முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

விதைகள் மறப்பது இல்லை

தமிழ்நாட்டையும் மகாராஷ்டிரத்தையும் உலுக்கிய கரும்பு விவசாயிகள் பிரச்னை, இப்போது உத்தரப் பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது

நடுப்பக்கக் கட்டுரைகள்

விதைகள் மறப்பது இல்லை

தமிழ்நாட்டையும் மகாராஷ்டிரத்தையும் உலுக்கிய கரும்பு விவசாயிகள் பிரச்னை, இப்போது உத்தரப் பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

தமிழ்நாட்டையும் மகாராஷ்டிரத்தையும் உலுக்கிய கரும்பு விவசாயிகள் பிரச்னை, இப்போது உத்தரப் பிரதேசத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 மத்தியில் அன்று ஆண்ட காங்கிரஸ் கட்சியும் சரி, இன்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் சரி, கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளவே இல்லை. உத்தரப் பிரதேசத்தில் நடப்பது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான். இருப்பினும் கூட, உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்காண்டு காலமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 23,270 கோடி ரூபாய் இன்னமும் பாக்கி. முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட தொகையும், உரிய காலத்தில் வழங்காமல், பத்து மாதம் தாமதமாகத்தான் வழங்கப்பட்டது.
 மத்திய அரசின் கரும்புச் சர்க்கரை கட்டுப்பாடு உத்தரவு 1966-இன்படி ஒரு விவசாயி, சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வழங்கிய 15-ஆம் நாள் மேற்படி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் 15 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும். இந்த உத்தரவை எந்த ஆலையும் மதிப்பதில்லை. சர்க்கரை உற்பத்தி குறைந்து, கரும்பின் வரத்தும் குறைவாயிருக்கும்போது இந்த உத்தரவுப்படி பணம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், உற்பத்தி அதிகரித்து சர்க்கரை விநியோகம் ஆகாமல் இருப்பும் தேங்கியுள்ள சமயத்தில், சர்க்கரை ஆலைகளால் மேற்படியான உத்தரவைச் செயல்படுத்த முடிவதில்லை. ஏற்றுமதிக்கும் வழி இருக்காது. அனைத்துலகச் சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்து விட்டதால் கரும்பு விவசாயிகளுக்குக் கஷ்டம் வந்துவிட்டது.
 இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அடிப்படையான காரணம், உற்பத்தி அதிகம் என்றும், அப்படி உற்பத்தி அதிகரிக்க முக்கியக் காரணம் கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் புதிய கண்டுபிடிப்பான கோ.0238 விதையின் அறிமுகம் என்றும் கூறப்படுகிறது.
 2012 -ஆம் ஆண்டில் நேர்மாறான நிலை இருந்தது. சர்க்கரைப் பற்றாக்குறையும் அனைத்துலக அங்காடியில் விலை உயர்வும் நிலவியபோது கோவை வீரிய விதை ரகங்கள் வட இந்தியாவுக்குள் பிரவேசித்தன. அவற்றில் கோ.0238 கரும்பைப் பிழியும் போது சாறு அதிகமும் சக்கை மெலிந்தும் காணப்படும். இதன் காரணமாகப் படிப்படியாக சர்க்கரை உற்பத்தி அதிகரித்தது. சர்க்கரை உற்பத்தி எந்த அளவுக்கு அதிகரித்ததோ அந்த அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையும் உயர்ந்தது. அதை வழங்காமல் இருந்துவிட்டு இப்போது குற்றம் எல்லாம் கோ-0238 மீது சுமத்தப்படுகிறது.
