ரஜினியின் ஜெயிலர் 2 விமர்சனம்: 'விசில்கள்' பறக்கும் திரையரங்குகள்!
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 விமர்சனம் பற்றி...
‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’ என்ற வசனத்துடன் ஜெயிலர் 2 திரைப்படம் முடியும் நிலையில், ‘போய் தியேட்டரில் படத்தைப் பாருங்க ஜி’ என்றுதான் விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே ஜெயிலர் 2 இருக்கிறது. குடும்பத்துடன் கோவை தடாகம் பகுதியில் வசித்து வருகிறார் ஜெயிலர் ரஜினி.
டிரெய்லரில் வந்தது போல, வர்மனைக் கொன்றவரைத் தேடுகிறது வர்மனின் கூட்டாளிகள் குழு. ஆனால், முதல் பாகத்தில் வர்மனுக்கு மேலே இருப்பவர்களை ஜெயிலர் கண்டுபிடிக்கவில்லை அல்லவா?
Advertisement
Advertisement
ஜெயிலர் 2வில் அதைச் செய்கிறார் ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன்.
வர்மனின் கூட்டாளிகளுக்கு ஜெயிலர் கிடைக்கிறாரா? ஜெயிலரைத் தேடும் வர்மனின் கூட்டாளிகள் ஜெயிலரால் கண்டுபிடிக்கப்படுகிறார்களா? எந்தப் புள்ளியில் சந்திக்கிறார்கள்? சந்தித்த பின் என்ன ஆகிறது? என்பதே ஜெயிலர் 2 கதை.
முதல் பாதியில் அதகளம் செய்திருக்கிறார்கள். நெல்சன் தனக்கே உண்டான பாணியில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்.
மூர்த்தி கதாபாத்திரம் நிச்சயம் கலக்கலாக இருக்கிறது. யோகி பாபு மற்றும் பியோர்ன் சுர்ராவ் காமெடிக்குக் கைகொடுத்திருக்கிறார்கள். சூரஜ் முதல் பாதியில் தனது உடல்மொழியால் ஈர்க்கிறார்.
முதல் பாதி முழுக்க ஜாலியாகச் சென்று மாஸில் முடிகிறது.
இடைவேளைக்கு முன்பு அந்தப் பாடலைத் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம். ஆமாம், அந்தப் பாடல்தான். ஆனால், எத்தனை டெக்கேடுகள் ஆனாலும் ரஜினி ரஜினிதான். பெரிய சண்டை செய்யாமலேயே மாஸ் எலிவேஷன் உணர்வைத் தருவது சாதாரண காரியம் அல்ல. ரஜினி தனது ஆரா மூலம் அசால்டாக மாஸ் உணர்வை ரசிகர்களுக்குக் கொடுக்கிறார். அதே சமயம் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
அனிருத் பற்றி என்ன சொல்வது? அவர் ரஜினி படத்துக்குத் தேவையானதை கச்சிதமாக டெலிவர் செய்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் கதைக்களம் வேறு இடத்துக்கு நகர்கிறது. முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ஜெயிலர் படத்துக்கான டெம்ப்ளேட்டில் இருக்கிறது இரண்டாம் பாகம். மாஸாக இருந்தாலும், எமோஷன்ஸில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். மகனைக் கொன்ற தந்தை என்ற உண்மைகள் வெளியாகும் தருணத்தில் எமோஷன்ஸ் ஒர்க் ஆகவில்லை.
ஆனால், ரஜினி மிரட்டியிருக்கிறார். பர்த்டே பார்ட்டியில் மாஸ் காட்டுவதாகட்டும், வித்யா பாலனிடம் நக்கல் அடிப்பதாகட்டும், எல்லாமே சூப்பர். வித்யா பாலன் கதாபாத்திரம் கதைக்குச் சிறப்பாகவே உள்ளது. கூடுதல் காட்சிகள் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வரும். ஆனால், வித்யா பாலன் கேரக்டரைக் கொண்டு வெயிட்டான ஒன்றை மூன்றாம் பாகத்தில் செய்ய நெல்சன் காத்திருக்கிறார். அது நலம்.
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இப்படத்திலும் கேமியோவாக வந்து ஜெயிலருக்காகத் தங்கள் பணியை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். கடைசி ஃப்ரேம் ‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’ மொமென்ட்.
எஸ்.ஜே. சூர்யா நன்றாகச் செய்திருந்தாலும், ரஜினி கதாபாத்திரத்துக்கு வலு கூட்டும் வகையிலான காட்சிகளில் மட்டுமே வருவது போன்ற உணர்வு வருகிறது. காரணம், அதே காட்சிகள் போன்றவை திரும்பத் திரும்ப வருகின்றன அவருக்கு. ரஜினி சரிவில் இருக்கும்போது மீட்கப் புதிய பாலிவுட் கதாபாத்திரம் இருக்கிறது. நன்றாக இருந்தாலும், கொஞ்சம் கதையில் துருத்தலாக இருந்தது.
இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தாலும், ஒட்டுமொத்தமாக மாஸாக வந்திருக்கிறது ஜெயிலர் 2. ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு ட்ரீட்!
ஜெயிலர் 2 திரைப்படம், முதல் பாகத்தின் வெற்றிகரமான தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் உலகத்தை மேலும் விரிவுபடுத்தும் படமாகவும் அமைந்திருக்கிறது. நெல்சனின் நகைச்சுவை, ரஜினியின் மாஸ், அனிருத்தின் இசை ஆகியவை இணைந்து ரசிகர்களுக்கான முழுமையான திரை அனுபவத்தை உருவாக்குகின்றன.
ஜெயிலர் கதாபாத்திரத்தை வைத்து தொடர்ச்சியாகக் கதைகளை எழுதலாம். எழுதக்கூடிய அளவுக்கு வலு இருக்கிறது அக்கதாபாத்திரத்துக்கு. ஜெயிலருக்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்குவாரா நெல்சன்? உருவாக்கினால் நன்றாக இருக்கும்.
மொத்தத்தில், இன்றைக்கும் என்றைக்கும் ஒரு ரஜினிதான்!
Superstar Rajini's Jailer 2 Movie review in Tamil | Jailer 2 rating | திரையரங்குகளில் 'விசில்கள்' பறக்கும்: ரஜினியின் ஜெயிலர் 2 விமர்சனம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.