உடல் நலன் காக்கும் குடல் நலன்
நம் உடலில் இரண்டாவது மூளையாக கருதப்படுவது ஜீரண மண்டலம்தான். அதனால்தான் குடல் அசெளகரியங்கள் ஏற்பட்டால் மனநலன் குன்றுவது பலருக்கும் இயல்பான ஒன்று.
நம் உடலில் இரண்டாவது மூளையாக கருதப்படுவது ஜீரண மண்டலம்தான். அதனால்தான் குடல் அசெளகரியங்கள் ஏற்பட்டால் மனநலன் குன்றுவது பலருக்கும் இயல்பான ஒன்று. உடல்நலன் குடல் நலத்தைப் பொருத்தே அமைவதாக இன்றைய நவீன அறிவியல் குறிப்பிடுகிறது.
"எல்லா நோய்களும் குடலில் இருந்தே தொடக்கமாகிறது' என்கிறார் கிரேக்க தத்துவஞானியும், நவீன மருத்துவத்தின் தந்தையுமான ஹிப்போகிரேட்ஸ். அதேபோல், பாரம்பரிய சித்த மருத்துவத்தில் "குடல் தன்னில் சீதமலாது சுரம் வராது' என்கிறார் தேரன் சித்தர். அதாவது, குடலில் ஏற்படும் மாறுபட்டால் தான் "சுரம்' முதலிய பல்வேறு உடல் உபாதைகள் வருவதாக விவரிக்கிறது.
இன்றைய நவீன வாழ்வியலில் துரித உணவு கலாசாரத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது குடல் நலமே. குடல் நலப் பாதிப்பானது வயிறு பொருமல், அடிக்கடி புளியேப்பம், அஜீரணம், மந்தம், பசியின்மை, மலச்சிக்கல், உடல் சோர்வு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்குக் காரணமாகிறது. இதற்காக மருந்து, மாத்திரைகளை நாடுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக, இந்திய சந்தையில் நிகழும்
Advertisement
Advertisement
"ஆன்டாசிட்' எனும் அமில எதிர்ப்பு மருந்து வணிகம் குடல் ஆரோக்கியத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலும், நொறுக்குத்தீனி போன்ற அதிபதப்படுத்தப்பட்ட பொருள்களில் சேர்க்கப்படும் வேதி பதனப்பொருள்கள் பலவும் குறிவைப்பது குடல் ஆரோக்கியத்தைத்தான். இதனால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமும் பாதிக்கக்கூடும். துரித உணவுகளால், குடலில் தடுப்பு அரணாகச் செயல்படும் சளிச்சவ்வு பாதிக்கப்படுவது பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கும் என்கின்றன ஆய்வுகள்.
புளிக்க வைத்த மாவில் செய்யப்படும் உணவுப் பொருள்களும், புளித்த தயிரும், மோரும், நஞ்சில்லா உணவும், வேதிப்பொருள் இல்லாத ஊறுகாயும் இதற்கு எளிய உதாரணங்கள். மேலும் நார்ச்சத்துள்ள பழங்களும், காய்கறிகளும், கீரைகளும் குடல் நலனுக்கு பலம்.
நமது பாரம்பரியம் கூறும் குடல் நலன் பேணும் உணவுகளையே இன்றைய நவீன அறிவியல் ப்ரீ-பையோட்டிக், ப்ரோ- பையோட்டிக் உணவுகள் என்று பட்டியலிடுவது சிறப்புமிக்கது. ப்ரீ-பயாடிக் உணவுகள் நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகச் செயல்பட்டு, நுண்ணுயிரிகள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
காலையில் மோர் சேர்த்த பழைய கஞ்சியும், அதிகம் சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காத, பதப்படுத்தாத, இயற்கை உணவுகளையும், பழங்களையும் உட்கொண்டு வாழ்ந்த நம் முன்னோர் குடல் நலத்தில் கூடுதல் அக்கறை காட்டியது தனிச் சிறப்பு.
"மண் பரவு கிழங்குகளில் கருணை இன்றி புசிவோம்' என்று தினசரி உணவில் கருணைக்கிழங்கை எடுத்துக்கொள்ள சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.
கருணைக்கிழங்கில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தானது "ப்ரீ-பையோட்டிக்' போல செயல்பட்டு குடல் நுண்ணுயிரிகளுக்கு ஊட்டம் தந்து பெருக்க வல்லது.
"மூத்த தயிர் உண்போம்' என்கிறது தேரன் சித்தரின் பிணி அணுகா விதி. அதாவது, நோய்களை வரவொட்டாமல் தடுக்க சித்த மருத்துவம் கூறும் அறிவுரைகளில் இதுவும் இன்று. புளித்த தயிரை அன்றாட உணவில் சேர்ப்பது குடலில் வாழும் கோடிக்கணக்கான நுண்கிருமிகளுக்கு நன்மை பயப்பதாக உள்ளது. இன்றைய நவீன அறிவியலும் இதை ஒப்புக்கொள்வது சிறப்பு.
இந்தோனேசியாவின் "டெம்பே', சீனாவின் "கொம்புசா', மேற்கத்திய ஆசியாவின் "கெபிர்', கொரியாவின் "கிம்சி', ஜெர்மனியின் "சார்க்ரட்' ஆகிய புளிக்க வைத்த பாரம்பரிய உணவுகள், "ப்ரோ-பையோட்டிக்' உணவுகள் ஆகும். நாம் தயிரை அதிகம் பயன்படுத்துவதைப் போல பல்வேறு நாடுகள் பல்வேறு புளிக்க வைத்த உணவுகளை குடல் நலன் காக்க பயன்படுத்துவது பாரம்பரியத்தின் சிறப்பு.
சித்த மருத்துவத்தில் ஜீரண மண்டல உபாதைகளுக்காக கூறப்பட்டுள்ள "தயிர்ச்சுண்டி சூரணம்' குடல் நலத்தைக் காக்கும் இயற்கையின் பரிசு. தயிரை காய வைத்து செய்யப்படும் தயிர்ச்சுண்டி சூரணம் "ப்ரோ-பையோட்டிக்' போல செயல்பட்டு குடல் நலன் காக்கக் கூடியதாக உள்ளது.
நாம் அன்றாட உணவில் சேர்க்கும் வெங்காயம், பூண்டு, வாழைப்பழம் முதலியனவும் குடல் கிருமிகளுக்கு ஊட்டம் அளிக்கும் "ப்ரீ-பையோட்டிக்' உணவுப்பொருள்களாக உள்ளன. புளிக்க வைத்த தயிருடன் இயற்கையில் கிடைக்கும் தேன் மற்றும் நார்ச்சத்துமிக்க "சியா விதைகள்' அல்லது "சப்ஜா விதைகள்' சேர்த்து உருவாக்கப்படும் உணவுப்பொருள் சின்-பையோட்டிக் உணவுக்கு உதாரணமாக உள்ளது. நம்ம ஊரில் பிரசித்தி பெற்ற "லஸ்ஸி' வகை உணவும் சின்-பையோட்டிக் உணவுக்கு எளிய உதாரணம்.
துரித உணவு முறைகளால் குடலில் வாழும் நுண்ணுரியிகள் சமநிலை பாதிப்படைவது "டிஸ்பயோசிஸ்' எனப்படுகிறது. இந்த சமநிலை பாதிப்பால் வளர்சிதை மாற்றக் கழிவுகள் ரத்தத்துடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டு பல்வேறு நோய்நிலைகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், குடல் புண் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனச்சோர்வு, பதற்றம், ஆட்டிசம், பார்கின்சன்ஸ், அல்சைமர் (மறதி நோய்) போன்ற நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்கும் குடல் நுண்ணுயிரிகள் சமநிலை பாதிக்கப்படுவதில் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குடல் நலனைப் பாதுகாப்பது மன நலனுக்கும், உடல் நலனுக்கும் அடிப்படை என்பதை அறிந்திருந்த நம் முன்னோர், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்ள வலியுறுத்தியது சிறப்புமிக்கது. நமது பாரம்பரிய உணவு முறையும், மருத்துவ முறைகளும் இன்றைய நவீன அறிவியலுக்கு முன்னோடி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.