 இதற்குப் பதிலடியாக கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத் தலைவர், பக்ஷிராம், "ஒரு விஞ்ஞானியின் பணி நல்ல பொருளை உருவாக்குவது தான், அந்த நல்ல பொருளை நிர்வாகம் செய்ய வேண்டிய பணி அரசின் அங்கமான அமைச்சரக அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமாகும்' என்று கூறியுள்ளார். இந்த பக்ஷிராம்தான் இப்புதிய கரும்பு ரகத்தை வடமாநிலங்களில் அறிமுகம் செய்தவர்.
 இந்தியாவிலேயே அதிகம் கரும்புச் சர்க்கரை உற்பத்தியாகும் மாநிலம் உத்தரப் பிரதேசம். கங்கை நீர் அம்மாநிலத்திற்கு சாதகமான விஷயம். நிலத்தடி நீரின் அவசியம் இல்லை. "தொட்டணைத்து ஊறும் மணற்கேணி' அங்கு நிறைய உண்டு. குறிப்பாக, 2016-17-இல் இருந்து 2017-18-க்குச் செல்லும்போது கரும்பு உற்பத்தி சுமார் 15 கோடி டன்னிலிருந்து 18 கோடி டன் என்ற உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. ஆனால், இந்தச் சாதனை வேதனையாகிவிட்டது. ஒரு குறிப்பிட்ட தேவைக்கு மேல் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்புகளை வாங்கத் தயாராக இல்லை.
 எத்தனால் உற்பத்தி செய்ய முனைந்திருந்தால் இந்த இழிநிலை வந்திருக்குமா?
 மாசில்லா எரிசக்திப் பயன்பாட்டில் எத்தனால் முக்கியப் பங்கு வகிக்கிறது. உயிரி எரிசக்தி தேசியக் கொள்கை டிசம்பர், 2009-இல் உருவானதைத் தொடர்ந்து, கரும்பு உற்பத்தியில் ஐந்து சதவீதம் எத்தனால் உற்பத்தி செய்து பெட்ரோலில் கலந்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 2015-இல் எத்தனால் பெட்ரோல் கலப்பு பத்து சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தச் சிறிய இலக்குகூட எட்டப்படவில்லை.
 இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது பதில் கூறிய மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒட்டு மொத்தக் கரும்பு உற்பத்தியில் சுமார் 3.3 சதவீதம் மட்டுமே எத்தனால் உற்பத்திக்குச் சென்றதாகத் தெரிவித்தார். என்னே பரிதாபம்! பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகளில் 80 முதல் 90 சதவீதம் கரும்பு உற்பத்தி எத்தனாலாக மாற்றப்படும்போது, சர்க்கரை உற்பத்தியில் முதல் நிலை வகிக்கும் இந்தியாவில் 10 சதவீத இலக்கைக் கூட எட்டமுடியவில்லையே! எத்தனால் உற்பத்தியை உயர்த்தியிருந்தால் கரும்பு விவசாயிகளின் துயரத்தைத் துடைத்திருக்கலாமே?
 அது மட்டுமல்ல, பத்து சதவீத எத்தனால் உற்பத்தி இலக்கை நிறைவேற்றியிருந்தால் ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை மீட்டிருக்கலாம். அத்துடன் சுமார் 3 கோடி டன் அளவிலான கார்பன் மாசைக் குறைத்து வானவெளியைத் தூய்மைப்படுத்தியிருக்கலாம். எத்தனால் உற்பத்தி துரித கதியில் அதிகரித்திருந்தால் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை எல்லாமே தரப்பட்டிருக்குமே. ஆகவே, சர்க்கரைக் கரும்பு உற்பத்தியில் தவறு இல்லை. சர்க்கரைக் கொள்கையில் தான் தவறு உள்ளது. இன்று உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு மத்திய }மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இப்போது நாம் இப்படி உற்பத்தி அதிகரித்த வரலாற்றுக்குள் நுழைந்து கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தொடக்கத்தையும், அரிசி, கோதுமையில் பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே பிரிட்டிஷ் இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் பசுமைப் புரட்சி ஏற்பட்டுவிட்ட விவரத்தையும் நினைவில் கொள்வோம். இந்தியாவில் கோதுமை, நெல்லில் பசுமைப் புரட்சி ஏற்படுத்திய டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதனைப் பலரும் அறிவார்கள். ஆனால் கரும்பில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய கரும்பு விஞ்ஞானி டி.