FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெற்றிக்கு வழி

மனமும், எண்ணமும், ஆசையும் மட்டுமே நாம் நினைத்த இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதில்லை. தகுந்த வழியில் செயலாற்றுவதே வெற்றிகளை ஈட்டித் தரும்

22 ஆகஸ்ட் 2026, 6:59 am IST
கோப்புப் படம்
பகிர்:

மனமும், எண்ணமும், ஆசையும் மட்டுமே நாம் நினைத்த இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதில்லை. தகுந்த வழியில் செயலாற்றுவதே வெற்றிகளை ஈட்டித் தரும். ஏதோ காரணத்தால் செயல்படாமல் இருந்து விட்டால் நாம் பின்தங்கி விடுகிறோம். செயலாற்றத் தவறினால் தோல்வியின் வாசலில் கதவைத் தட்டிக் கொண்டிருப்போம்.

வெற்றிக்கான தேவைகளில் நம் செயல்திறன் மிகவும் முக்கியமானது. ஒருவர் உலகத்தின் தலைசிறந்த அறிவைப் பெற்றிருக்கலாம்; பல திறன்களைப் பெற்றிருக்கலாம். இந்த அறிவையும் திறன்களையும் பயன்படுத்தி செயல்களைச் செய்யத் தவறினால் பலன் கிடைப்பதில்லை. நடவடிக்கை எடுக்கப்படாத அறிவு வெறும் மாயையாக மனதளவில் நிலைத்து விடுகிறது. செயல்படுத்தப்படும் அறிவு வல்லமை பெற்ற சக்தியாக மாறுகிறது.

உங்களிடம் நம்பிக்கை இருக்கலாம்; துணிவு இருக்கலாம்; வெற்றிக்கான திட்டமும் இருக்கலாம். ஆனால், நீங்கள் செயலில் ஈடுபடாத வரை வெற்றி எட்டாக் கனியாகவே தொடர்ந்து விடும். செயல்திறன் கொண்டவர்கள் எப்பாடுபட்டாவது தங்கள் இலக்கை அடைந்து விடுவர். ஆயிரம் நல்லெண்ணங்களைவிட ஒரு நல்ல செயல் சிறந்தது. இது செயலின் வல்லமையை நமக்குத் தெளிவுற விளக்குகிறது.

Advertisement

Advertisement

திறமை உடையவர்கள் எல்லாம் வெற்றிகளைக் குவிப்பதில்லை; கற்றவர்கள் எல்லாம் பெரும் சாதனைகள் நிகழ்த்துவதில்லை; பணக்காரர்கள் எல்லாம் செயல் வல்லுநர்களாக இருப்பதில்லை. தீர்க்கமாக, சரியான பாதையில், திட்டம் வகுத்து, முனைப்புடனும் உறுதியுடனும் செயலாற்றுகிறவர்களே வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்கின்றனர்.

ஆழ்ந்த அறிவுடன், தெளிவான திட்டத்துடன், திடமான அர்ப்பணிப்புடன், சரியான முறையில் செயல்களைச் செய்யும்போது அந்தச் செயல்கள் வல்லமை பெற்றவை ஆகின்றன. இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். அதற்குத் தேவையான திறன்கள், வசதிகள், வளங்கள், பதவிகள், பொறுப்புகள், உறவுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பெறவும் விரும்புகின்றனர்.

விருப்பம் அதுவாக இருந்தாலும்கூட அனைவரும் தாங்கள் விரும்பியவற்றைப் பெற்று மகிழ்வது இல்லை. ஏராளமான ஆசைகள் கனவுகளாகவே நீடித்து மறைந்தும் விடுகின்றன. வாழ்வில் விரும்பியவற்றைப் பெற்றுத்தர ஒரே வழி அதற்காக உழைப்பது} செயல்படுவது. தகுந்த முறையில் செயல்படத் தவறும்போது எதிர்பார்த்த ஆசைகள் நனவாவது இல்லை. எனவே, நாம் நம் செயல்திறன் குறித்தும், செய்யும் முறை குறித்தும் அதிக அக்கறையைக் காட்ட வேண்டியது முக்கியமாகிறது.

வெற்றியின் பயணத்தில் செயலின் முக்கியத்துவம் குறித்து அதிகமாக நாம் சிந்திப்பதில்லை. தன்னம்பிக்கை கொள்வது, திட்டம் வகுப்பது, கடினமாக உழைப்பது, விடாமுயற்சி கொள்வது ஆகிய பண்புகளே வெற்றிக்கு முக்கியம் என்ற தோற்றம் தரப்படுகிறது. இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தும் செயலைத் தொடங்கவில்லை என்றால் வெற்றி கிடைப்பதில்லை. ஆயிரம் கி.மீ. பயணிக்க வேண்டுமென்றாலும் அதன் ஆரம்பம் நாம் எடுத்து வைக்கும் முதல் படி. ஒரு செயலின் ஆரம்பம் இன்னும் பல செயல்கள் தொடரக் காரணமாக மாறுகிறது. செயல்களைச் செய்ய செய்ய வெற்றியும் அருகில் வரத் தொடங்குகிறது.

காலையில் ஐந்து மணிக்கு எழ வேண்டும் என்று தீர்மானிப்பது என்பது வேறு; ஐந்து மணியானதும் எழுவது என்பது வேறு; தீர்மானம் செய்ததுபோல செயல்படாதபோது அந்தத் தீர்மானம் தோல்வியில் முடிவுறுகிறது.

உடல் திறனை மேம்படுத்துவதை இலக்கு என்று வைத்துக் கொள்வோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற தகவல்களைப் பல புத்தகங்களில் படிக்கலாம். தினமும் என்ன உணவு உண்ணுவது?, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்வது?, என்னென்ன பழக்கங்களை விட்டு விடுவது? என்பதை எல்லாம் முடிவு செய்து திட்டங்கள் வகுக்கலாம். அவை செயலாக மாறாதபோது, உடல்திறனை மேம்படுத்தும் எண்ணம் மனதளவிலேயே நின்று விடுகிறது. எனவே, எல்லா வெற்றிகளையும் ஈடேற வைப்பது நம் செயல்களே.

பொதுவாக மனம் எளிதான செயல்களைச் செய்வதையே விரும்புகிறது. தோல்வி ஏற்படக் கூடும் என்ற நிலையைத் தவிர்க்கவும் ஆசைப்படுகிறது. பழக்கம் ஏற்படுத்திய பாதையிலேயே பயணிக்க விரும்புகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணையிடும். இதனாலேயே பலர் கடினமான செயல்களைச் செய்வதில்லை. சங்கடங்கள் ஏற்படக் கூடிய செயல்களைத் தவிர்க்கவே பழக்கத்துக்கு அப்பாற்பட்ட செயல்களை முயற்சி செய்வதில்லை.

வெற்றி என்னும் கோபுரத்தின் உயரங்களை எட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் இதுவே காரணம். கடினமான செயல்களைச் செய்வதன் மூலமும், நம் எல்லைகளைக் கடந்து இக்கட்டுக்களை எதிர்கொள்வதன் மூலமும், புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலமும் அரிய வெற்றிகள் நம் காலடிகளை எட்டும்.

செயல்களைச் செய்ய முனைப்புடன் முற்படும்போது அதற்குத் தேவையான அறிவையும் திறனையும் வளர்க்கிறோம். இதன் மூலம் நாம் இருக்கும் நிலையைவிட வளர்ச்சி அடைகிறோம். கடினமான செயல்களை எல்லோரும் செய்ய முற்படாத காரணத்தால் அந்தச் செயல்களை நாம் செய்யத் தொடங்கும்போது மற்றவர்களின் மத்தியில் நாம் சிறந்தவர்கள் ஆகிறோம்.

தனிப்பட்ட வளர்ச்சி செயல்களைச் செய்வதாலேயே, குறிப்பாக கடினமான செயல்களைச் செய்வதாலேயே ஏற்படுகிறது. வெற்றிகளை எட்ட காரியங்களைச் செய்து முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. காரியங்களைச் செய்து முடிக்கக் கடின உழைப்பு, விடாமுயற்சி தேவைப் படலாம். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை சிறப்பு செயல்களைச் செய்து முடிப்பதே. பேசுவதுடன் விட்டு விடாதீர்கள்; செய்து காட்டுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments