உயர வேண்டும் உயர்கல்வித் தரம்
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் அடிப்படை உயர்கல்வியே.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் அடிப்படை உயர்கல்வியே. நமது நாட்டில் உயர்கல்வியின் நிலைமை தரமானதாக இல்லாதது மட்டுமல்ல, இருக்கும் தரமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதென்பது மிகவும் கவலை அளிக்கக்கூடியதுதான்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் 677 பல்கலைக்கழகங்களும், 37,204 கல்லூரிகளும் இருந்தன. இவை தவிர, அரசு அனுமதியின்றி தபால் மூலம் உயர்கல்வி கற்பிக்கும் நிலையங்கள் 11,443 இருந்தன. இந்த எண்ணிக்கைகள் தற்போது கூடுதலாகியிருக்கலாம். அந்தமான் நிகோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாஃகர் ஹவேலி, டாமன் டையு, லட்சத்தீவுகள் ஆகியவற்றில் ஒரு பல்கலைக்கழகம் கூட கிடையாது.
நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான விஞ்ஞானக் கல்வி, கணினி மற்றும் தொழில்நுட்பக் கல்வியைக் கற்க உயர்கல்வி நிலையங்கள் அவசியமாகின்றன. இவற்றைத் உடனே நிறுவி மாணவர்களை தகுதியுள்ளவர்களாக உருவாக்கிவிட முடியாது. ஏற்கெனவே இயங்கி வரும் உயர்கல்வி நிலையங்களில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய பல கண்டுபிடிப்புகளை உருவாக்கினால் நமது பல்கலைக்கழகங்கள் உலகத் தரத்திற்கு எழுந்து நிற்கும். அது போன்ற வளர்ச்சி உருவாக மத்திய - மாநில அரசுகள், உயர்கல்விக்காக ஒதுக்கும் தொகையை அதிகரிக்க வேண்டும். ஆனால், தற்சமயம் இயங்கி வரும் உயர்கல்வி நிலையங்களே போதும் என்ற மனநிலையில் அவற்றை மேம்படுத்தும் வகையிலான செலவினங்கள் அதிகப்படுத்தப்படவில்லை.
தொழில்துறையிலும், பொருளாதாரத்திலும் நமது நாட்டுடன் போட்டியிட்டு முன்னேறும் பல்வேறு நாடுகளும் இந்த உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சீனா, சிங்கப்பூர், தைவான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்தி, அதிக அளவில் பண ஒதுக்கீடு செய்து வளர்ச்சியடைந்துள்ளன. இந்த நாடுகள், உயர்கல்வி நிலையங்களின் அடிமட்ட வகுப்புகளில் அதிக மாணவர்களைச் சேர்க்கின்றன. உயர் வகுப்புகளில் ஆராய்சிகளை ஊக்குவித்து பிற வளர்ச்சியுற்ற நாடுகளின் உயர்கல்வி நிலையங்களின் தரத்திற்கு தங்கள் நாட்டு உயர்கல்வி நிலையங்களையும் உருவாக்குகின்றன.
அண்மையில் "லண்டன் டைம்ஸ்' பத்திரிகை, உலகின் தரம் வாய்ந்த 200 பல்கலைக்கழகங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் சீனாவில் மூன்று, ஹாங்காங்கில் மூன்று, தென் கொரியாவில் மூன்று, தைவான் நாட்டில் மூன்று மற்றும் இந்தியாவில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. அது, ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம். எந்த ஐ.ஐ.டி. என்பது குறிப்பிடப்படவில்லை. 41-ஆவது இடத்தில் அந்த ஐ.ஐ.டி. உள்ளது. நம் நாட்டின் மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது, பிற நாட்டின் தரமான உயர்கல்வி நிலையங்களுக்கு ஈடானது ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் எனும் தகவல் நமக்கு கவலையளிக்கிறது.
நம் நாட்டின் அரசியல் தலைவர்களும், உயரதிகாரிகளும் உயர்கல்வியின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளார்களா என கேட்கத் தோன்றுகிறது. முற்காலங்களில், ஒரு நாடு வளர்ச்சி அடைந்து பொருளாதார முன்னேற்றம் ஏற்பட சாதாரண தொழிலாளிகளும், உற்பத்தி நிலையங்களுமே போதுமானவையாக இருந்தன. ஆனால், தற்காலத்தில் எல்லா நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தொழிற்சாலைகளில் நவீன உற்பத்தி முறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. எனவே, கல்வியிலும், விஞ்ஞானத்திலும் தேர்ச்சியடைந்த பணியாளர்களும், நவீன இயந்திரங்களால் உருவான தொழிற்சாலைகளும் தேவை. மத்திய அரசு இது போன்ற உயர்நிலைமையை உருவாக்குவோம் என்று பிரகடனப் படுத்தியுள்ளது. ஆனால், அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
உயர்கல்வியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை கொண்ட நாடு இந்தியா. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் அடுத்த நிலையில், உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள நம் நாட்டில் உயர்கல்வியில் ஆங்கிலம் பயிற்சி மொழியாகவும், அதிக அளவில் கல்வியில் ஆராய்ச்சி நடைபெறும் நிலைமையும் உள்ளது. ஆனால், இவை எல்லாமே எண்ணிக்கை சார்ந்த உயர்வுகள். தரம் சார்ந்த உயர்வினை நாம் அடையவில்லை.
நம் நாட்டு இளைஞர்களில் 10 சதவிகிதத்தினர் உயர்கல்வி கற்கும் நிலைமை உள்ளது. ஆனால், வளர்ந்துவிட்ட சில நாடுகளில் 50 சதவீத இளைஞர்களும், சைனாவில் 15 சதவீத இளைஞர்களும் உயர்கல்வி கற்கிறார்கள். மேலும், மேலை நாடுகளில் கல்லூரிகளும், பள்ளிகளும் தரமான கல்வியை மாணவர்களுக்கு போதிப்பதால், உயர்கல்விக்கு வரும் மாணவர்கள் மிக தரமானவர்களாக இருக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் பெரும்பாலான பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு சரியான கல்வி கிடையாது. மனப்பாடம் செய்து பரீட்சைகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி கற்பதும் பிற்காலங்களில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதும் கிடையாது.
நம் நாட்டின் பல மாநிலங்களில், சிறந்த கல்லூரிகள் உருவாகி அவற்றை சிறப்பாக நிர்வகிக்கும் அதிகாரிகளோ நிதி நிலைமையோ கிடையாது. கல்லூரி நிர்வாகத்தில் அரசியல் புகுந்து, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல் பேராசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களை நியமிப்பது வரை ஊழல் புகுந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர், தான் பதவி ஏற்ற உடன் அந்த பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் வேலை செய்யும் முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அழைத்து தனக்கு இவ்வளவு பணம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு கையூட்டு கொடுத்துவிட்டால், அவர்கள் செய்யும் தவறுகளையும் ஊழல் நடவடிக்கைகளையும் அந்த துணைவேந்தர் கண்டு கொள்ளமாட்டாராம். இந்த செய்தி பரவலாகி, லஞ்ச ஒழிப்பு போலீசார் துணைவேந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். அது சமயம், இவர் பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாக செலுத்தி துணைவேந்தர் பதவியை பெறும்போதே, இவர் இந்த லஞ்சப் பணத்தை ஈடு செய்து, அதற்கு மேலும் வசூல் செய்து கொள்ள முடியும் என்ற எண்ணம் இவருக்கு இருந்தது தெரியவந்தது.
மேலை நாடுகளில் உயர்கல்வி கற்கச் செல்லும் நம்மில் பலரையும் அங்கே உள்ள நாணயமான, அறிவு சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் பேராசிரியர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்கள். அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் காலை 8 மணிக்கு வகுப்புகள் ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடியும். அங்கே பணி செய்யும் ஆசிரியர்கள் அமரும் அறைகள் வரிசையாக இருக்கும். ஒருநாள் காலை ஒரு ஆசிரியரை சந்திக்கச் சென்ற நம் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், எல்லா அறைகளிலும் ஆசிரியர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.
அந்த மாணவர் எம்.பி.ஏ. படிக்க அமெரிக்கா செல்லும் முன்னர் தமிழ்நாட்டில் அரசுப்பணியில் இருந்தவர் என்பதால், காலையில் பணிக்கு வரும் ஆசிரியர்கள் கையெழுத்துப் போடும், "வருகைப் பதிவு எங்கே உள்ளது' என அங்குள்ள ஒரு ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அந்த கேள்வியைப் புரிந்து கொள்ளாத ஆசிரியர், ""அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மாணவர், ""எங்கள் நாட்டில் எல்லா அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் தினமும் காலை 9 மணிக்கு பணிக்கு வந்துவிட வேண்டும். அதை உறுதிப்படுத்த "அட்டண்டென்ஸ் ரிஜிஸ்டர் எனப்படும் ஒரு பதிவேடு உண்டு. அதில் பணியாளர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கும். 9 மணிக்கு வந்து கையொப்பமிடாவிட்டால், தாமதம்"எனக் குறிக்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் சொன்ன விவரங்களை புரிந்து கொண்டு மேலும் பல ஆசிரியர்கள் பற்றி விசாரித்த அந்த மாணவர், மற்றொரு ஆசிரியர் பற்றியும் கூறியுள்ளார். அதிக மதிப்பெண்களுடன் உயர்கல்வி பட்டம் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் இருந்த ஒருவர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒக்லஹோமா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேருகிறார். இந்த பணியில் குறைவான சம்பளமே. மாணவர்களுக்கு பாடம் போதிப்பது, ஆராய்ச்சிகளுக்கு மேற்பார்வையாளராக இருப்பது மற்றும் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல கட்டுரைகளை உலகப் புகழ்பெற்ற விஞ்ஞான இதழ்களில் பிரசுரிப்பது ஆகியன இவர் செய்யும் வேலைகள்.
எப்படி குறைந்த சம்பளத்தில் நிறைய பணிகளை இவர் செய்கிறார் என கேட்ட இந்திய மாணவருக்கு, அந்த அமெரிக்க ஆசிரியர் அளித்த பதில்: "எனது வேலையில் எனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி, அதிக சம்பளத்துடன் நான் செய்த முந்தைய வேலையில் எனக்குக் கிடைக்கவில்லையே' என்பதே!
இவர் போன்று சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் அமெரிக்க உயர்கல்வியை, நமது நாட்டு உயர்கல்வியோடு ஒப்பிட முடியாதுதான். ஆனால்
அதே வேளையில் நமது உயர்கல்வியின் தரம் உயர்ந்து நமது மாணவர்கள் பலன் அடைவார்களா என்ற கேள்விக்கும் தற்போது பதில் கூற முடியாது என்பதே உண்மை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.