எதிர்பாரா ஆச்சர்யம் தருமா டெலிவரி பாய்? திரைவிமர்சனம்
இயக்குநர் நானி இயக்கத்தில் நடிகர்கள் லியோ சிவக்குமார், ப்ரகிடா சாகா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்...
இயக்குநர் நானி இயக்கத்தில் நடிகர்கள் லியோ சிவக்குமார், ப்ரகிடா சாகா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது டெலிவரி பாய் திரைப்படம்.
கோவையில் உணவு டெலிவரி செய்யும் தொழிலாளியாக இருக்கும் நாயகன் லியோ சிவகுமார் காவல்துறை வேலைக்காக முயற்சித்து வருகிறார். இதற்கு மத்தியில் கௌதம் எனும் நபரை சந்திக்க சென்னைக்கும் அவ்வப்போது செல்கிறார். அவர் எதற்காக சென்னைக்கு செல்ல வேண்டும்? யார் அந்த கௌதம்? இருவருக்கும் என்ன தொடர்பு என்பதை சுவாரஸ்யமான கதையுடன் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறது டெலிவரி பாய்.
நாயகனாக நடித்துள்ள லியோ சிவகுமார் மீட்டர் மீறாத நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். டெலிவரி பாய் வேலை தொடங்கி தாய் ராதிகா சரத்குமாருக்காக ஓடோடுவதும், ப்ரகிடாவிடம் காதலுக்காக காத்திருப்பதும் என ஜனரஞ்சகமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் லியோ சிவக்குமார். பெரிய வசனங்கள் ஏதுமின்றி ஒரு சில காட்சிகள் மட்டும் வந்து சென்றிருக்கிறார் ப்ரகிடா. இத்துடன் ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்வந்த், உதயா தீப் என மற்ற நடிகர்களும் ஏமாற்றம் கொடுக்கவில்லை.
Advertisement
Advertisement
முதல் பாதி, கதை என்ன என்பதை நாம் கவனிப்பதற்கு முன்பாகவே முடிந்து விட்டாலும் காதல், தேடல், எளிய குடும்பத்துக்கான நிதிச்சிக்கல் என காட்சிகளுக்கு காட்சி வலு சேர்க்கிறது எழுத்து. முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் திரைப்படம் விறுவிறுப்பாக நகரத் தவறவில்லை. வில்லன்கள் என கும்பலாக வரும் ஏழு பேர் கொண்ட படை படத்திற்கு வில்லத்தனத்தை சரியாக பூசியிருக்கிறது. ’நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் வரும் வில்லக்கூட்டத்தைப் போல சரியாகவே எடுபட்டிருக்கிறது அவர்களின் நடிப்பு.
இரண்டாம் பாதியில் நீளும் காட்சிகள் கிளைமாக்ஸ் காட்சியைக் கணிக்கத் தூண்டுகிறது. இறுதி காட்சி இதுதான் என எதிர்பார்த்திருந்தாலும் யாரும் வில்லன்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது எனும் பதற்றம் பார்வையாளர்களுக்கும் தொற்றிக் கொள்வதே படத்தின் வெற்றி. கிளைமேக்ஸை சண்டைக் காட்சிகளால் சாத்தியப்படுத்தி காட்டி இருக்கிறது டெலிவரி பாய். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன. பாடல்கள் பெரிதாக கவனிக்கும்படியாக இல்லை.
ரவுடிகள் கூட்டம் என்றவுடன், காலனி பகுதிகளைக் காட்டும் கேமரா தவிர்த்திருக்கப்பட வேண்டியவை. பிரதிபலன் பார்க்காமல் உதவும் காட்சிகள் சிறப்பானவை என்றாலும் லாஜிக் மீறல்களுக்கு வழி கொடுக்கும் இடங்களும் அதுவே. எனினும் பயன் எதிர்பாராமல் செய்யும் உதவி நம்மை எப்படி காக்கும் என்பதை திரை மொழியாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறது டெலிவரி பாய்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வோருக்கு ’டெலிவரி பாய்’ ஆச்சரியம் கொடுக்கும்.