FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இயக்குநர் பாலா - ஏழாம் உலகத்திலிருந்து எழுந்து வந்த கலைஞன்!

இயக்குநர் பாலாவின் பிறந்த நாளையொட்டி... அவரது திரைப்படங்கள் குறித்து...

Updated On : 11 ஜூலை 2026, 11:02 am IST
இயக்குநர் பாலா
பகிர்:

தமிழ் சினிமாவை இந்தியளவில் கொண்டு சென்ற படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவுக்கு இன்று பிறந்த நாள்.

இயக்குநர் பாலாவின் திரைப்படங்களைப் பார்த்தால் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஒரு உண்மை சுடுகிறது. அது, ‘வாழ்க்கையில் சீரழிவது என்பது மனிதனை மேலும் மனிதனாக்குவதற்குதான்’. ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப நிம்மதியான, சாதகமான முடிவை ஒரு கலைஞன் முன்வைத்துக்கொண்டே இருந்தால், என்ன நடக்கும்? எதுவும் நிகழாது. படம் முடிததும் பின்பக்கம் தட்டிக்கொண்டு எழுந்துவிட வேண்டியதுதான். குரூரமான உண்மைகளைச் சொல்லி, எதார்த்தம் இதுதான் என காயத்தை உண்டு பண்ணி ஒரு சிறிய சிந்தனையை வளர்க்க வைக்குமானால் அதைத்தான் கலை என்கிறோம். இயக்குநர் பாலா தமிழ் சினிமாவை தரதரவென அந்த காயத்தை நோக்கி இழுத்துச் சென்றவர். சரி, தவறுகளைக் கடந்து வாழ்க்கையை முன்வைத்து அதன் அசட்டு போக்குகளை நம்பி தன் கதாபாத்திரங்களை எழுதினார். பாலா படமென்றாலே இறுதியில் நெகடிவ் கிளைமேக்ஸ்தான் என நாம் மிகவும் குறுக்கி மதிப்பிட்டுவிட்டோம். பாலா படமென்றால் அங்கு நியாய, தர்மங்களுக்கு, பாவ, புண்ணியங்களுக்கு, சாமி, சடங்களுக்கு என எதற்கும் பெரிய இடமில்லை. அங்கு இருந்தது எல்லாம், அன்பின் வழியே, புறக்கணிப்பின் வழியே மனிதன் என்னவாகிக்கொண்டே இருக்கிறான் என்பதுதான்.

தமிழ் சினிமாவில் காட்டப்படாத அன்பும், புறக்கணிப்பும் இல்லை. ஆனால், பாலா காட்டிய அன்பையும் அதன் வீரிய இன்னொரு எல்லையையும் அவருக்கு முன்பும் பின்பும் இதுவரை யாரும் இவ்வளவு வலுவாகச் சொன்னதில்லை. ஒரு நல்லவனை அழிக்க கெட்டவன் தேவையே இல்லை. அந்த நல்லவன் தனக்குக் கிடைத்த நல்ல அன்பைப் பறிகொடுத்தாலே போதுமென தன் கதைகளைச் சொன்னார்.

Advertisement

Advertisement

சேதுவில் கோவிலே கதியென கிடக்கும் நாயகிக்கும் நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தும் நாயகனும் வாழ்க்கையைப் பறிகொடுப்பது அந்த அதீத அன்பினால்தான். காதல் திரைப்படங்கள் என்றாலே இறுதியில் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து கைதட்டு வாங்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒருத்தன் பைத்தியமாகவே மாறிவிட்டான் என திடுக்கிட வைத்தார். உண்மையில், அதைக் காதல் என எடுத்துக்கொள்வதைவிட அன்பு என்றே எண்ண வேண்டும். இன்னொரு மீது வைக்கும் எதிர்பார்ப்பற்ற அன்பு மிகக் கொடியது. அதில் பிரிவு என்பது வேதனையானது. அது எந்த எல்லைக்கும் நம்மை அழைத்துச் செல்வது.

நந்தாவில் யாரிடமும் முகம் கொடுத்து பேசவே விரும்பாத நாயகன், தன் அம்மா ஒரு வார்த்தை, சாப்பிட்டயா? எனக் கேட்க மாட்டாளா? என எண்ணி உருகிக்கொண்டே இருக்கிறான். நம் தாய்கள் நம்மிடம் பேசினால் முதலில் கேட்பதே சாப்பிட்டாயா என்பது தானே? தன் தாய்யின் மேல் வைத்த அன்பால் சொந்தத் தந்தையையே நந்தா கொல்கிறான். இப்படியொரு மகனா என் வயிற்றில் பிறந்தான்? எனக் குமுறும் தாய் அவன் பக்கமே செல்வதில்லை. என்ன ஆனான்? எப்படி இருக்கிறான்? எந்தக் கேள்விகளுக்கும் அவள் பதில் தேடவே இல்லை. ஆனால், மகன் ஒவ்வொரு நாளும் தாயைக் காண விழைகிறான். அவள் ஏதாவது பேசிவிடமாட்டாளா? என ஏங்குகிறான்.

படத்தின் முதல் பாடலான, எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதை பாடலை கவனியுங்கள். சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்ற பின் சிறுவன் நந்தா அம்மாவை நினைக்கும்போதெல்லாம் உணவு சார்ந்தே காட்சிகள் இடம்பெறும். அவள் இவனுக்கு ஊட்டிவிடுவது, இருவரும் சேர்ந்து வடகத்தை காய வைப்பது, அம்மா சமைக்கும்போது அவளை கட்டியணைப்பது, அவளுடன் இணைந்து மாவாட்டுவது... முதல் பாடலிலேயே பசி என்றாலே அம்மாதான் என மறைமுகமாகக் கூறிவிட்டு இறுதியில், அத்தாயே சோற்றில் விஷத்தைக் கொடுத்தது அறிந்தும், நீயே ஊட்டிவிடு என்கிறான். விஷத்தையும் கொடுக்கத் தயங்காதவள்தான் தாய் என்கிற அதிர்ச்சிகரமான உண்மையைச் சொன்னாலும் அவன் மீதிருந்த வெளிபடுத்தாத அன்பே அதைச் செய்யவும் வைத்திருக்கிறது என்கிற இன்னொரு உண்மையும் ஊசலாடிக்கொண்டிருக்கும்.

மனித உறவுகளில் மிகத்தீவிரமானது அன்புதான். அது கருணையைக் கொடுக்கும் அளவு வன்முறையையும் தரவல்லது என்பதை மீண்டும் மீண்டும் தன் திரைப்படங்களில் பாலா பதிவு செய்துகொண்டே இருந்தார். பிதாமகனில் வெட்டியானான விக்ரம் யாரிடமும் பேசாத, சிந்தனையே இல்லாத ஒருவர். மிருகத்தைத் தொட்டால் சீறும் குணம் கொண்ட மனிதனுக்கு நாயகன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அன்பு புகட்டப்படுகிறது. உர்ரென இருந்தவன், சிரிக்க ஆரம்பிக்கிறான். பிறரை அன்பு செலுத்த கற்கிறான். இறப்பு குறித்து எந்தப் புரிதலும் இல்லாதவஎன், யாரோ தன் நண்பனைக் (சூர்யா) கொன்று சாக்கில் கட்டி வீசியதைப் பார்த்தும்கூட சிறிய தயக்கத்தைத் தவிர வேறு எந்த உணர்வுகளும் அவனிடம் வெளிப்படுவதில்லை. நண்பனின் உடலை எரிக்கிறார்கள். தான் எரியூட்டிய பல உடல்களின் மண்டையொடுகளை எந்த அதிருப்தியும் இல்லாமல் பார்த்த விக்ரம், தன்னை அன்பின் வழி அழைத்துச் சென்ற நண்பனின் மண்டையோட்டைப் பார்த்து கதறித்துடிப்பார். உண்மையில், அவன் சித்தம் அங்குதான் கலங்கும். இப்படியெல்லாம் காட்சிகளை எழுத பாலாவால் முடிந்திருக்கிறது.

நான் கடவுள் படப்பிடிப்பில்...

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, ஏழாம் உலகம் நாவலைத் தழுவித்தான் நான் கடவுள் திரைப்படம் உருவானது. அதன் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு பாலா தன் உலகைக் கட்டமைத்தார். ஏழாம் உலகம் என்றால் பூமிக்கடியிலுள்ள பாதாள உலகம். அதில், இருள் மட்டுமே உள்ளது. அதனால்தான், நான் கடவுளில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் உடல் குறைபாடு கொண்டவர்களைச் சுரங்கம் போன்ற இடத்தில் அடைத்து வைத்திருப்பார். அங்கிருந்து ஒருவருக்கு விடுதலை என்பது என்னவாக இருக்க முடியும்? சிறு வயதிலேயே மகனைக் காசியில் விடுகிறது குடும்பம். பின், அவனைப் பெற்ற தாய் படும் வலியால் அவனைத் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார் அவனுடைய அப்பா. அழைத்து வந்தாலும் அவன் நம் பழைய மகன் இல்லை. அவனுக்குள் அன்பு இல்லை; அன்றாட வாழ்க்கை இல்லை. எந்த லொகீக ஏக்கமும் இல்லையென குடும்பம் உணர்ந்து விலகுகிறது. வாழ்க்கை முழுக்க கண் தெரியாமல் அவமதிப்பும், புறக்கணிப்பும் மட்டுமே வாழ்க்கையென வாழ்ந்துவரும் நடிகை பூஜா கதாபாத்திரம் இறுதியில் ஆர்யாவிடம் என்னால் வாழ முடியாது கருணை காட்டுங்கள் சாமி எனக் கெஞ்சுகிறாள். அத்தனை ரசிகர்கள் திரையில் பார்த்துக்கொண்டிருக்கும் போது கழுத்தறுக்கப்பட்ட பூஜா உயிர்விடும் காட்சி உறைய வைத்தது. வாழ முடியாதவர்களுக்கு நான் வழங்கும் வரம் இதுதான் என் கங்கையை நோக்கி ஆர்யா செல்கிறார். பாலா இயக்கிய திரைப்படங்களிலேயே நான் கடவுள்தான் மாஸ்டர்பீஸ். தன் ஏழாவது உலகத்தின் இருளிலிருந்து ஒளியை நோக்கி சென்றவர் பாலா.

இலக்கியத்தில், திரையில் எழுதும் எழுத்தாளர்கள் தன் ஆரம்ப காலங்களில் காதலைத்தான் பரிசுத்த உறவு என முன்வைப்பார்கள். இளமையின் தள்ளாட்டத்தில் படைப்பாளர்கள் எளிதாக விழும் உணர்ச்சி அதுதான். பாலா சேதுவில் அதைத்தான் சொன்னார். அடுத்த திரைப்படமான நந்தாவில் காதலை விட தாயின் அன்பு பெரிதில்லையா? என மோதிப்பார்த்து ஆயிரம் துளி அமுதென்றாலும் அதில் ஒரு துளி விஷம்தான் தாய்மை எனச் சொன்னார். காதலி, தாய் இவர்களைவிட பெரிய உறவு என்ன இருக்க முடியும்? இருக்கிறது என பிதாமகனில் நட்பைத் தூக்கிக்கொண்டு வந்தார். இனி வேறென்ன? அன்புக்கு ஏங்குதல் வாழ்க்கை இல்லை. ஆன்ம விடுதலையே வாழ்க்கை என உணர்ந்தவராக நான் கடவுளை இயக்கினார்.

