✕
முகப்பு

பாபா சித்திக்கின் கொலையாளி பெயரில்..! பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து...

3 வினாடிகள் முன்பு
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்
பகிர்:

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு, பாபா சித்திக் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஜீஷான் அக்தர் பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் சைஃப் அலி கானுக்கும், மர்ம நபர்கள் குரல்பதிவு மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஜீஷான் அக்தரின் பெயரில், நடிகர் சைஃப் அலி கானுக்கு இந்த மிரட்டல் பதிவு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை காவல் துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, மும்பை காவல் துறை அதிகாரிகள் கூறுகையில்,

“நடிகர் சைஃப் அலி கானுக்கு செல்போன் மூலம் ஜீஷான் அக்தரின் பெயரில் ஒரு குரல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில், பாபா சித்திக்கிற்கு நேர்ந்த கதிதான் இவருக்கும் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்தச் செய்தி உண்மையில் ஜீஷான் அக்தரிடம் இருந்துதான் அனுப்பப்பட்டதா? அல்லது செய்யறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட குரல் பதிவை அனுப்பி மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில், பாலிவுட் நடிகர்கள் ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் துஷார் கபூர் ஆகியோருக்கு செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தியை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக, பெங்களூரைச் சேர்ந்த வைபவ் மிஷ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் சைஃப் அலி கானின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Bollywood actor Saif Ali Khan has received a death threat in the name of Zeeshan Akhtar, a wanted suspect in the murder case of Baba Siddique.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.