மனநிலை மாற வேண்டும்
வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகி பொருள்கள் தேக்கம், பங்குச் சந்தைகளில் கடும் சரிவு, அமெரிக்காவில் பொருள்களின் விலையேற்றம் காணப்பட்டது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகக் கடந்த ஆண்டு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வர்த்தகப் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் மீது கணிசமாக வரி விதித்தார். இதனால், உலக நாடுகள் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாயின. வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகி பொருள்கள் தேக்கம், பங்குச் சந்தைகளில் கடும் சரிவு, அமெரிக்காவில் பொருள்களின் விலையேற்றம் காணப்பட்டது.
இது தவிர இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத் தலைமையில் இருந்து கேட்டுக் கொண்டதால்தான் போரை நிறுத்தியதாக இந்தியா உறுதியாகத் தெரிவித்தது.
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியாக, உக்ரைனின் கோரிக்கைகளைக் கேட்காமலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்படி ஸெலென்ஸ்கியை டிரம்ப் மிரட்டினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
Advertisement
உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளை டிரம்ப் மேற்கொண்டார். அதற்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ஆனால், உக்ரைனின் நிலை என்ன, கோரிக்கைகள் என்ன என்பது குறித்துக் கவலைப்படாமல் தான் சொன்னதைக் கேட்க வேண்டும் என மிரட்டினார் டிரம்ப்.
இந்தச் சூழ்நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினால் கூடுதல் வரி என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் டிரம்ப். உலக நாடுகள் தங்களுக்கு எங்கு மலிவாகப் பொருள்கள் கிடைக்கின்றனவோ அங்குதான் வாங்குவார்கள். ஆனால், தான் சொன்னதை அனைவரும் கேட்டாக வேண்டும் என்று "பெரியண்ணன்' மனநிலையில் டிரம்ப் நடந்து கொண்டார். சீனாவும் பதிலுக்கு வரிவிதித்தது.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் உலக நாடுகளுக்கு வரி விதிக்கிறது அமெரிக்கா. ஆனால், ரஷியாவிடம் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்கிறதே அமெரிக்கா; இது குறித்து விசாரிப்பதாக தெரிவித்தார் டிரம்ப்.
இறுதியில் ஒவ்வொரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வரிகள் சிறிது குறைக்கப்பட்டன. அந்த வரிகள் எல்லாவற்றையும் அமெரிக்க நீதிமன்றம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. உடனடியாக கூடுதலாக வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், ஈரானுடனான போர் தொடங்கியது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம், சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸôவில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றபோதும், மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தபோதும் உலகம் எதுவும் செய்ய இயலாமல் தவித்தது.
நெதன்யாகுவின் விருப்பப்படி, ஈரான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. அணுகுண்டு தயாரிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.
ஓரிரு நாளில் எதிர்ப்பே இல்லாமல் ஈரானை வெற்றி பெற்று விடலாம் என அமெரிக்கா நினைத்தது. போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதன்பிறகு, பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
உலகின் மிகப் பெரிய போர்க்கப்பலான அமெரிக்காவின் ஆபிரஹாம் லிங்கனை ஈரான் தாக்கியது. "எதிரிக்கு
உதவுபவர்களும் எதிரிகளே' என்பதுபோல அமெரிக்காவுக்கு உதவும் துபை, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளையும் தாக்கிவருகிறது ஈரான்.
எந்தப் போரின்போதும் பொதுமக்கள் வசிக்குமிடத்தில் சண்டையிட மாட்டார்கள். பாலங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றையும் தாக்க மாட்டார்கள். ஆனால், இவை அனைத்தும் ஈரான் மீதான போரின்போது அப்பட்டமாக மீறப்பட்டன. பள்ளி மீது வீசப்பட்ட குண்டுவீச்சால் 100}க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இது தவிர ஈரானின் வர்த்தகக் கட்டமைப்புகளும் இடிக்கப்பட்டன.
இப்போது ஈரான் திருப்பித் தாக்கியதும் மேற்காசிய நாடுகள் அதிர்ந்துவிட்டன. பாகிஸ்தானில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. முஸ்லிம் நாடுகளைப் பொருத்தவரையில் ஈரான் மட்டுமே
ஜனநாயக நாடாகும். மற்றவற்றில் மன்னராட்சி நடைபெறுகிறது. அதனால், மன்னர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தங்களை வளப்படுத்திக் கொள்கிறது அமெரிக்கா. ஈரானில் நினைத்ததைச் செய்ய முடியவில்லை. இதுதான் டிரம்ப்பின் வருத்தம்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. போரால் ஈரானில் ஏற்பட்ட சேதத்துக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். இனி எப்போதும் போர் தொடுக்கக் கூடாது என ஈரான் நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்க அமெரிக்கா மறுக்கிறது. தான் சொல்வதைக் கேட்காவிட்டால் நரகத்தைக்காட்டுவோம் என மூன்றாம் தரக் குடிமகன் பேசுவது போல டிரம்ப் பேசுகிறார்.
இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி வெளிவருவது எனத் தெரியாமல் அமெரிக்கா தவித்து வருகிறது. அமெரிக்காவிலும் பல்வேறு போராட்டங்கள் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.
போரில் தோல்வி ஏற்பட்டால் அது தனக்கு எதிரான பரப்புரையாக மாறும் என்பதால் டிரம்ப் தயங்கலாம். ஆனால், மக்களின் நலனுக்காக போரை நிறுத்த டிரம்ப் முன்வர வேண்டும்.
தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற மனநிலையை அவர் மாற்றிக் கொண்டு, பிறர் கூறுவதையும் செவிமடுக்க வேண்டும். போரைத் தொடங்கியது அமெரிக்காவாக இருந்தாலும் முடித்து வைப்பது ஈரானாகத்தான் இருக்கும்!