ஊழலுக்கு எதிரான புதிய ஆயுதம்!
இன்றைக்கு சமூகத்தின் அடிமட்டம் வரை பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஊழல், லஞ்சம், அத்துமீறலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு வலிமையான
இன்றைக்கு சமூகத்தின் அடிமட்டம் வரை பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஊழல், லஞ்சம், அத்துமீறலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு வலிமையான ஆயுதமாக சமூக வலைதளமான "வாட்ஸ் அப்' எனப்படும் கட்செவி அஞ்சல் மாறி வருகிறது.
இன்றைய சமூகத்தின் முறைகேடுகளால் பாதிக்கப்படும் இளைய சமுதாயம், இந்த வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக, சாலையோரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி லஞ்சம் கேட்கும் போக்குவரத்துக் காவலர் முதல் சமுதாயத் தொண்டு என்ற பெயரில் பிரபலமாக உலா வருவோரின் மற்றொரு முகம் வரை காணொலிப் பதிவாக (விடியோ), ஒலிப்பதிவாக கட்செவி அஞ்சல் வெளி உலகில் உலா வரச் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்றைக்கு சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் கூகுள், ஆர்குட், முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (டுவிட்டர்) வரிசையில் தற்போது மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக கட்செவி அஞ்சல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தகவல்கள் மட்டுமல்லாது படங்களைப் பகிரும் வசதி, எந்த மொழியிலும் குறுந்தகவலைப் பரிமாறிக் கொள்ளும் வசதி, செல்லிடப்பேசியைப் போல் பேசிக் கொள்ளும் வசதி என பலவகையான அம்சங்கள் இதில் இருப்பதால் இன்றைய இளைஞர் உலகம் மிக எளிதாக ஏற்றுக் கொண்டு அதற்கு அடிமையாக மாறிவிட்டது.
இன்றைக்கு இந்த வசதியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகில் 80 கோடியைக் கடந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் செல்லிடப்பேசி வைத்துள்ள இளைஞர்கள், இளம்பெண்களில் 85 சதவீதத்தினர் கட்செவி அஞ்சலைப் பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
செல்லிடப்பேசியில் இணைய வசதி இருந்தால் போதும், கட்செவி அஞ்சல் மூலம் பயனுள்ள தகவல்கள், சிரிப்புத் துணுக்குகள், நம் கண் முன்னே நடக்கும் விழாக்களின், அவலங்களின் படப் பதிவுகள், காணொலிப் பதிவுகள் என ஒரு சில நொடிகளில் நாம் பிறருக்கு வேகமாக அனுப்ப முடியும் என்ற நிலையை கட்செவி அஞ்சல் ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிற சமூக வலைதளங்களைவிட ஓரளவு பாதுகாப்பானது என்பதால், இதை பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
கட்செவி அஞ்சலில் நமது செல்லிடப்பேசிக்கு அறிமுகம் இல்லாதவர் தகவல் அனுப்பினாலும் அவரது செல்லிடப்பேசி எண் பதிவாகிறது. இதனால், பிற சமூக வலைதளங்களைக் காட்டிலும் சற்று பாதுகாப்பானது என்பதால் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதிலும் சில குறைபாடுகள், ஆபத்துகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டாலும், இன்றைக்கு லஞ்சத்துக்கு எதிரான வலிமையான தொழில்நுட்ப ஆயுதமாக இது மாறி வருவதை மறுக்க முடியாது.
இன்றைக்கு கட்செவி அஞ்சலில் ஒருவர் அதிகபட்சமாக 100 பேரை ஒரு குழுவாக உருவாக்கி அவர்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். ஒருவரே எத்தனைக் குழுக்களையும் உருவாக்கிக் கொண்டு அந்தக் குழுக்களின் ரசனைக்கேற்ப தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும்.
குழுவில் உள்ளவர்கள் அந்தத் தகவலையோ, படத்தையோ, காணொலிப் பதிவையோ மற்றொரு குழுவுக்கோ, தனது நண்பருக்கோ பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் கணினி மூலம் இதர வலைதளங்களுக்கும் அவற்றை எளிதாகப் பகிர முடியும்.
இதனால், நம் பார்வையில் தென்படும் அவலங்களை உடனுக்குடன் படம் பிடித்தோ, காணொலிப் பதிவாகவோ பகிர்ந்து கொள்ள முடிவதோடு, தனிப்பட்ட செல்லிடப்பேசி உரையாடல்களைக்கூட ஒலிப்பதிவு செய்து ஒரு நபரின் சுயரூபத்தை கட்செவி அஞ்சல் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வர முடிகிறது.
இதனால், இதுவரை பொழுதுபோக்கு அம்சமாக பயன்படுத்தப்பட்டு வந்த கட்செவி அஞ்சல், சமூக அவலங்களை வெளி உலகுக்கு கொண்டு வரும் பணியை ஊடகங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனி மனிதனும் செய்யக் கூடிய ஆற்றலை கொடுத்துள்ளது.
இதனால், கட்செவி அஞ்சலில் பரவும் சமூக அவலங்கள், அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளைப் பின்பற்றி பத்திரிகை, ஊடகத் துறையினர் தங்கள் பங்குக்கு அவற்றை வெளிக்கொணர முற்பட்டுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்ப வசதி மூலம் நேர்மையாளர்களையும், உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவர்களையும் ஒன்றும் செய்துவிட முடியாது.
அப்படி வேண்டுமென்றே பதிவுகள் திருத்தப்பட்டு தவறாக பரவச் செய்தால், அதைக் கண்டுபிடித்து இணைய குற்ற வழக்குப் பதிந்து தண்டிப்பதற்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் இடமுள்ளது.
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் லஞ்சத்தை வெறுப்பவர்களாகவே உள்ளனர். இவர்கள் சூழ்நிலை காரணமாக லஞ்சத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை, முறைகேடான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அதைக் காணொலிப் பதிவாகவோ, ஒலிப்பதிவாகவோ செய்து கட்செவி அஞ்சலில் குழுவினருக்கும், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் அனுப்புவதற்குத் தயங்குவதில்லை என்பதை சமீபத்திய சம்பவங்கள் பல சுட்டிக் காட்டுகின்றன.
இந்நிலையில், சமூக அக்கறையுள்ள, லஞ்சத்துக்கு எதிராகப் போராடும் குணமுடையவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இளைஞர் சமுதாயத்துக்கு லஞ்சத்துக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கட்செவி அஞ்சல் மூலம் அமைதி வழியில் போராடும் பயிற்சியையும், சமூக அக்கறையையும் உருவாக்க வேண்டும்.
கட்செவி அஞ்சல் மூலம் ஊழலையும், லஞ்சத்தையும் முடிந்த வரை வெளிஉலகுக்குக் கொண்டு வரும் நிலையில், நம்முடைய சட்டங்களும், அதிகாரங்களும் தவறு செய்வோருக்கு தண்டனை வழங்கத் தவறிவிட்டாலும், கால தாமதம் செய்தாலும், இந்த சமூகத்தின் முன் அவர்கள் குற்றவாளிகளாகத் தலைகுனிந்து நிற்கும் அவல நிலை ஏற்படும்.
அதுவே லஞ்சமும், ஊழலும் வாழையடி வாழையாக அடுத்த தலைமுறைக்குத் தொடருவதை ஓரளவு கட்டுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.