முகப்பு

தமிழகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து

தமிழகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

25 நவம்பர் 2026, 5:30 am
தமிழகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து
- பிரதிப் படம்
பகிர்:

ஆக்கிரமிப்பால் அவதி

மக்களுக்குப் பலனளிக்கும் வகையில், அரசு பல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதில் சில இடையூறுகள் உருவாக்கப்படுகின்றன. அதிலொன்றுதான் நடைபாதைக் கடைகள். இதனால், பொதுமக்கள் நடைபாதைகளைப் பயன்படுத்த முடியாமல் சாலைகளில் நடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாதசாரிகள் மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.

என்.வி. சீனிவாசன், புதுபெருங்களத்தூர்.

Advertisement

Advertisement

கண்காணிப்பு தேவை

நடைபாதைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டவை. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் நடைபாதைகளை விட்டு சாலையில் இறங்கி நடப்பதால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. கடைகள், விளம்பரப் பலகைகள், வாகன நிறுத்தங்கள் எனப் பல்வேறு ஆக்கிரமிப்புகள் பாதசாரிகளின் உரிமைகளைப் பறிக்கின்றன. நடைபாதைகள் ஆக்கிரமிப்பின்றி இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பி. ராஜன், மதுரை.

வானிலை அறிக்கைபோல...

ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் பல முறை நோட்டீஸ் அனுப்புவதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் ஒரு சடங்காகவே மாறிவிட்டது. ஒரு முறை அகற்றிய பிறகு மறுமுறை ஆக்கிரமித்தால் கடுமையான தண்டனை என்று சட்டத்தை மாற்றினால், ஓரளவு பலன் தரும். இல்லையெனில், நீதிமன்றம் கூறுவதும் சடங்குதான். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற முனைவதும் சடங்குதான் என்றாகி, உயர்நீதிமன்ற உத்தரவுகள்கூட வானிலை அறிக்கைக்கு சமமாகி விடும் என்பதுதான் இதுவரையிலான கள எதார்த்தம்.

எஸ்.எல். ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு.

உத்தரவு சரிதான்

நடைபாதை வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்கள் நடந்து சென்றால்தான் வியாபாரம் நடக்கும். மக்களுக்குப் பாதையில்லை என்று சொன்னால் கடை இருந்தும் எப்படி விற்பனை ஆகும். எனவே, இரண்டு பக்கங்களையும் கவனித்து நடைபாதை வியாபாரிகளுக்கு தகுந்த இடத்தையும் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லவும் வழிவகை செய்து தருவது அரசின் தலையாய கடமை. எனவே, நீதிமன்ற உத்தரவு சரிதான்; அதேவேளை நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும்.

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

மாற்று இடங்கள் தேவை

பாதுகாப்பான பயணம் என்பது பொதுமக்களின் அடிப்படை உரிமையும்கூட. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை. நடைபாதை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். அது ஏழை மக்களாக, சிறு வியாபாரியாக இருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்ய வேண்டும். நடைபாதையில் ஆக்கிரமிப்பு நிகழாத வகையில் கண்காணிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை தொடர் கண்காணிப்பு மூலம் நிலைநிறுத்துவது அவசியம்.

உதயா ஆதிமுலம், திருப்போரூர்.

வாழ்வாதாரமும், பாதுகாப்பும்...

தமிழ்நாடு முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில், வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற இடங்களில் தற்போது நள்ளிரவு நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதால், அங்கு கடைகள் அமைப்பது மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கும்; இது சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதுடன் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு உணர்வையும் தரும்.

ர. மகேஸ்வரன், சென்னை.

கடைகளுக்கு தனியிடம்

பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் காத்திருக்க இடவசதியே இல்லை. பேருந்து நிறுத்தத்திலேயே கடைகளை விரித்து ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. கோவை போன்ற நகரங்களில் இந்த நடைபாதை ஆக்கிரமிப்பு சொல்லி மாளாது. நடைபாதை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம். ஞாயிறு சந்தைகளைப் போல, நடைபாதை சிறு வியாபாரிகளுக்கு நகரின் ஒரு பகுதியை அரசே ஒதுக்கித் தந்தால் அவர்களின் வியாபாரமும் பாதிக்காது; வாகன விபத்துகளும் குறையும்; பாதசாரிகளும் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியும்.

ச. சிவசண்முகம், குளத்துப்பாளையம்.

தடுக்க முடியாது

இன்றைய சூழலில் பெரிய கடைகள்கூட நினைத்த லாபத்தை ஈட்ட முடியாத நிலையில், முன் அனுமதியோ, கடை வாடகையோ, மின்சாரச் செலவோ, பராமரிப்புச் செலவோ இல்லாமல் நடைபாதையை ஆக்கிரமித்துக் கடை வைத்திருப்பவர்கள் இலகுவாக லாபம் ஈட்டுகின்றனர். என்னதான் நீதிமன்ற உத்தரவுகள்மூலம் நடவடிக்கைகள் எடுத்தாலும், அடுத்த நாளே கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தாலும் திடீர் கடைகள் பெருகுவதை எவ்விதத்திலும் தடுக்க முடியாது.

மகிழ்நன், கடலூர்.

நடைபாதை அவசியம்

மக்கள் கூடும் இடங்களில் சிறு வணிகம் செய்வது தவறல்ல; அது மக்களின் தேவையையும் வணிகர்களின் வாழ்வாதாரத்தையும் நிறைவு செய்கிறது. ஆனால், நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுவது ஏற்கத்தக்கதல்ல. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனப் பெருக்கமும் விபத்துகளும் பாதுகாப்பான நடைபாதைகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. எனவே, நடைபாதைகளை விரிவுபடுத்தி, தடையற்ற மக்கள் நடமாட்டத்தையும் சாலைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

சமூகப் பொறுப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் மட்டுமல்லாமல், மீண்டும் ஆக்கிரமிக்கப்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்துக்காக சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு மாற்று இடங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அரசியல் தலையீடுகளுக்கும் பாரபட்சங்களுக்கும் இடமின்றி சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். நடைபாதைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்புமாகும். வாகனங்கள் சாலையில் செல்லட்டும்; மக்கள் நடைபாதையில் பாதுகாப்பாக நடக்கட்டும்; வியாபாரமும் பெருகட்டும்.

ப. மோகனவேல், காஞ்சிபுரம்.

அரசின் கடமை

நடைபாதை என்பது சாலைத் திட்டமிடலில் உள்ளடங்கியதே. அதை ஆக்கிரமிப்பு செய்வது சாலைத் திட்டமிடலின் அடிப்படையையே சிதைப்பதாகும். அரசியல் லாபத்துக்காக அரசியல் பிரமுகர்களின் தலையீடுகள் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். இதுபோன்ற சிலரின் போக்கால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள்தான். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால் அதற்கான மாற்று வழிகளை செய்து தர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சி. இரத்தினசாமி, பொல்லிக்காளிபாளையம்.

பாதசாரிகளின் உரிமை

நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இதற்கு முன்பு பலமுறை எச்சரித்துள்ளன. அரசமைப்புச் சட்டப்படி பாதசாரிகள் பாதுகாப்பான நடைபாதையில் நடக்க வழி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை. இதில் மெத்தனம் காட்டுவது பாதசாரிகளுக்கு அரசு இழைக்கும் அநீதியாகவே கருதப்படும். கடுமையான வாகனப் பெருக்கத்தால் ஏற்கெனவே திணறி வரும் சாலைகளில் பாதசாரிகள் நடக்க முயல்வது மிக ஆபத்தான செயல். ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையெனில் புதிய நடைபாதைகளையும் அமைக்க வேண்டும்.

கே. ராமநாதன், மதுரை.

அகற்றினால் மகிழ்ச்சி

வாகனப் பெருக்கம் ஒருபுறம் மிகுந்த போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதோடு நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்படும் போது நடப்பதற்கான பாதைகளிலும் நெரிசல் ஏற்படுகிறது. பொலிவுறு நகரத் திட்டத்தில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்யும் போது, நடைபாதைக் கடைகள் மற்றும் வாகன நிறுத்தங்களுக்கும் திட்டமிட்டிருக்க வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளுக்குத் தீர்வு காணாதது பெரும் குறையே. இந்தத் தீர்ப்பு மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல பாதைகள் அமைந்தால் மகிழ்ச்சி.

தே.ச. மங்கை, திருநெல்வேலி.

எளிமையான தீர்வு

நடைபாதைகளில் கான்கிரீட் கற்கள் பதிப்பதும் இயற்கையை ஆக்கிரமிப்பதே. மழைநீர் பூமிக்குள் இறங்கும் வகையில் இயற்கை மண் பாதையை விட்டுவைக்க வேண்டும். இந்த பாதையில் 10 அல்லது 15 அடி இடைவெளியிலும் மரங்கள் அல்லது செடிகள் வளர்க்கப்பட வேண்டும். இரண்டு மரங்களுக்கு இடையில் பாதசாரிகளின் நடைக்கு இடையூறு இல்லாத வகையில் சிறு கடைகள் அமைக்க அனுமதிக்கலாம். அவற்றை நடத்துபவர்களே அங்குள்ள மரங்களைப் பராமரித்துப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இயற்கையையும், பாதசாரிகளையும் பாதுகாக்கும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

எஸ். ரவிசங்கர், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.