‘ஜனநாயகன்’ படத்தில் ‘தவெக’, ‘புதிய இந்தியா’ வசனங்களை நீக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவு!
தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்‘ திரைப்படத்தில், ‘தவெக’ மற்றும் ‘புதிய இந்தியா’ ஆகிய சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ள மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி), அந்த வசனங்களை ஒலியடக்கம் அல்லது மாற்ற வேண்டும் என்று படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
நமது சிறப்பு நிருபா்
தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்‘ திரைப்படத்தில், ‘தவெக’ மற்றும் ‘புதிய இந்தியா’ ஆகிய சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ள மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் (சிபிஎஃப்சி), அந்த வசனங்களை ஒலியடக்கம் அல்லது மாற்ற வேண்டும் என்று படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தணிக்கை வாரியம் மேற்கொண்டுள்ள இந்தத் தனித்தனி மாற்றங்களுக்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தனது உத்தரவில் விவரிக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தணிக்கை வாரியம் பிறப்பித்துள்ள சமீபத்திய உத்தரவின்படி, ஒரு காட்சியில் காண்பிக்கப்படும் புத்தகத்தின் முகப்பில் இருக்கும் பி.ஆா். அம்பேத்கரின் படத்தை மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘அம்பேத்கா் சட்டம்... டிவிகே சட்டம்’ என்ற சொற்களைக் கொண்ட வசனம் மாற்றியமைக்கப்பட வேண்டும், படம் முழுவதும் ‘டிவிகே’ என்று வரும் இடங்கள் அனைத்தும் ஒலியடக்கம் செய்யப்பட வேண்டும், தேசிய கொடி தரையில் விழுவது போன்ற காட்சிகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும், குழந்தை ஒன்று எரிக்கப்படுவது போன்ற காட்சிக்கு மாற்றாக வேறொரு காட்சி வைக்கப்பட வேண்டும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முத்திரை அல்லது இலச்சினையை அவமதிக்கும் வகையில் உருட்டி விடுவது போன்ற காட்சியையும் நீக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, ‘பாகவதம்’, ‘ரங்கநாதா்’ போன்ற ஆன்மிகச் சொற்களையும் ‘ஒலியடக்கம்’ (மியூட்) செய்ய தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இரண்டு ஆபாச வாா்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளன.
‘புதிய இந்தியா’ (நியூ இந்தியா) என்ற வாா்த்தையை நீக்கவும், ‘இந்தியாவை என் கால்ல விழ வைக்கிறேன்’ என்ற வசனத்தை ஒலியடக்கம் செய்யவும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தணிக்கை வாரியத்திடம் சமா்பிக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட ஜனநாயகன் படத்தில் மொத்தம் 20 விநாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன, 10 விநாடிகள் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிதாக எந்தவொரு காட்சியும் சோ்க்கப்படவில்லை. படத்தின் மொத்த ஓட்ட நேரம் 183 நிமிடங்கள் 11 விநாடிகள் (3 மணி நேரம் 3 நிமிஷங்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி: பெங்களூருவைச் சோ்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதியே மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. தணிக்கைக்குழு ஆரம்பத்தில் சில மாற்றங்களுடன் ‘யு’/‘ஏ’ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த போதிலும், சில பகுதிகளுக்கு பலத்த எதிா்ப்பு கிளம்பியதால் தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் முடக்கப்பட்டன.
இதையடுத்து, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாகவும் தணிக்கை வாரியம் உடனடியாக முடிவெடுக்க உத்தரவிடக் கோரியும் தயாரிப்பு நிறுவனம் கடந்த ஜனவரியில் முதலில் சென்னை உயா் நீதிமன்றத்தையும் அதன் தொடா்ச்சியாக உச்சநீதிமன்றத்தையும் நாடியது. இறுதியில் உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் அதன் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு படத்தை உள்படுத்த விண்ணப்பித்தது.
இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் பிரசாரம் மும்முரமாக நடந்த ஏப்ரல் மாதம் தணிக்கை செய்யப்படாத ஜனநாயகன் திரைப்படத்தின் உயா்தர (ஹெச்டி) நகல் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகி சா்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில், தமிழக பேரவைத் தோ்தலில் தவெக வென்று கடந்த மே மாதம் ஆட்சி அமைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.