எஸ். வெங்கட்ராமனைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 இந்தக் காலத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கு மாநில அளவில், தேசிய அளவில் விருது மழை பொழியும். ஆனால் நாணல் பயிரை ஆய்வு செய்து அதில் செங்கரும்பை ஒட்டி ஆலைக் கரும்பைக் கண்டுபிடித்த டி.எஸ். வெங்கட்ராமனுக்கு 1918- இல் கிடைத்தது ஐந்து ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே. இப்படிப்பட்ட ஆலைக் கரும்பைக் கண்டுபிடிக்க அல்லும் பகலுமாக மூன்றாண்டுக்காலம் உழைத்த உழைப்புக்குப் பலன் கிட்டியது. எனினும், இவர் கண்டுபிடிப்புக்கு உலகளாவிய ஒப்புதல் பெற மேலும் பல ஆண்டுகள் ஆயின. 1928-இல்தான் இவருக்குப் பெயரும் புகழும் வந்தன.
 சென்னை சைதாப்பேட்டையில் முதலில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்ட போது அதன் இயக்குனர் டி.எஸ். வெங்கட்ராமன். முதலில் டாக்டர் பார்பர் என்ற விஞ்ஞானிக்கு உதவியாளராக சேர்ந்தார். பின்னர் இந்த கரும்பு ஆராய்ச்சி நிலையம் சென்னையிலிருந்து கோவைக்கு மாற்றப்பட்டு பார்பரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டி.எஸ். வெங்கட்ராமன் பார்பரின் ஓய்வுக்குப் பிறகு 1919-இல் தலைமைப் பதவியைப் பெற்றார். கோ-205 கரும்பைத் தொடர்ந்து கோ-285, கோ-244, கோ-290, கோ-313, கோ-419 கோ-527 என்று பலவிதமான ஆலைக் கரும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை கியூபாவுக்கும்,மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.
 உலகத்தில் சர்க்கரை உற்பத்தி பெருகியது. டி.எஸ். வெங்கட்ராமனின் சாதனை 1928-இல் இந்தியாவை ஆண்ட இர்வின் பிரபுவின் கவனத்திற்கு வந்தது. கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த இர்வின் பிரபு, கோவை கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை "கரும்பின் மெக்கா' என்று வர்ணித்தார். டி.எஸ். வெங்கட்ராமனுக்கு "ராவ்பததூர்' பட்டம் வழங்கப்பட்டது. டி.எஸ். வெங்கட்ராமனை "கரும்பு மந்திரவாதி' என்றும் வர்ணித்தார் இர்வின் பிரபு. கோதுமை, நெல்லில் பசுமைப்புரட்சியைக் கொணர்ந்த நார்மன் பார்லாக் பெற்றது நோபல் பரிசு. டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றது உலக உணவுப் பரிசு. இப்படிப்பட்ட தகுதியுடைய டி.எஸ். வெங்கட்ராமன் பெற்றது ஒரு "ராவ்பகதூர்' பட்டம் மட்டுமே. அவர் பணி ஓய்வு பெற்றதும் அவரை உலகம் மறந்து விட்டது. அவர் 1950-60-களில் மிக எளிய மனிதராக, காய்கறி சந்தைக்கு வந்து ஒரு துணிப்பையில் காய்கறி வாங்கிச் சென்றார் என்பதைப் பலர் கூறிக் கேட்டுள்ளேன்.
 எனினும், டி.எஸ். வெங்கட்ராமன் தொடங்கி வைத்த கரும்பு ஆராய்ச்சியில் அவருக்குப் பின் வந்த கோவை கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் டி.எஸ். வெங்கட்ராமன் காட்டிய வழியில் தொடர்ந்து நடைபோடுகிறார்கள். இக்கால விஞ்ஞானத் தொழில் நுட்பத் துணையுடன், அவர் கண்டுபிடித்த கோ-208 ஆலைக் கரும்பு வீரிய ரகம் புதிய வடிவில் கோ -0238 ஆகப் புத்துருவம் பெற்று, உற்பத்தியைப் பெருக்கி வருகிறது. இச்செய்தி, மனிதர்கள் மறந்தாலும் விதைகள் மறக்காமல் கோவையையும், டி.எஸ். வெங்கட்ராமனையும், நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
 
 கட்டுரையாளர்:
 இயற்கை விஞ்ஞானி.
 

முழு கட்டுரையைப் படிக்க →