அறிமுக இயக்குநராக வென்றாரா ஜேசன் சஞ்சய்? சிக்மா திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைவிமர்சனம்...
இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் சந்தீப் கிஷன், பரீனா அப்துல்லா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், சம்பத் ராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார்.
தனது தாயின் நினைவாக நூலகத்தை நடத்திவரும் சந்தீப் கிஷன் தன்னுடைய தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறார். தாயின் நூலகத்தைக் காப்பாற்ற உடனடியாக கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
எப்படியாவது கடனை அடைக்க விரும்பி சூதாட செல்லும் சந்தீப் கிஷன் அங்கும் சிவ் பண்டிட்டால் ஏமாற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறார். இந்நிலையில் சூதாட்ட கிளப்பில் சிவ் பண்டிட் போதைப்பொருளை புழக்கத்தில் விடும் விடியோ காட்சிகள் அடங்கிய பெண்டிரைவ் சந்தீப் கிஷனுக்கு கிடைக்க இதை வைத்து சிவ் பண்டிட்டை மிரட்டி பணம் பறிக்க நினைக்கிறார் அவர்.
சந்தீப் கிஷனுக்கு கிடைத்த பெண்டிரைவில் வில்லன் சம்பத்தின் 1000 கோடி லாக்கரின் சாவியும் மாட்டிக் கொள்ள அதை பறிக்க நினைக்கிறது வில்லன் கும்பல்.
சந்தீப் கிஷன் எப்படி தனது கடனை அடைத்தார்? வில்லன்கள் சந்தீப் கிஷனிடமிருந்து அந்த லாக்கர் சாவியை மீட்டனரா? இல்லையா? என்பதே சிக்மா திரைப்படத்தின் கதை.
நாயகனாக வரும் சந்தீப் கிஷன் இத்திரைப்படத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் கடனை அடைக்க முயற்சிப்பதில் தொடங்கி, சிவ் பண்டிட்டிடம் மிரட்டி பணம் பறிக்க முயலும் வரையிலான அவரது நடிப்பு படத்தைப் பார்க்க வைக்கிறது. துடிப்பான நாயகியாக வந்திருக்கிறார் நடிகை பரீனா. ரேடியோ தொகுப்பாளராக நடித்திருக்கும் அவருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை. முதல் பாதியில் சந்தீப்புடன் வரும் காட்சிகளைத் தவிர்த்து அவருக்கான அழுத்தமான இடங்கள் என எதுவும் இல்லை.
இவர்களுடன் நடிகர்கள் அன்பு தாசன், ராஜூ சுந்தரம், ஷீலா ராஜ்குமார், யோஹ் ஜாபி, மகாலட்சுமி சுதர்சனன் என பலர் நடித்துள்ளனர். துறுதுறுவென வரும் அன்புதாசன் கதாபாத்திரம் அளவிற்கு ராஜூ சுந்தரத்தின் நடிப்பு ஈர்க்கவில்லை. மகாலட்சுமியின் வில்லித்தனமான நடிப்பு கவனிக்கும்படி அமைந்திருக்கிறது. வில்லன் சம்பத், சிவ் பண்டிட் ஆகியோரும் நடிப்பு மிரட்டலுடன் அச்சமூட்டும் வகையில் இன்னும் அமைக்கப்பட்டிருக்கலாம்.
முதல் பாதி கதைக்குள் நம்மை அழைத்து செல்வதில் சிறப்பாகவே எழுதியிருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய். இரண்டாம் பாதியில் எழும் கேள்விகளுக்கு முதல் பாதியில் காட்சிகள் அமைத்தது சாமர்த்தியம். அதே சமயம் முதல் பாதியுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாதி சற்று நீளமானதாக உள்ளதைப் போன்ற எண்ணம் ஏற்படுகிறது.
படத்திற்கு நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தது பெரிய பலம். இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் என தேவையான சரியான உழைப்பைக் கொடுத்திருக்கிறது படக்குழு.
லாஜிக் மீறல்கள், விறுவிறுப்பற்ற திரைக்கதை, தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு சிக்மா நல்ல அறிமுகமே.
Did Jason Sanjay succeed as a debut director? 'Sigma' Movie Review.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.