FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரபஞ்சத்தை அறிய புதிய சாளரம்

பிரபஞ்சம் எதனால் உருவானது?, அது எவ்வாறு வளர்ந்தது?, வேறு உலகங்களில் உயிர்கள் உள்ளனவா?

25 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
பால்வெளி அண்டம் - பிரதிப் படம்
பகிர்:

பா. ஸ்ரீகுமார்

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய புதிர்களான இருண்ட ஆற்றல், இருண்ட பொருள், புறக்கோள்கள் மற்றும் விண்மீன் திரள்களின் பரிணாமம் ஆகியவற்றை ஆராய்வதற்காக நாசா உருவாக்கியுள்ள அடுத்த தலைமுறை விண்வெளி ஆய்வகமே 'நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி'. 'ஹப்பிளின் தாய்' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வானியலாளர் நான்சி கிரேஸ் ரோமனின் நினைவாக இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

ரோமன் ஓர் அகச்சிவப்பு விண்வெளித் தொலைநோக்கி. இதன் முதன்மைக் கண்ணாடி 2.4 மீட்டர் விட்டம் கொண்டது; இது ஹப்பிளின் கண்ணாடி அளவுக்குச் சமமானது. ஆனால், அதன் அகன்ற பார்வைப் புலம் ஹப்பிளைவிட 100 முதல் 200 மடங்கு அதிகம். ஹப்பிள் ஒரு சிறிய ஜன்னல் வழியாகப் பார்ப்பது போன்றது என்றால், ரோமன் ஒரு முழு நகரத்தையே ஒரே பார்வையில் காண்பது போன்றது. இதனால், மிகக் குறுகிய காலத்தில் மிகப் பரந்த வானப் பகுதியை ஆய்வு செய்ய முடியும். ஹப்பிளைவிட சுமார் 1,000 மடங்கு வேகமாக வானத்தை ஆய்வு செய்யும் திறன் இதற்கு உள்ளது.

Advertisement

Advertisement

ரோமன் தொலைநோக்கி வரும் ஆக.30 அன்று ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுவதற்குத் தயாராக உள்ளது. விண்கலத்தின் முக்கிய கட்டமைப்புகள் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இணைக்கப்பட்டு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ரோமன், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள சூரியன் பூமி லாக்ராஞ்ச் புள்ளி-2 (எல்-2) பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் செயல்படும். சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகளின் சமநிலை காரணமாக இந்தப் பகுதி விண்கலத்துக்குச் சாதகமானது. பூமியின் வெப்பம் மற்றும் ஒளியிலிருந்து தொலைவில் இருப்பதால் அகச்சிவப்பு ஆய்வுகளுக்கும் இது ஏற்ற இடமாகும். இதே எல்-2 பகுதியில்தான் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியும் செயல்பட்டு வருகிறது.

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகமடைந்து வருவதற்குக் காரணமாகக் கருதப்படும் மர்மமான சக்தியே இருண்ட ஆற்றல். 1998-ஆம் ஆண்டு நீண்ட தொலைவு சூப்பர்நோவாக்களை ஆய்வு செய்தபோது பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகமடைவது கண்டறியப்பட்டது. ரோமன், பேரியான் ஒலி அலைவுகள், நீண்ட தொலைவு சூப்பர்நோவாக்கள் மற்றும் பலவீன ஈர்ப்பு வளைவு போன்ற முறைகளைப் பயன்படுத்தி இருண்ட ஆற்றலின் இயல்பை ஆராயும்.

ஒளியை வெளியிடவோ, உறிஞ்சவோ, பிரதிபலிக்கவோ செய்யாத இந்தக் கண்ணுக்குப் புலப்படாத பொருளின் இருப்பை அதன் ஈர்ப்பு விசைமூலம் அறிகிறோம். விண்மீன் திரள்கள் மற்றும் அவற்றிலிருந்து வரும் ஒளியில் ஏற்படும் ஈர்ப்பு வளைவை ஆய்வு செய்வதன்மூலம் இருண்ட பொருளின் பரவலை ரோமன் வரைபடமாக்கும்.

நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களே புறக்கோள்கள். ரோமன், ஈர்ப்பு நுண்வில்லை முறையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான புதிய புறக்கோள்களைக் கண்டறிய உதவும். குறிப்பாக, நட்சத்திரங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள கோள்கள் மற்றும் தனியாக விண்வெளியில் மிதக்கும் கோள்களைக் கண்டறிவதில் இது முக்கியப் பங்கு வகிக்கும். இதன் மூலம் பூமி போன்ற உலகங்கள் எவ்வளவு பொதுவானவை என்ற கேள்விக்கும் விடை கிடைக்கலாம்.

கோடிக்கணக்கான விண்மீன் திரள்களைப் படம்பிடித்து, பெருவெடிப்புக்குப் பிறகு அவை எவ்வாறு உருவாகி வளர்ந்தன? என்பதை அறிய ரோமன் உதவும். இதன்மூலம் பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண வரைபடத்தை உருவாக்க முடியும்.

அகன்ற புலக் கருவி ரோமனின் முதன்மை அறிவியல் கேமரா. சுமார் 300 மெகாபிக்சல் அகச்சிவப்பு உணரிகளைக் கொண்ட இது மிகப் பரந்த வானப்பகுதியை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யும்.

கரோனாகிராஃப் கருவி, நட்சத்திரங்களின் அதிகப்படியான ஒளியைத் தடுத்து, அவற்றைச் சுற்றியுள்ள புறக்கோள்களை நேரடியாகப் படம் பிடிக்கும் தொழில்நுட்பத்தைச் சோதிக்கும். எதிர்காலத்தில் பூமியைப் போன்ற கோள்களை நேரடியாகக் கண்டறிவதற்கான புதிய வழிகளை இது உருவாக்கலாம்.

1925-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாஷ்வில்லில் பிறந்த நான்சி கிரேஸ் ரோமன், நாசாவின் முதல் பெண் நிர்வாக அதிகாரியும், வானியல் பிரிவின் முதல் தலைவருமாவார். விண்வெளியில் இருந்து பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளின் அவசியத்தை வலியுறுத்திய அவரது முயற்சிகள், பின்னர் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி உருவாக வழிவகுத்தன.

ஓஏஓ-2, ஹப்பிள், சந்திரா, ஸ்பிட்சர், கெப்லர், ஜேம்ஸ் வெப் எனத் தொடரும் விண்வெளித் தொலைநோக்கிகளின் வரிசையில் ரோமன் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைய உள்ளது. 2030-களில் பிரபஞ்சத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தையே மாற்றக்கூடிய ஒரு புதிய சாளரமாக ரோமன் திகழலாம்.

அதன் ஆய்வுகள், பிரபஞ்சம் எதனால் உருவானது?, அது எவ்வாறு வளர்ந்தது?, வேறு உலகங்களில் உயிர்கள் உள்ளனவா? போன்ற மனிதகுலத்தின் அடிப்படைக் கேள்விகளுக்குப் புதிய விடைகளை அளிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments