FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சினிமாவிலும் காவியத் தன்மையைப் பெற்றதா? தி ஒடிசி - திரை விமர்சனம்

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி திரைப்படத்தின் திரை விமர்சனம்...

Updated On : 17 ஜூலை 2026, 3:08 pm IST
தி ஒடிசி போஸ்டர்
பகிர்:

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய தி ஒடிசி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஹோமர் எழுதிய புராண காவியமான தி ஒடிசியைத் தழுவி அதன் பொருளும் கதாபாத்திரங்களும் மாறாத, அதே நேரம் தன்னுடைய வாழ்க்கைப் பார்வை, போர் குறிந்த சிந்தனைகளை ஒடிசியின் உலகிற்குள் நுழைத்து இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் அவரின் ஒடிசி வடிவத்தை திரைமூலம் சொல்லியிருக்கிறார்.

ஒடிசியின் கதை என்ன?

Advertisement

Advertisement

ட்ராய் நகரத்தின் மீது போர் தொடுக்கும் கிரேக்க படைகளுக்கு ஆதரவாகச் செல்லும் இத்தாகாவின் குறுநில மன்னனான ஒடிசியஸ், 10 ஆண்டுகள் இடைவிடாத போரில் இறுதியாக ட்ரோஜன் குதிரையை உருவாக்கி அதில் தன் வீரர்களுடன் ஒளிந்துகொள்கிறார். பின், அது பரிசுப்பொருள் என நம்பும் ட்ராய் வீரர்கள் அதனைக் கோட்டைக்குள் இழுத்துச் செல்கின்றனர். அங்கு திட்டமிட்டபடி ஒடிசி தன் வீரர்களுடன் ட்ராய் நகரை வெல்கிறான். பல ஆண்டுகள் நடந்த போர் முடிவுற்றதும், ஒடிசியஸும் அவனது வீரர்களும் நாடு திரும்ப படகுகளில் ஏறுகின்றனர். ஆனால், அவர்களால் நினைத்து போல் செல்ல முடியவில்லை. கடலின் கடவுளான பொசைடான், ஒற்றைக் கண் கொண்ட ராட்சச உருவத்தை எதிர்கொள்வது, சூனியக்காரியின் மந்திர வலையில் சிக்குவது என இயற்கையாலும் அதனை மீறிய அமானுஷ்யங்களையும் சந்திக்கும் ஒடிடி, தன் நாட்டிற்குத் திரும்புகிறானா, இல்லையா? அங்கு நம்பிக்கையுடன் காத்திருக்கும் தன் மனைவி, மகனைக் காண்கிறானா? என்கிற கதையில் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தன்னுடைய பார்வையையும் தத்துவ சிந்தனையும் இதில் இணைத்திருக்கிறார்.

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சினிமா மீதிருக்கும் பித்து தி ஒடிசியிலும் வெளிப்பட்டிருக்கிறது. வெறும் திரை வடிவமாக மட்டும் ஒடிசி இருக்கக் கூடாது என முழுத் திரைப்படத்தையும் இதற்கென்ற வடிவமைக்கப்பட்ட ஐமேக்ஸ் கேமராக்களை கொண்டு படமாக்கியிருக்கிறார். ட்ராய் கோட்டை வீழ்த்தப்படும் போதான போரில் தீப்பந்தம் போன்ற ஒளிகளைக் கொண்டு அதனைக் காட்சிப்படுத்திய விதம், தேவைக்கு அதிகமற்ற ஒலிக்கலவை என தொழில்நுட்ப ரீதியாகவே ஒடிசியில் நல்ல அனுபவத்திற்கான காட்சிகளை வைத்திருக்கிறார்.

படகில் துடுப்பிட்டபடி காற்றுடன் அலைகளுடன் சமர் செய்வது, கடலின் ஆக்ரோஷமான பக்கத்தைக் கதைக்குத் தேவையான அளவு சரியாகப் பயன்படுத்தியது, மனிதனுக்கு வீடு திரும்புதல் என்பது எந்த வகையான விடுதலையைக் கொடுக்கிறது என்கிற கேள்வியை முன்வைத்தது என நோலன் எங்கும் அதே நோலன் ‘டச்’ ஆகவே இருந்தார்.

மன்னன் ஒடிசியஸ் சாகச வீரன் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கொஞ்சம் புத்திசாலித்தனமும் அமைதியாக இருப்பதாலும் மட்டும் அவனால் எஞ்ச முடிகிறது. ஆனால், எஞ்சியவனுக்கு தன்னுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட மனிதர்கள், சீரழிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஒருபக்கம் குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர். படத்தின் ஆரம்பத்திலேயே ஒடிசியின் ட்ராய் வெற்றி குறித்த பாடல் பாடப்படும். இறுதியில், ஒடிசியஸ் அந்தப் போரால் தான் என்னவாக மாறினான் என்பதைச் சொல்லும்போது நோலனின் பார்வையில் இப்படம் தனித்துவமடைகிறது. கிரேக்க இதிகாசங்களில் கடவுள்கள், அரக்கர்கள், வினோத உயிரினங்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றனர்.

தான் வணங்கும் தெய்வமான சியூஸ்-ன் (zeus) நெறிகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கற்ற ஒடிசியஸ் தன்னுடைய பலவீனத்தின் போதெல்லாம் அதனை மீறுகிறான். இப்படத்தின் போஸ்டர் ஒன்றில், No creature on earth is weaker than man (உலகில் மனிதனைவிட பலவீனமான உயிரனம் வேறு எதுவுமில்லை) எனக் குறிப்படப்பட்டிருக்கும். தன் கீழ்மைகளாலும் ஆணவத்தாலும் மனிதன் தான் கற்ற நெறிகளைக் கடந்து செல்வதை அவனால் வெற்றியாகக் கொண்டாடவும் முடிகிறது. சம காலப் போர் பதற்றங்களைக் கணக்கில் கொண்டால், நோலன் என்ன சொல்ல வருகிறார் என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. திரை ரசனையாக இப்படம் வெறும் வீடு திரும்புதல் கதையாக மட்டுமல்லாது இறுதியில் அவன் வீட்டை முழுமையாக அடைந்தானா? என்கிற கேள்விகளை எழுப்புவது முக்கியமான பார்வை எனத் தோன்றுகிறது.

ஆனால், இப்படம் சில விமர்சனங்களைச் சந்திக்கவும் நேரிடலாம். காரணம், இது ஒடிசியின் முழுவடிவம் கிடையாது. நோலன் தனக்கான ஒடிசியின் குணங்களை எழுதி, அவனுக்காகக் காத்திருக்கும் நேர்மையான மனைவியுடன் இணைப்பது வரை இருவருக்கும் இடையேயான காதல் உன்னதமாகவே பதிவாகியுள்ளது. ஆனால், புராணத்தில் ஒடிசி வீடு திரும்பும் வழியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சூனியக்காரியான சிர்சே மற்றும் தீவில் தனக்கு உதவும் காலிப்சோ ஆகிய பெண்களுடன் உறவு கொள்கிறான். ஆனால், நோலன் திரைப்படத்தில் அப்படி எந்தக் காட்சியையும் வைக்கவில்லை. அது, ஒடிசிக்கும் அவனது மனைவி பெனேலோஃப்க்கும் இடையான பரஸ்பர நம்பிக்கை உணர்வு உடைந்துவிட்டால் இந்த வீடு திரும்புதலுக்கே அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும் என நினைத்திருக்கலாம். இது போல, ஒடிசி சம்பவங்கள் சிலவை விரிவாகவும் சொல்லப்படவில்லை. அதனால், நாவலை வாசித்த பலருக்கும் ஏமாற்றமாக அமையலாம்.

நடிகர் மேட் டாமன் ஒடிசியஸாக நடித்திருக்கிறார். வேட்கையும் தடுமாற்றமும் கொண்ட காட்சிகளில் ஒடிசியை வீணடிக்காத கதாபாத்திரத் தேர்வு. மனைவியாக நடிகை அன்னா ஹாத்தவே, மகனாக டாம் ஹாலண்டும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். கிளைமேக்ஸில் தன் கணவனிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என முகத்தைக் காட்டாமல் உணர்ந்தபடி அழும் காட்சி உச்சம். அந்த எமோஷனல் மிகச்சரியாக ரசிகர்களையும் சென்றடைவதை விசில் சப்தங்களில் கேட்க முடிந்தது.

முழுக்கவே ஐமேக்ஸ் கேமரா ஒளிப்பதிவு என்பதால் ஒளிப்பதிவாளர் ஹோதே வான் சிக்கலான காட்சிகளையும் அபாரமான ஒளியமைப்பைப் பயன்படுத்தி கச்சிதமாக எடுத்துள்ளார். ட்ராய் கோட்டைத் தகர்ப்பு காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் இன்னொரு நாயகன் எனத் தைரியமாகச் சொல்லக்கூடிய ஆள் இசையமைப்பாளர் லுட்விக் கிரான்சன். என்ன ஒரு இசை! வியக்காமல் இருக்க முடியவில்லை. காவியத் தன்மைகொண்ட கதையில் அன்றைய இதிகாச உலகைப் புரிந்துகொள்ள நாட்டார் இசைக்கருவிகளை முக்கியமான காட்சிகளில் ஒலி துல்லியத்துடன் அமைத்திருப்பது ஆச்சரியப்பட வைத்தது. பல காட்சிகளுக்கு இசையே இன்னொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இசைக்காகவும் ஒடிசிக்கு ஆஸ்கர் காத்திருக்கிறது.

கிறிஸ்டோஃபர் நோலனின் பிற திரைப்படங்களை ஒப்பிடும்போது, மெதுவாக நகரும் திரைக்கதையாக எழுதப்பட்ட இப்படம் (மெதுவாக இருக்கிறது என்பது விமர்சனம் அல்ல) ஒடிசியை நாயகனாக உச்சம் கொள்ளாமல் அவனும் பலவீனங்களால் தடுமாறும் சாதாரண வீரனே. விதி அவனை மட்டும் உயிருடன் விட்டது அதற்கு மேல் அவனுடைய தீரமான வேட்கை என எதுவும் இல்லையென மிகப்பெரிய கதையொன்றைத் தன் அடையாளம் மாறாதபடி வெற்றிகரமான படமாகவே நோலன் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

The film The Odyssey, directed by Christopher Nolan, has been released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments