FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கட்டுரைகள்

ஊழல் என்பது தேச விரோதம்

வழக்கம்போல காலையில் நாளிதழ்களைப் புரட்டியபோது ஒரு விளம்பரம் என் கண்களை அகல விரியச் செய்தது. இன்றைய காலகட்டத்தில் அதன் அவசியம் புரிந்தது.

Updated On : 8 ஆகஸ்ட் 2014, 1:26 am IST
பகிர்:

வழக்கம்போல காலையில் நாளிதழ்களைப் புரட்டியபோது ஒரு விளம்பரம் என் கண்களை அகல விரியச் செய்தது. இன்றைய காலகட்டத்தில் அதன் அவசியம் புரிந்தது.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த ஒருவர், தனது பணிக்காலம் நிறைவடைந்த நிலையில், அந்தத் துணிச்சலான விளம்பரத்தை செய்திருந்தார்.

"பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து எனக்கு தரப்பட்ட மாத ஊதியத்துக்கான உழைப்பை வழங்கியிருக்கிறேன். அரசின் நல்ல வேலைக்காரன் என்ற முறையில் பொது மக்களிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ லஞ்சம், அன்பளிப்பு, வெகுமதி என்ற எந்தவொரு பரிசுப் பொருளையும் வாங்கியதில்லை.

Advertisement

Advertisement

என் பணிக் காலத்தில் நண்பர்கள், விரோதிகள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு பாராமல், 39 ஆண்டுகள் முழுமையாக சேவை செய்து ஓய்வுபெற்றுள்ளேன்.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதேபோல் நேர்மையாக இல்லாவிட்டால் லஞ்சத்தை ஒழிக்க யாராலும் முடியாது.

லஞ்சம் என்பது பொது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு எதிரானது. பண்பாட்டுக்கும், தேச நலனுக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும்' என்ற வாசகத்தோடு அவர் அந்த விளம்பரத்தை நிறைவு செய்துள்ளார்.

ஜனநாயகம் இன்று ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கித் தவிப்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைய அரசியல்வாதி தன்னை கறைப்படுத்திக் கொள்வதோடு, பாமர வாக்காளரின் கரங்களையும் கறைப்படுத்தத் துணிந்துவிட்டதன் விளைவாக, ஒரு நாள் உணவுக்கான தொகையைப் பெற்று 5 ஆண்டுகளுக்கான அதிகாரத்தை அளிக்கும் நிலையை நாம் சந்திக்கிறோம்.

எப்போது ஒருவன் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தேர்தலில் வெற்றி பெறுகிறானோ, அன்றைக்குதான் ஜனநாயகத்தில் ஊழல் ஒழிந்து விட்டதாகக் கருத முடியும் என்று சொல்வதுண்டு. இது கடல் அலை ஓயும் என்று சொல்வதற்கு சமம் என்பதுதான் நிதர்சனம்.

அரசு, மக்களுக்காக இலவசத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தும் சூழலில், அந்தத் திட்டங்கள் இன்றைக்கு மக்களிடம் முழுமையாகச் சென்றடைவது கேள்விக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை, தொழிலாளர் நலத் துறை, காவல் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் கீழ்மட்டத்தில் இருந்து மேல் நிலை வரை லஞ்சம் பரவி உள்ளதை நாம் அனுபவபூர்வமாக உணர முடியும்.

காவல் நிலையம், நீதிமன்றம், வருவாய்த் துறை அலுவலகம் போன்ற இடங்களிலெல்லாம் உள்ளுக்குள் வெறுப்புடனும், தவிப்புடனும் மக்கள் காத்துக் கிடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

அரசு அலுவலகங்களில் கடமையைச் செய்வதற்காக பணத்தை எதிர்பார்த்து கை நீட்டுவோரைக் கண்டு மனம் வெதும்புகிறது. அதன் விளைவுதான், இன்றைக்கு விலை மதிக்க முடியாத வாக்குகளை நாம் ஏன் விலையில்லாமல் அளிக்க வேண்டும் என்ற ஆத்திர உணர்வுக்கு பாமர மக்களைத் தள்ளியுள்ளது.

அப்படி கை நீட்டி வாங்கும் பணத்துக்காக, மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாக்களிக்கும் வரைதான் ஊழல் அரசியல்வாதிக்கு வெற்றி கிட்டும் என்பதும் உண்மை.

அரசு ஊழியராக, அலுவலகங்களில் அமர்ந்திருப்போருடைய பிரச்னை வேறு விதமானது. அரசின் அங்கம் என்ற பெருமை இருந்தும், திறமைக்கும், நேர்மைக்கும் கிடைக்கும் மரியாதையைவிட சிபாரிசு, செல்வாக்கு, பணம் ஆகியவற்றின் மூலம் சிலர் தன்னைவிட உயர்ந்த பதவியில் அமரும் நிலையைக் கண்டு மனம் வெதும்புவோர் பலர்.

இவர்கள் தங்கள் வெறுப்பை தன்னை நாடி வரும் பொது மக்களிடம் காட்டுவது இன்றைய அரசு நிர்வாகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இவற்றையெல்லாம் மீறி, குடும்பப் பிரச்னை, அதிகாரிகளின் நெருக்கடி, உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்காதது போன்றவை தன்னை எவ்விதத்திலும் நிலைகுலையாமல் செய்துகொள்ளும் பக்குவம் பெற்ற சிலர் அரசுப் பணியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவர்கள், தங்களின் சேவையை எதிர்நோக்கி காத்திருக்கும் பொதுமக்களின் முகங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி, அவர்களின் தேவையை நிறைவேற்றும் செயல் அளப்பரியது.

அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு பாராட்டுவதும், அவர்களை எல்லோரும் அறியச் செய்வதும் அரசு இயந்திரத்தின் கடமை. அதன் மூலம் அரசின் திட்டங்கள் அலாவுதீன் அற்புத விளக்காக மிளிரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments