் படையையே வழிநடத்துகிறார். அம்மாணவர்கள் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், இவர்களின் போராட்டங்கள் பேசப்படுகிறது. அப்படியான சூழலில், மாணவர் சேனையை வழிநடுத்தும் செழியனுக்கு ஒரு இழப்பு ஏற்பட, அக்குழு சத்தமில்லாமல் கலைகிறது.

தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து கல்லூரி மாணவரான செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல்கொடுத்து அவர் ஒரு குழுவை வழிநடத்துகிறார். இந்த எதிர்ப்பெல்லாம் வேண்டாம் என ஒதுங்கியிருக்கும் செழியன் தம்பியின் செயலைக் கண்டிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் என்னென்ன நடக்கிறது என்பதே பராசக்தியின் கதை.

Advertisement

Advertisement

இயக்குநர் சுதா கொங்கரா தமிழகத்தில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தைத் திரைப்படமாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானபோதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம், இன்றுவரை அந்நிகழ்வுகள் அனைத்தும் மொழிப்போராகவே பார்க்கப்படும் வேளையில் முக்கியமான வரலாற்று சம்பவத்தை எப்படி எடுக்கப்போகிறார்கள்? எடுத்தாலும் இன்றைய அரசியல் சூழலில் முறையாகத் திரைக்கு வருமா? என்றெல்லாம் பல கேள்விகள் படத்தைச் சூழந்து சுழன்றுகொண்டே இருந்தன. அக்கேள்விகளுக்கு, “மொழி என்பது வெறும் பேசுவதற்கான விஷயம் மட்டுமல்ல, அது பல உரிமைகளைச் சுமந்திருக்கிறது” என்கிற பதிலை வலுவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

சுதா கொங்கராவின் பிற படங்களை ஒப்பிட கருத்தியல் ரீதியாக அழுத்தமான விஷயத்தைத் தொட்டிருக்கிறார். மணிரத்னத்தின் உதவியாளராக இருந்ததால் ஆயுத எழுத்து போல மாணவர்களின் எழுச்சியைப் பேசும் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். அப்படி, இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கையிலெடுத்தவர் அதனை வீணடிக்கவில்லை. 1965-ல் பொள்ளாச்சியில் மொழித்திணிப்புக்கு எதிராக போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை ஆவணமாக்கியது முக்கியமானது.

அன்றைய காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும் மக்களை வதைத்துக்கொண்டிருந்த சூழலில் ஹிந்தி மொழித் திணிப்பு எவ்வளவு கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை பராசக்தியின் சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாக கடத்துகின்றன.

முக்கியமான வரலாற்றுப் பதிவைத் திரைப்படமாக எடுக்கும்போது புனைவுச் சுவாரஸ்யத்திற்காக ஏதேனும் காதல் காட்சிகளையோ அல்லது சண்டைக்காட்சிகளையோ திரைக்கதைக்குள் கொண்டு வருவது சாதாரணம்தான் என்றாலும் இப்படத்தின் காலளவை ஒப்பிட, முதல்பாகத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் ஸ்ரீலீலா காதல் காட்சிகள் கதையைச் சிதைப்பதுபோல் இருக்கிறது.

அங்கு சில நிமிடங்களை நீக்கியிருக்கலாம். மேலும், தமிழ் மொழிக்கான கதையில் கூடுதலாக தெலுங்கும் இணைந்துகொண்டது கொஞ்சம் நெருடல். மதுரை போன்ற காந்தியவாதிகள் சூழந்த ஊரில், அகிம்சை வழி போராட்டத்தையும் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஹிந்தி பிரச்சார சபா காட்டப்பட்ட அளவு ஏன் மதுரை தமிழ்ச் சங்கம் காட்டப்படவில்லை? திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் கூடுதல் பரபரப்பைக் கொடுத்திருக்கலாம்.

வசனங்கள் அழுத்தமாகவும் கவனமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஹிந்தி மொழித்திணிப்புக்கு எதிரான படமென்பதால் ஹிந்திக்கும் அதன் திணிப்புக்குமான வேறுபாடுகளைக் கூறும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, மு. கருணாநிதிக்கான காட்சிகள் அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல திரைப்படம். முதல்முறையாக அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில், மொழிப்பற்றுமிக்க கதாபாத்திரத்தில் ஏமாற்றமில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் ரவி மோகன் முழுமையான வில்லனாகவே தெரிகிறார். அதிக வசனங்கள் இல்லை; கண் பார்வையிலேயே தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்துவதிலும் மாணவர்களை ஒடுக்குவதிலும் சரியான நடிப்பு. ஆனால், இன்னும் கூடுதலான காட்சிகள் அமைந்திருக்கலாம்.

அதர்வாவுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். தன் சொந்த அண்ணனிடம் மொழித்திணிப்புக்கு எதிரான வசனங்களைப் பேசும்போது கவனம் ஈர்க்கிறார். இப்படத்தில் தெலுங்கு பெண்ணாக நடித்த ஸ்ரீலீலாவுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதனாலே, பல காட்சிகளில் ஸ்ரீலீலா தனியாகத் தெரிகிறார். உடல்மொழியும் வசனமும் நன்றாக பொருந்திருந்தது. முதல்வராக நடித்தவருக்குப் பதில் வேறு நல்ல நடிகரைப் பயன்படுத்தியிருக்கலாம்.

பிரபல நடிகர்களான ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லை. கேமியோ அளவில் நின்றுவிட்டன.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது 100-வது திரைப்படம். தமிழ் திரை இசைத்துறையில் தனித்துவமான இசையமைப்பாளராக ஜிவி, இதிலும் தன் அழகான, உணர்வுமிக்க பின்னணி இசைகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால், பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

1960-களின் காலகட்டத்தின் ஆடைகள், மக்களின் தோற்றங்கள், ரயில் நிலையங்கள், கட்டடங்கள் என கலைத்துறையில் பார்த்து பார்த்து பணியாற்றியிருப்பது தெரிகிறது. எந்த இடத்திலும் போலித்தனமான காட்சி என இருக்கக்கூடாது என்பதற்காக செட் அமைத்த விதமும் வாகனங்களைப் பயன்படுத்திய விதமும் நம்பகத்தன்மையை அளிக்கின்றன.

பல இடங்களில் தணிக்கை வாரியம் ஒலி சப்தத்தை தடை செய்யச் சொன்னதற்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் தடையும் செய்திருக்கிறது. ஆனாலும், என்ன சொல்ல வந்தார்கள் என்பது புரியும் வகையிலேயே இருப்பதால் அவை பெரிதாக பாதிப்பைத் தரவில்லை. நீக்க சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருந்தால் இப்படம் இன்னும் அழுத்தமானதாக இருந்திருக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களிலும் தீ போல் பரவிய மொழிப்பற்றில் செழியன் போன்ற பலரின் தொடர் போராட்டங்களாலும் இழப்புகளாலும் மொழியுரிமை எப்படி காக்கப்பட்டிருக்கிறது! ‘வாழ்க தமிழ்’ என எழுந்த ஒவ்வொரு குரல்களுக்குப் பின் தன் தாய் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளின் தன்மானமும் பற்றும் எத்தகையது? என நினைத்து பெருமூச்சு விட வைக்கிறது பராசக்தி!

summary

actor sivakarthikeyan's parasakthi movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments