✕
முகப்பு
திரை விமரிசனம்

கவிதையான காதல் கதை ஹைக்கூ! திரை விமர்சனம்

ஏகன், ஃபெமினா சார்ஜ், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹைக்கூ திரைப்படத்தின் விமர்சனம் தொடர்பாக...

Updated On : 23 அக்டோபர் 2026, 8:30 am
ஹைக்கூ போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

விஷன் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஏகன், ஃபெமினா சார்ஜ், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் ஒரு நடிப்பில் வெளியாகியிருக்கிறது ஹைக்கூ திரைப்படம்.

காதலியால் கைவிடப்பட்ட நாயகனுக்கும், காதலனால் மன சித்திரவதைக்கு உள்ளான கதாநாயகிக்கும் இடையே மலரும் காதல் என்ன ஆனது என்பதே ஹைக்கூ திரைப்படத்தின் கதை.

சென்னையில் பெரிய ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் மனோவாக வரும் கதாநாயகன் ஏகன். அங்கு அவரது குழுவில் பணிக்காக இணைகிறார் நிவி எனும் கதாநாயகி ஃபெமினா. இருவரும் தங்களது கடந்த கால காதல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இறுதியில் இருவருக்கிடையேயும் காதல் மலர்கிறது. எனினும் இவர்களது காதலுக்கிடையே ஒரு அவநம்பிக்கை கதாநாயகிக்கு ஏற்பட என்ன அந்த அவநம்பிக்கை? அதை மீறி அவர்களது காதல் கைகூடியதா இல்லையா என்பதே ஹைக்கூவின் எஞ்சிய கதை.

Advertisement

Advertisement

கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஏகன் இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நிதானமான அதேசமயம் பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஏகன். பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மட்டும் படிக்கும் நபராக தொடங்கும் அவரது நடிப்பு பெரிய நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இடங்களில் மெருகேறி இருக்கிறது. காதலிக்காக ஆத்திரப்படுவது, ஏங்குவது, அனுசரிப்பது என அவரது மாறுபட்ட நடிப்பு படத்திற்கு நம்பிக்கை தருகிறது. இரண்டாம் பாதியில் அதீத உணர்வுகளை வெளிப்படுத்தாமல் காட்சிக்கு தேவையான அவரது உடல் மொழி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

வெகுளியான பெண்ணாக வந்திருக்கிறார் நாயகி ஃபெமீனா. மின்னல் முரளி உள்ளிட்ட பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சென்னைக்கு புதிதாக வந்த கோவை பெண்ணாக அவர் நடிக்கும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். காதல் எனும் பெயரில் எமோஷனல் சிறைக்குள் வாழும் பெண்ணாக அவர் அச்சப்படும் இடங்கள் தொடங்கி சின்னச் சின்ன எதிர்பார்ப்புகளுக்கு காத்திருப்பது என அத்தனை உணர்ச்சிகளையும் திரையில் கடத்தி இருக்கிறார். நம்பிக்கைக்குரிய வரவு.

இரண்டாம் பதி முழுக்க ஃபெமினா ஆக்கிரமித்திருந்தால் முதல் பாதியில் ஸ்ரீதேவி கையிலெடுத்திருக்கிறார். சாதிக் கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த பெண் எனும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது.

இவர்களுடன் நடிகர்கள் சேது, அதிர்ச்சி அருண், சபரீசன் என்ன பலர் நடித்துள்ளனர். நண்பர்களாக வரும் சேது மற்றும் அதிரடி அருணின் நடிப்பு இயல்பானதாக இருக்கிறது. முதல் பாதியில் நண்பர்கள் இடையேயான நக்கல் பேச்சுக்கள் நகைச்சுவைக்கு கை கொடுத்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் அதிர்ச்சி அருணின் ஒரு எமோஷன் காட்சி ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

ஆணாதிக்கம் கொண்ட காதலனாக வரும் சபரீசன் நடிப்பு பல பெண்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒத்துப் போகலாம். குறைவான காட்சிகள் கிடைத்திருந்தாலும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சபரீசன்.

இத்துடன் படத்தின் மிகப்பெரும் பக்கபலமாக இசையும், ஒளிப்பதிவும் அமைந்துள்ளன. சித்து குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. காதல் காட்சிகளுக்கு தேவையான அழகான இசையை கொடுத்த அதே சமயம் சோகக் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். படத்தை தூக்கி நிறுத்தியதில் ஒளிப்பதிவிற்கு முக்கிய பங்குள்ளது.

திரைக்கதையை பொருத்தமட்டில் நான் லீனியர் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் விஷயங்களை காட்சிப்படுத்திருப்பதால் பலருக்கும் இது ஒத்துப் போகலாம். முக்கோண காதலை குழப்பம் ஏற்படுத்தாத வண்ணம் புரியும்படி அமைத்திருப்பது படத்திற்கு பலம். முதல் பாதியில் இரம்மியமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் சற்று எதிர்பார்த்த காட்சிகளால் சுவாரசியம் குறைகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் ஏகன் ஃபெமினா இடையே நடைபெறும் சண்டையின் விஸ்வரூபத்தின் மீது கேள்வி எழுப்புகின்றன . சில முன் கணிக்கக்கூடிய காட்சிகளைத் திருத்தி அமைத்திருந்தால் செம்மையாக இருந்திருக்கும்.

அதேசமயம் ஆரவாரமற்ற ஒரு காதல் கதையாக நல்ல தொழில்நுட்ப அம்சங்களுடன் கவனிக்கும்படியாக வந்திருக்கும் ஹைக்கூவிற்கு காதலர்களின் குட் புக்கில் கட்டாயம் இடம் உண்டு.

summary

Haiku, a film produced by Vision Film House and starring actors Egan, Femina Charg, and Sridevi, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments