அனிருத், சாய் ஆதிக்கம்... ஏ. ஆர். ரஹ்மான், ஹாரிஸ், யுவன், இமான் எங்கே?
ஆதிக்கம் செலுத்தும் இளம் இசையமைப்பாளர்கள்....
இசையமைப்பாளர்கள் அனிருத், சாய் அபயங்கரை நோக்கியே திரைப்பட வாய்ப்புகள் சென்றுகொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் இப்போது எங்கு திரும்பினாலும் சாய் அபயங்கரின் பெயரைத்தான் பார்க்க முடிகிறது. சும்மா சின்ன பையன் வந்த வேகத்தில் சென்றுவிடுவார் என சாய் முதல் படத்தில் ஒப்பந்தமான போது புலம்பல்கள் தென்பட்டன. ஆனால், சாய் அபயங்கரின் இசைகளைப் பார்த்தால், அதற்கெல்லாம் வாய்ப்பில்லை... இளையராஜா, ரஹ்மான், அனிருத், அதற்குப் பின் நான்தான் என்கிற அளவு அபாரமான வளர்ச்சியில் இருக்கிறார்.
திரைப்பாடல்கள், பின்னணி இசைகள், ஆல்பம்கள் என அனைத்திலும் சாய் அபயங்கரின் தனித்துவம் தெரிய, ரசிகர்களும் அவரின் இசையில் ஏதோ இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள தொடங்கியிருக்கின்றனர். இன்னொரு புறம், சாய் அபயங்கர் வந்தாலே பாடல்கள் ஹிட்தான் என்கிற நம்பிக்கைகளும் தயாரிப்பாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டன.
Advertisement
Advertisement
அண்மை உதாரணம், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம். இப்படத்திற்காக சாய் இசையமைத்த செல்லமே மகளே, ஊரோட ஒத்த டான் பாடல்கள் ’ஹிட்டோ ஹிட்’. சொல்லப்போனால், இப்படத்தைக் காப்பாற்றிய பங்கில் சாய்க்கும் முக்கிய இடமுண்டு. இவர் பணியாற்றிய டியூட், கருப்பு, பத்தா மூன்றும் வெற்றிப்படங்களாவிட்டன. அடுத்ததாக, சாய் இசையமைப்பில் ஓம், ராக்கா, பென்ஸ், மார்ஷல், எஸ்கே - 27 மற்றும் தனுஷ் - 56 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் கூடுதலாக எதிர்பார்ப்பும் இருக்கிறது.
இன்னொரு புறம் யார் வந்தாலும் என் இடம் தனி இடம் என்பது போல் அனிருத்தும் கம்பீரமாக இருக்கிறார். அவர் இசையமைப்பில் இறுதியாக வெளியான டிசி திரைப்படம் இசைக்காவே அதிகம் கொண்டாடப்பட்டது. நானி நடித்த தி பாரடைஸ் திரைப்படத்தைக் காப்பாற்றிய பங்கில் பெரும்பகுதி அனிருத்க்கு சொந்தமானதுதான். தற்போது, அனி இசையமைப்பில் ஜெயிலர் - 2 திரைக்கு வருகிறது. தொடர்ந்து, அரசன், அல்லு அர்ஜுன் திரைப்படம் மற்றும் ஏகே - 64 ஆகியவை கைவசம் இருக்கின்றன. இதுபோக, தர்மன் திரைப்படம்!
இப்படி, தமிழ் சினிமாவில் உருவாகும் பெரிய திரைப்படங்கள் இந்த இருவர் வசமே சென்றுகொண்டிருக்க இசையமைப்பாளர்கள் ஏ. ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, டி. இமான் எல்லாம் எங்கே போனார்கள் என்கிற குரல்களும் எழுந்துள்ளன. டிரெண்டிங், வைரல், ஜென் ஸீ தலைமுறை காரணங்களால் ஜாம்பான்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
ரஹ்மான் இயக்குநர் மணிரத்னத்தின் இஞ்சி வெல்லம் மற்றும் ராமாயணா படங்களுக்கு இசையமைக்கிறார். யுவன் சங்கர் ராஜா மினிமம் பட்ஜெட் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார். அதிலும் கடந்த காலங்களில் யுவனிடமிருந்து காத்திரமான இசைகள் வரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 4 படங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அனைத்தும் பிளாப்! இசையமைப்பாளர் இமானுக்கும் இதே நிலைமைதான். சந்தோஷ் நாராயணன் இன்னும் களத்தில் இருக்கிறார். அவர் கைவசம் சேயோன், துருவ்வின் ஜாக்கி ஆகிய படங்கள் இருக்கின்றன. பார்ப்போம்.
அனிருத் மற்றும் சாய்யின் ஆதிக்கத்தால் சீனியர் இசையமைப்பாளர்கள் மெல்ல, மெல்ல காணாமல் ஆகிறார்களோ என்கிற கவலை ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதே நேரம், இந்த அலைகளுக்கு மத்தியில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தப்பித்திருக்கிறார். தெலுங்கிலும் தமிழிலும் ஜிவிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இருமுடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மண்டாடி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், சொல்லிக்கொள்ள இசையமைப்பாளர்கள் சாம் சிஎஸ் மற்றும் சான் ரோல்டனுக்கு வாய்ப்புகள் அமைகின்றன. இதில் சான் கதையம்சமுள்ள சின்ன படங்களுக்குத் தொடர்ந்து இசையமைக்கிறார்.
முக்கியமாக, எந்த தலைமுறை வந்தாலும் சரி, போனாலும் சரி நான் இருக்கிறேன் என இளையராஜாவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுகு இசையமைத்துதான் வருகிறார். இறுதியாக, டோரதிக்கு நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தார். அடுத்ததாக, மாரி செல்வராஜின் மஞ்சணத்தி திரைப்படத்திற்குப் பணியாற்றுகிறார். இதுபோக, இயக்குநர் பால்கி திரைப்படமும் கைவசம் உள்ளது.
Film opportunities are increasingly coming the way of music composers Anirudh and Sai Abhyankar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.