அன்பு, அன்பு என ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அது எந்த உறவிலும் பரிபூர்ணம் கிடையாது. ஒன்று, பிரிந்து செல்வார்கள். இல்லையென்றால், மறைந்து செல்வார்கள் என்பதை பாலா தன் முதல் 4 திரைப்படங்களிலேயே வலுவாகச் சொல்லி, நான் கடவுளில் பற்றற்ற நிலையே பூர்ணம் என நகர்ந்துவிட்டார். ஒரு கலைஞன் தன் அகங்காரத்தை முக்தியைத் தவிர வேறு எங்கு வைத்து தேய்த்து கழுவுவது? நான் கடவுளில் பாலா அடைந்த இடம் அதுதான். எல்லாவற்றையும் விட்டு விலகுவதே உன்னத நிலையென கூறினார். கலையில், இந்த இடத்தை மிக விரைவாக அடைந்த தமிழ் இயக்குநர் வேறு யாராவது இருக்கிறார்களா? சரியாக சேதுவிலிருந்து நான் கடவுள் வெளியாகும் வரை (1999 - 2009) தன் முதல் பத்து ஆண்டுகளிலேயே கலைஞனாக பாலா உச்சத்தை அடைந்து அமர்ந்துவிட்டார். அதன்பின் பாலா இயக்கியவை எல்லாம் கதைகளைச் சொல்லத்தானோ ஒழிய, தன்னைச் சொல்ல அல்ல.

இயக்குநர் பாலா

நான் கடவுளுக்குப் பின் அவன் இவன், பரதேசி உள்பட கவனம்பெற்ற திரைப்படங்களை இயக்கினாலும் மனிதர்களின் மீதான தன்னுடைய பார்வையை, பொருளை அதற்கு முன்பே கூறிவிட்டார். நாச்சியார், தாரை தப்பட்டை, வணங்கானில் ஆயிரம் இருந்தாலும் பெண் என்பவள் ஒரு தாய்! அவளைச் சமூகம் எப்படியெல்லாம் பயன்படுத்தி வீச நினைக்கிறது என்கிற ஆதங்கத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அதில் ஒரே பாணியென கதைகள் அமைந்துவிட்டன. அதனால், சில விஷயங்கள் கைகூடாமல் போனது. ஆனால் என்ன? பாலாவுக்குப் பின் இந்திய சினிமா கண்ட அற்புதமான இயக்குநர்கள் பலரும் பாலாவின் திரைப்படங்களை வியக்காமல் இருந்ததில்லை. இவரால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் திரைப்படம் எடுக்க முடிகிறது? என எண்ணாத இயக்குநர்களும் இல்லை. இந்தியளவில் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் பாலாதான் என் நாயகன் என்கிறார்.

இன்று, இயக்குநராக ஆசைப்படும் இளைஞரின் முன்னுதாரணம் யாரெனக் கேட்டால், அவர்கள் சொல்லும் பதிலைக் கேட்டு, ‘வாழ்த்துகள்’ என்போம். பாலாதான் முன்னுதாரணம் என்றால் ஒரு கணம் ஏற, இறங்க பார்க்க வேண்டும். தன் கலை வழியே தன்னைக் காண்பதைவிட கலைஞனுக்கு பெரிய ஏக்கம் இருந்துவிட முடியாது. இயக்குநர் பாலா தன் கதைகளின், கதாபாத்திரங்களின் வழியாகத் தன்னை வளர்த்துக்கொண்டவர். சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன் அன்றும் இன்றும் தமிழ் சினிமாவின் பட்டத்து யானைகாவே பாலா காட்சியளிக்கிறார். அதன் அரிதாரங்களைக் கழற்றி சாலையில் நிற்க வைத்தாலும், முதலில் எழும் வியப்பு அது யானை என்பதே.

ஜூலை 11 - இயக்குநர் பாலா பிறந்தநாள்

Today marks the birthday of Director Bala, one of the creators who took Tamil cinema to the national level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments