இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பல்வேறு திரைப்படங்களில் இன்றும் பேசப்படும் வகையிலான வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்தவர் பாரதிராஜா..
பாரதிராஜா இன்று உலகை விட்டு மறைந்தாலும், உலகம் இருக்கும்வரை, அவர் படைத்த திரைப்படங்கள் எப்போதும் அவரது பெருமையைப் பேசிக்கொண்டேதான் இருக்கும். அவரது பெரும்பாலான படங்களில் மிக வலிமையான பெண் பாத்திரங்களை படைத்திருப்பார்.
படத்தின் கதையும், இயக்கமும் பேசப்படுவதுபோல, பல படங்களின் பெண் கதாபாத்திரங்களும் பேசப்படுகின்றன.
கமல் - ஸ்ரீதேவி - ரஜினி நடிப்பில் உருவான 16 வயதினிலே படத்தில் மயிலு கதாப்பாத்திரத்தைச் சுற்றித்தான் மொத்த படமும் இயங்கும். கதாநாயகி மட்டுமா? கதாநாயகியின் தாய் கதாபாத்திரமும் கூட படத்தின் பல காட்சிகளை ஆக்ரமித்திருக்கும்.
Advertisement
Advertisement
தன்னுடைய தாய் கருத்தம்மா பெயரில், பெண் சிசு அழிப்பை, சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த அவலத்தை சொல்லும் படமாக இயக்கினார். வழக்கமாக ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் என்றால், ஒரு நாயகிதான் பெரிய அளவில் பேசப்படுவார். ஆனால், இப்படத்தில் இரண்டு பேருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து படம் எடுக்கப்பட்டிருக்கும். கிராமத்து நாயகியின் பெருமைப் பேசும் படமாக இது அமைந்திருந்தது.
பெண்ணா என்று பிறந்தபோது குரலை உயர்த்தி, கடைசிக் காலத்தில் அந்த பெண் வீட்டில் மரியாதையுடன் வாழ்ந்து வந்த பல தகப்பன்களின் மனக்குரலாக ஒலித்தது கருத்தம்மா படம்.
மண் வாசனையில் ரேவதியின் கதாபாத்திரம் பேசிய வசனங்களும், அவரது கண் அசைவுகளையும் ரசிக்காத திரை ரசிகர்கள் இருக்க முடியுமா?
கிழக்குச் சீமையிலே, படத்தில் ராதிகா இல்லாமல் படத்தின் கதையே இயங்காது. எத்தனை ஆழமாக சகோதர - சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் படமாக இது அமைந்திருக்கும்.
கிழக்கே போகும் ரயிலே படத்தில் ராதிகாவை அறிமுகப்படுத்தி, அந்தக் கதாபாத்திரத்துக்கு மெருகேற்றி படத்தின் மையக்கருவே ராதிகா என்பதுபோலவே கதையை கொண்டு சென்றிருப்பார்.
முதல் மரியாதை படத்தில், கதாநாயகியாக இல்லாவிட்டாலும் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் மட்டும் என்ன அவ்வளவு சாதாரணமானதா? எத்தனை கடினமான வசனங்கள், நடிப்புகள் என பேசப்பட்டது.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் சுமிதாவின் கதாபாத்திரமும், அந்திமந்தாரை, வேதம் புதிது படங்கள் எல்லாமே வலிமையான பெண் கதாபாத்திரங்களால் பேசப்பட்டவையே.
தான் எடுத்த 16 வயதினிலே படம் பற்றி பாரதிராஜா ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்ட தகவலில், அந்தப் படம் ஓடுமா என்று பலரும் கேள்வி எழுப்பியதாகவும், படத்தைப் பார்த்த போது, தனக்கு ஒன்றுதான் தோன்றியது, என் மன நினறவுக்காக இந்தப் படத்தை எடுத்துவிட்டேன். அதுபோதும். படம் ஓடவில்லை என்றால், கிராமத்துக்குச் சென்று ஆடு, மாடு மேய்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.
ஆனால், படம் வெளியான அன்றே அது பேசப்பட்டது. பாரதிராஜா, பாரதிராஜா என மக்கள் பேசினார்கள். இயக்குநர் பாலச்சந்தர் முதல் ஆளாக படத்தைப் பார்த்து பாராட்டினார் என்று அவரே பகிர்ந்து கொண்டிருந்தார்.